கடலூர் ஆனந்தன் மரணத்திற்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

22

கடலூர் இளைஞர் ஆனந்தன் மரணத்திற்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும். சொந்த இனத்திற்குள்ளே பகை வளர்த்து வீழ்ந்த வரலாற்றுப் பெருந்தவறைத் தமிழர்கள் இனி ஒருபோதும் செய்துவிடக் கூடாது
– சீமான் வலியுறுத்தல்

கடலூரில் ஆனந்தன் எனும் இளைஞரின் மரணம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடலூர் மாவட்டம், திருமுட்டம் வட்டம், சாத்தாவட்டம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஆனந்தன் அவர்களின் மரணச் செய்தி பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர்களது குடும்பத்துயரில் முழுமையாகப் பங்கெடுக்கிறேன். அண்மைக்காலமாக உயிரிழப்புகள் யாவும் மிகச் சர்வச் சாதாரணமாய் அரங்கேறி வருவது இச்சமூகத்தின் எதிர்காலம் குறித்த பேரச்சத்தைத் தருகிறது.
மிகவும் பின்தங்கிய பொருளாதாரப் பின்புலத்தைக் கொண்ட ஆனந்தன் தனது குடும்பத்தின் வறுமையைப் போக்கவும், தனது தங்கையின் திருமணத்திற்காகவும் வெளிநாடு செல்லத் திட்டமிட்டிருந்திருக்கிறார். ஆனந்தனையே தனது குடும்பத்தின் குலவிளக்காக நம்பிக் கொண்டிருந்த அவரது பெற்றோரும் தங்களது பொருளாதார விடுதலைக்கெனத் தங்களது மகனையே பெரிதும் நம்பி நின்றிருக்கிறார்கள். அவர்கள் இன்றைக்கு ஆனந்தனின் இழப்பால் திசையறியாது திகைத்து நிற்கிறார்கள். அவர்களுக்கு எதனைச் சொல்லி ஆற்றுப்படுத்தி ஆறுதலைத் தருவதெனத் தெரியவில்லை. கடந்த 26-11-17 அன்று மாலை சாத்தாவட்டம் பேருந்து நிறுத்தம் அருகே நின்றுகொண்டிருந்த ஆனந்தனை அங்கு வந்த சிலர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தியாக அவர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். உடல் முழுவதும் நெருப்புப்பரவி அலறித்துடித்த ஆனந்தனின் சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமத்திருக்கின்றனர். 90 விழுக்காடு காயங்கள் அவரது உடலை ஆட்கொண்டதால் ஆனந்தன் உயிரிழந்திருக்கிறார். பெண்களைக் கேலிசெய்தவர்களையும், மணல்கடத்தலில் ஈடுபட்டவர்களையும் தட்டிக்கேட்டதாலேயே தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாக சிலரது பெயர்களை ஆனந்தன் மரணத்திற்கு முன்பாகக் கூறியிருக்கிறார். இச்சம்பவமானது அப்பகுதி மக்களுக்குப் பாதுகாப்பின்மையையும், பயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களது அச்சத்தைப் போக்கி பாதுகாப்பினை உத்திரவாதப்படுத்த வேண்டியது அரசின் தலையாயக் கடமையாகும். எதன்பொருட்டும் உயிரிழப்புகளை ஏற்க முடியாது.
தமிழ்த்தேசிய இனமானது நாற்புறமும் சிக்கல்களால் சூழப்பட்டுச் சிக்கித் தவிக்கிற இவ்வேளையில் தமிழர்களுக்கிடையே இன உணர்வும், ஓர்மையும் மிக அவசியப்படுகிறது. உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தங்களது பெரும் நம்பிக்கையாகத் தாயகத் தமிழகத்தையே நம்பி நிற்கிறார்கள். இந்நிலத்தில் தமிழர்களிடம் நிகழும் ஓர்மையும், எழுச்சியுமே உலகத்தமிழர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிற காரணியாய் அமையும். சொந்த நிலத்திலே அதிகாரமற்ற அடிமைகளாக இருக்கிற தமிழர்களுக்கு ஓர்மையொன்றே புத்தெழுச்சியையும், வலிமையையும் தந்து வளப்படுத்தும். அவர்களை அதிகாரத்திற்கு ஏற்றி உயர்த்தும். ஆகவே, சொந்த இனத்திற்குள்ளே பகைமைப் பாராட்டி வீழ்ந்த வரலாற்றுப் பெருந்தவறைத் தமிழர்கள் இனி ஒருபோதும் செய்துவிடக் கூடாது. சொந்த இனங்களுக்குள்ளே பிளந்து பிரிந்து சண்டையிட்டு நாம் சிந்திய இரத்தத்தினைக் குடித்தே நம்மை வந்தவரும் போனவரும் இதுவரை இம்மண்ணை ஆண்டிருக்கிறார்கள். நம்மை அடிமைப்படுத்தி வீழ்த்தியிருக்கிறார்கள். உட்பகையினாலே நம்மினம் வீழ்த்தப்பட்டு அழிவின் விளிம்பில் நிற்கிறது. ஆகவே, அதனை உணர்ந்து பகைமை மறந்து இன உணர்வோடு இணைந்து நிற்க வேண்டிய தருணமிது. அதுவே இழந்தவற்றையெல்லாம் மீளப்பெற்று ஆள வழிவகுக்கும். நமக்குள் எழும் சாதி, மத மோதல்களை அடிப்படையாகக் கொண்டு நம்மை அந்நியர் அடிமைப்படுத்தி ஆளுவதை இனி ஒருபோதும் நாம் அனுமதிக்கக்கூடாது. தமிழின ஓர்மையைச் சிதைக்கும்வண்ணம் நடந்தேறிய இச்சம்பவத்தினை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆனந்தனின் மரணம் தொடர்பாக முழுமையான நீதிவிசாரணை மேற்கொள்ளப்பட்டு அதற்குக் காரணமானவர்கள் யாவரும் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டு அவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும், ஆனந்தனின் குடும்பத்திற்குத் தமிழக அரசு 25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.