இராமநாதபுரம் மாவட்டத்தில் போடப்பட்டிருக்கிற 144 தடையுத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் : சீமான் வலியுறுத்தல்

90

இராமநாதபுரம் மாவட்டத்தில் போடப்பட்டிருக்கிற 144 தடையுத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் : சீமான் வலியுறுத்தல்
இராமநாதபுரத்தில் அமலிலுள்ள 144 தடையுத்தரவை விலக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 12-10-2017 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சமத்துவச் சமுதாயம் அமைக்க அரும்பாடாற்றி உழைத்திட்ட தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம் செப்டம்பர் 11ஆம் தேதியன்றும், நாட்டின் விடுதலைக்காகத் தன் வாழ்நாட்களின் பெரும்பகுதியைச் சிறையில் கழித்த பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூசை நிகழ்வு அக்டோபர் 28 முதல் 30ஆம் தேதிவரை பசும்பொன்னிலும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ்விரு நிகழ்வுகளையும் கடைப்பிடிக்க முடியாத வகையில் ஆண்டுதோறும் இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியதாகும். இத்தடையானது தமிழ்ச்சமூகத்தின் தன்னிகரில்லாத் தலைவர்களான இருபெரும் தலைவர்களின் புகழையும், பெருமையையும் வெளியுலகுக்குத் தெரியாவண்ணம் இருட்டடிப்பு செய்கிற கொடுஞ்செயலாகும். இதனைப் போலவே, ஆகத்து, செப்டம்பர் மாதங்களில் விடுதலைப்போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளையும், மாவீரன் பூலித்தேவன் நினைவு நாளையும் அனுசரிக்க முடியாது 15 நாட்களுக்கு நெல்லை மாவட்டத்தில் 144 தடையுத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இவையாவும் தாய்நிலத்தின் விடுதலைக்காய் சிறையிலும், களத்திலும் இரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி, உயிர்நீத்த அரும்பெரும் தலைவர்களின் தியாகத்தைச் சிறுமைப்படுத்துகிற படுபாதகச் செயலாகும்.
இம்மானுவேல் சேகரனார் நினைவு நாளுக்கும், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெருவிழாவுக்கும் எதற்கு 144 தடை உத்தரவு? அங்கு நினைவேந்தலை அனுசரிக்க வருபவர்கள் கலவரம் செய்கிற நோக்கத்தோடு பயங்கர ஆயுதங்களோடா வருகிறார்கள்? பிறகு, ஏன் அவ்விரு நாட்களையும் பரப்பரப்புக்குரிய நாட்களாக வைத்திருக்க வேண்டும்? மக்களின் இயல்பு வாழ்க்கையைக் குலைத்து தேவையற்ற பதற்றத்திற்கும், அச்சத்திற்கும் ஏன் அவர்களை உள்ளாக்க வேண்டும்? இம்மானுவேல் சேகரனார் நினைவு நாளையும், தேவர் ஜெயந்தியையும் பொதுமக்களே அனுசரிக்க விரும்புகிறபோது அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு அளித்து நிகழ்வை நெறிப்படுத்துவதுதானே காவல்துறையின் கடமை? அதனைவிடுத்து, பொத்தாம் பொதுவாய் 144 தடையுத்தரவை பிறப்பித்துப் பொதுமக்கள் பங்கேற்பதற்கு இடையூறு செய்வது எந்த வகையில் ஏற்புடையது? சாதியக் கலவரங்கள் ஏற்படும் என்பதையே காரணமாகச் சொல்லி தடைவிதிக்கிற ஆட்சியாளர்கள் எத்தனை ஆண்டுகளுக்கு இதனையே செய்து கொண்டிருக்கப் போகிறார்கள்? தடையுத்தரவே இரு சாதியச் சமூகங்களுக்கிடையே சமத்துவத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்தி விடுமா? சலசலப்புக்கும், சச்சரவுக்கும் இடங்கொடாவண்ணம் நிகழ்வை சிறப்புற நடத்துவதற்கு ஆக்கப்பூர்வ வழிமுறைகள் ஆயிரம் இருக்க அவையாவற்றையும் செயல்படுத்தாது விட்டுவிட்டு, 144 தடையுத்தரவு பிறப்பித்து நிகழ்வை ஒட்டுமொத்தமாய்க் குலைப்பதை ஒருநாளும் ஏற்க முடியாது. மேலும் தேவர் ஜெயந்திக்கு வரும் மக்கள் எவரும் வாடகை வாகனங்களில் வரக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்திருப்பதும், வாடகைக்கு வாகனங்கள் கொடுக்கக்கூடாது என்று உரிமையாளர்களுக்கு உத்தரவு வழங்குவதும் அப்பெருமகனாரை வழிபட வரும் மக்களை அச்சுறுத்தும் அவமானப்படுத்தும் நடவடிக்கையாகும்.
தமிழ் இளந்தலைமுறை பிள்ளைகள் சாதி, மத உணர்வினைக் கடந்து தமிழர் என்ற பெருமித உணர்வோடு இன ஓர்மையைச் சாத்தியப்படுத்தி, சமத்துவத்தைப் பேணிக்கொண்டிருக்கிற இவ்வேளையில் அரசு மேற்கொள்கிற இதுபோன்ற தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் மக்களைப் பிரித்தாளுவதற்குத்தான் உதவுமே ஒழிய, ஒற்றுமைப்படுத்தி ஒருநாளும் சமத்துவத்தை நிலைநிறுத்தாது.
வரும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி அனுசரிக்கப்படவிருக்கிற வேளையில் இரு மாதங்களாக இருக்கும் 144 தடையுத்தரவானது பசும்பொன் திருமகனாரின் நினைவைப் போற்ற வருகிற மக்களுக்கு வெளிப்படையாக விடுக்கப்படுகிற அச்சுறுத்தலாகும். விடுதலைக்காகத் தன் வாழ்நாளைச் சிறையில் கழித்த அந்த மகத்தானத் தலைவரின் நினைவேந்தல் நிகழ்வை அரச விழாவாக நடத்தி குடும்பம் குடும்பமாய் மக்கள் பங்கேற்பதை உறுதி செய்யவேண்டிய அரசே, அவ்விழாவிற்கு மக்கள் கூடுவதைத் தடுக்கத் முற்படுவது அப்பட்டமான மக்கள் விரோதமாகும். இந்நாட்டுக்காகத் தங்களது வாழ்வையே அர்ப்பணித்த அரும்பெரும் தலைவர்களுக்குப் புகழ் வணக்கம் செலுத்தக்கூடத் தடை விதிக்கப்படுகிறதென்றால் இது அத்தலைவர்கள் போராடிப் பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தையே கேலிக்கூத்தாக்கும் பெருங்கொடுமையாகும். திருவிழா போல மக்கள் கொண்டாடும் அப்பெருமகனின் நினைவுத் திருநாளைத் தடையுத்தரவு மூலம் பதற்றத்திற்குரியவையாக மாற்றுவது அவரின் புகழுக்குக் களங்கம் கற்பிக்கிற இழிசெயலாகும். தேசியமும், தெய்வீகம் என்னிரு கண்கள் என்ற முழக்கத்தை முன்வைத்து, ஆங்கிலேயரின் ஆதிக்கத்தினை ஆட்டம் காணச்செய்த தென்னகத்து நேதாஜியான பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரைப் போற்ற இந்தியப்பெருநிலமே கடமைப்பட்டிருக்கையில் தமிழகத்தின் பிற மாவட்ட மக்களே அவரைப் போற்ற முடியாவண்ணம் 144 தடையுத்தரவைப் போட்டிருப்பது அப்பெருமகனின் பெருமைக்கு இழுக்குச் சேர்க்கிற போக்காகும்.
தமிழ் மண்ணுக்குத் தொடர்பற்றவர்களெல்லாம் சாதி, மதத்தைக் கடந்து தமிழர்களுக்கான பொதுத்தலைவர்களாக மாற்றி நிறுத்தப்பட்டிருக்கையில் ஒப்பற்றப் பெருந்தலைவர்களான முத்துராமலிங்கத்தேவரும், இம்மானுவேல் சேகரனாரும் சாதிய வட்டத்திற்குள்ளும், குறுகிய நிலப்பரப்புக்குள்ளும் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற இழிநிலையைப் போக்குவதற்குத்தான் நாம் தமிழர் கட்சியும், அதன் பண்பாட்டு அமைப்பான வீரத்தமிழர் முன்னணியும் அவர்களைச் சாதிய அடையாளத்திற்குள் இருந்து மீட்டு தமிழ்ப்பெரும் முன்னோர்களாக உலகம் முழுக்கக் கொண்டு போய்ச் சேர்த்துக்கொண்டிருக்கிறது. அதுவே அத்தலைவர்களுக்கு நாம் செலுத்துகிற உண்மையான புகழ் வணக்கமாக இருக்க முடியும்.
ஆகவே, இராமநாதபுரம் மாவட்டத்தில் இரு மாதங்களாகப் போடப்பட்டிருக்கிற 144 தடை உத்தரவைத் திரும்பப்பெற வேண்டும் எனவும், தேவர் ஜெயந்தியை எவ்வித இடையூறு நிகழாவண்ணம் மக்கள் அனுசரிக்கப் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.