காவிரிப்படுகையை பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக அறிவிப்பதா? – சீமான் கண்டனம்! 

43

அறிக்கை: காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப் போராடும்வேளையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக அறிவிப்பதா? – சீமான் கண்டனம்! | நாம் தமிழர் கட்சி

நாகை, கடலூர் மாவட்டங்களை பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக அறிவித்துள்ளமைக்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்  28-07-2017 விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நாகை, கடலூர் மாவட்டங்களில் 23,000 ஹெக்டர் பரப்பளவில் 45 கிராமங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கப்படுவதாகத் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசிதழில் அறிவித்திருக்கிற செய்தியானது தமிழக மக்களின் தலையில் பேரிடியாய் இறங்கியிருக்கிறது. ஏற்கனவே, நெடுவாசல், கதிராமங்கலத்தில் மேற்கொள்ளப்படும் மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஒ.என்.ஜி.சி. எண்ணெய்க் குழாய் பதிப்பு முதலிய அபாயகரத் திட்டங்களால் மண்ணும், நீரும் மாசுபட்டு, சூழ்நிலை மண்டலம் சீர்கெட்டு அவற்றிற்கெதிராகத் தமிழகம் முழுக்கப் போராட்டங்கள் நடந்தேறி வரும் நிலையில் இப்போது காவிரிப்படுகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கப்படுகிற அறிவிப்பானது ஆளும் வர்க்கத்தின் அடாவடித்தனத்தையும், அராஜப்போக்கையுமே உணர்த்துவதாக உள்ளது.

‘சோழ நாடு சோறுடைத்து’ என்ற மிகையில்லாப் புகழுரைக்கு இலக்கணமாய்த் திகழும் காவிரிப்படுகையானது உலகின் மிக நீண்ட சமவெளி பகுதியைக் கொண்டு நிற்கும் தலைசிறந்த வேளாண் மண்டலமாகும். தமிழகத்தின் உணவு உற்பத்தியில் பெரும்பங்கு காவிரிப்படுகையின் வேளாண்மை மூலம் பெறப்படுவதால் இப்பகுதியினை நெற்களஞ்சியம் என முன்னோர்கள் வழங்கி வந்தார்கள். ஆகவேதான், அதனைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சியும், இன்னபிற தோழமை இயக்கங்களும், இன உணர்வாளர்களும் நீண்டநெடுங்காலமாகக் கோரிக்கை வைத்து போராடிக் கொண்டிருக்கிறோம். அப்பகுதியினைப் பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக அறிவித்திருப்பது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பச்சைத்துரோகமாகும். காவிரிப்படுகையைச் நாசமாக்க முனையும் இக்கொடிய திட்டத்திற்குக் கடந்த 2012ஆம் ஆண்டு திமுக – காங்கிரஸ் கூட்டணியின்போதே அச்சாரமிடப்பட்டிருப்பது மூலம் தமிழர் நிலத்தைக் கபளீகரம் செய்யத்துடிக்கும் கூட்டுச்சதியினை அறிந்துகொள்ள முடியும்.

உலகம் முழுக்க உள்ள பல்வேறு நாடுகள் புதைபடிம எரிபொருட்களைத் துறந்துவிட்டு மாற்று எரிபொருட்களை நோக்கியும், மரபுசாரா வளங்களை நோக்கியும் நகர்ந்து கொண்டிருக்கிற வேளையில் இந்தியா மட்டும் எண்ணெய் மற்றும் எரிகாற்று வளத்தை ஏன் சார்ந்திருக்க விரும்புகிறது? எண்ணெய் வளமோ, எரிகாற்று வளமோ எதுவாயினும் அவை ஒன்றும் அள்ள அள்ளக் குறையா அட்சயப் பாத்திரமல்லவே! அவற்றின் பயன்பாட்டுக்கும் ஓர் எல்லையுண்டு என்ற புரிதலற்ற இந்நாட்டில் எவ்வளவு எண்ணெய் வளங்களை எடுத்தாலும் அவையாவும் கட்டற்ற பயன்பட்டாலும், முறையற்ற விற்பனையாலும், ஒழுங்கற்ற போக்குவரத்துக் கொள்கையாளும் தீர்ந்து போகும் என்ற உண்மையைக் கூடவா உணர்ந்து கொள்ள முடியாது? எண்ணெய் வளத்தை அபரிமிதமாகக் கொண்டிருக்கும் வளைகுடா நாடுகள்கூட எண்ணெய் பயன்பாட்டின் சிக்கனம் குறித்தும், பொதுப்போக்குவரத்தின் தேவை குறித்தும் விழிப்புணர்வையும், புரிதலையும் கொண்டிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலை நாடுகளை உதாரணமாகக் காட்டும் இந்நாட்டின் ஆட்சியாளர்கள், மேலை நாடுகள் மேற்கொள்ளும் பொதுப்போக்குவரத்துப் பயணம் குறித்த அடிப்படையுணர்வினைக் கூட மக்களுக்கு விளைவிக்க விளையவில்லை. ஆகையினால், மிதமிஞ்சிய நுகர்வுக்கலாச்சாரத்திலும், சீரமைக்கப்படா போக்குவரத்துக் கொள்கையிலும் திளைத்திருக்கும் இந்நாட்டிற்கு எண்ணெய் மற்றும் எரிகாற்று வளத்தில் தன்னிறைவு என்பது எத்தகைய பயனையும் தராது.

புவி வெப்பமாதலுக்கும், பருவநிலை மாறுபாடுக்கும் முதன்மை காரணியாக விளங்குபவை பூமிக்கடியில் புதைந்துக் கிடக்கும் இயற்கை வளங்களை வெளிக்கொணர்வதே எனும் அறிவியல் உண்மையை உலகெங்கும் ஏற்றுக் கொண்டிருக்கிற வேளையில் எதற்காக நிலத்தைக் குடைந்து மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கிற திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்? அவை மென்மேலும் பருவநிலை மாறுபடுதலுக்கும், புவி வெப்பமயமாதலுக்கும் காரணமாக அமைந்துவிடாதா? கடந்த மாதம் ரஷியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாரதப்பிரதமர் மோடி அவர்கள் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் பங்கேற்று, ‘பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதிலும் சரி! இயற்கையைப் பாதுகாப்பதிலும் சரி! இந்தியா உறுதியாய் இருக்கும். இது நமது எதிர்காலத் தலைமுறைக்கான பிரச்சினை. இயற்கையைக் காக்கிற பாரம்பரியத்தைக் கொண்டுள்ள இந்தியா, இயற்கையைப் பாதிக்கிற எத்திட்டத்திற்கும் அனுமதி அளிக்காது’ என அளித்த வாக்குறுதிகள் யாவும் மறந்துபோனதா தேசப்பக்தர்களுக்கு? இயற்கையைக் காப்பேன் என அந்நிய நாட்டில் பிரதமர் மோடி முழங்கினால் அது தேசப்பற்று; அதனையே சொந்த நாட்டில் குடிமக்கள் பேசினால் அது தேசத்துரோகமா? இது என்ன மாதிரியான சிந்தனையோட்டம்?

எண்ணெய் வளத்தைக் கைப்பற்ற நைஜீரிய நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல் நடவடிக்கைகளுக்கு ஒப்பாகத் தமிழர் நிலத்திலும் இயற்கை வளங்களைக் கைப்பற்ற ஓர் உள்நாட்டுப்போர் தொடுக்கப்படுகிறது; அது வாக்குசெலுத்தி அதிகாரத்தில் ஏற்றி அழகு பார்த்த மக்களின் மீதே அரசப்பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு அவர்களை வாழ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தி அகதியாக்கத் துடிக்கிற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி வருகிறது. தமிழர்களின் உணர்வுக்கும், உரிமைக்கும், உடைமைக்கும் முற்றுமுழுதாக எதிராய் நிற்கும் இந்தக் காட்டாட்சியைத் தூக்கியெறிய மக்கள் ஒரு மௌனப் புரட்சிக்கும், உளவியல் போர்க்கும் ஆயத்தமாக வேண்டும். இருப்பதைக் காக்கவும், இழந்ததை மீட்கவும் இதுவே நமக்கு இருக்கும் இறுதித்தீர்வாகும். வாக்குக்குப் பணமளித்து அதிகாரப்பீடத்தில் அமரும் அறமற்றவர்களிடமும், மக்கள் நலனைப் பற்றிச் சிந்தையே இல்லாத கூட்டத்தினரிடமும் ஆட்சியையும், பதவியையும் அள்ளிக் கொடுத்துவிட்டு அழுது புலம்பிப்பயனில்லை என்ற எதார்த்த நிலையைப் புரிந்துகொண்டு வருங்காலங்களிலாவது சின்னங்களுக்காக வாக்குசெலுத்துகிற இழிநிலையைத் துடைத்தெறிந்து மக்கள் நலன் குறித்த எண்ணங்களுக்காக வாக்களிக்க வேண்டும் என்பதனையும், களத்தில் நின்று நிலத்திற்காகப் போராடுகிறபோதெல்லாம் விரல் நீட்டி நம்மை அடித்து விரட்ட உத்தரவிட்டது, ஒற்றைவிரலால் நாம் அளித்த வாக்கு தந்த வலிமையினால்தான் என்பதனையும் உணர வேண்டும்.

சோழ மண்டலத்தின் சூழ்நிலைக்கு முற்றிலும் எதிரான பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனே கைவிட முன்வர வேண்டும். வழமைபோல, காலங்கடத்தி காரியத்தைச் சாதிக்க நினைப்பார்களேயானால் தமிழர்களுக்கெதிரான இப்படுபாதக நடவடிக்கைகளுக்கு எதிரான உரிமைப்போர் தமிழர் நிலத்தில் வெடிக்கும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திகத்தார் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு (24-07-2017)
அடுத்த செய்திநாம் தமிழர் அரசு ஏன் அமையவேண்டும்? – கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – கமுதி