அறிக்கை: மரபணு மாற்றப்பயிர்களுக்கு தடைவிதித்து, பாரம்பரிய பயிர் வகைகளைக் காக்க மத்திய அரசு முன்வர வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
கடுகை மரபணு மாற்றம் செய்யும் மத்திய அரசின் முடிவு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (17-05-2017) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
டெல்லி பல்கலைக்கழகம் உற்பத்தி செய்துள்ள ‘தாரா மஸ்டர்ட் ஹைபிரிட் 11’(Dhara Mustard Hybrid 11) எனும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் மரபணு மாற்ற அனுமதிக்குழுவானது அனுமதி வழங்க பரிந்துரைத்திருக்கிற செய்தியானது நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வகை மரபணு மாற்றக் கடுகுக்கு மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சராக இருக்கிற அனில் மாதவ் தவே ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் அது பாரம்பரிய கடுகு வகையை மொத்தமாக சிதைத்துவிடும் பேராபத்து இதில் நிறைந்திருக்கிறது. நேரடி உணவுப்பொருளுக்கான முதல் அனுமதியாக மரபணு மாற்றக் கடுகுக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டால், இதனை அடியொற்றி பல்வேறு வகையான மரபணு மாற்றப்பயிர்களை பன்னாட்டு விதை நிறுவனங்கள் உருவாக்கி அவற்றை இந்திய வேளாண் சந்தையில் ஊடுருவச்செய்யக்கூடிய அபாயம் இருப்பதை மறுப்பதற்கில்லை.
மரபணு மாற்றப்பயிர்கள் உடலுக்கு உகந்தது இல்லை என்பது பல்வேறு ஆய்வுகளில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு மரபணு மாற்ற உணவுப் பொருட்களைக் கொண்டு எலிகளுக்குச் சோதனை செய்தபோது எலிகளுக்கு சிறுநீரகம், கல்லீரல் பிரச்சனையை ஏற்பட்டதை சர்வதேச உயிரியல் இதழின் ஆய்வு முடிவுகள் தெரியப்படுத்தியது. 2011-ஆம் ஆண்டு கனடாவில் நடந்த ஒரு ஆய்வில், மரபணு மாற்ற உணவுப்பொருட்களை உட்கொண்ட கர்ப்பிணிப் பெண்களின் ரத்தத்திலும், தொப்புள் கொடியிலும் 80 விழுக்காட்டிற்கும் மேலான வேதியல் நச்சு இருப்பது கண்டறியப்பட்டது. இப்படி மரபணு மாற்றப்பயிர்கள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியவை என உலகெங்கிலிருந்தும் பல்வேறு ஆய்வுமுடிவுகளும், பலதரப்பட்ட அறிஞர் பெருமக்களும் எச்சரித்துவரும் நிலையில் மரபணு மாற்றக் கடுகை அனுமதிக்க முற்படும் பாஜக அரசின் செயலானது நாட்டு மக்களின் உடல்நலனுக்கும், உயிருக்கும் உலைவைப்பதற்கு ஒப்பாகும்.
சமையல் எண்ணெயின் தேவை அதிகமாக இருப்பதால் கடுகின் உற்பத்தியைப் பெருக்க மரபணு மாற்றப்பயிர் தேவைப்படுவதாக தங்களது செயலுக்கு நியாயம் கற்பிக்க முனைகிறார்கள் விஞ்ஞானிகள். மரபணுமாற்றப் பருத்தி இந்நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டபோதும் இதேபோல மிகை உற்பத்தி ஒன்றையே இலக்காகச் சொல்லப்பட்டது. மரபணுமாற்றப் பருத்தியினால் மகசூல் அதிகரிக்கும்; இலாபத்தை ஈட்டித்தரும்; களைக்கொல்லி தேவையில்லை; பூச்சிகள் தாக்காது; எத்தகைய தட்பவெப்பத்துக்கும் ஏற்றது எனப் பல்வேறு நிறைகளைக் கூறி மரபணு மாற்றப்பயிரை ஆதரித்தார்கள். ஆயிரக்கணக்கான விவசாயிகளின் உயிர்களைக் காவுகொடுத்து பேரிழப்பைச் சந்தித்தப் பிறகுதான் அவையாவும் பாரம்பரியப் பயிர் ரகங்களை சிதைக்க பன்னாட்டு நிறுவனமான மாண்சாண்டோ செய்த போலித்தனமான விளம்பரங்கள் என்பதை நாடு உணரத் தொடங்கியது.
பாரம்பரிய ரகங்களைக் கொண்டே கடுகு உற்பத்தியைப் பெருக்குவதற்கான வழிவகைகளும், வாய்ப்புகளும் ஏராளமாய் இருக்கிறபோது மரபணு மாற்றப்பயிர்களைத் திணிக்க முற்படுவது எவ்விதத்திலும் நாட்டின் வளர்ச்சிக்கு வழிகோலாது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். இவ்வகை மரபணு மாற்றப்பயிர்கள் மூலம் பாரம்பரிய ரகங்கள் ஒட்டுமொத்தமாக அழித்தொழிக்கப்பட்டு, மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களிடம் கையேந்துகிற நிலைக்கு நம் நாட்டு விவசாயிகளை இட்டுச்செல்லும் என்பதே வெளிப்படை.‘மரபணு மாற்றப்பயிர்களை அனுமதிப்பது இந்தியாவிற்கு மிகப்பெரும் பேரழிவைத் தருவதோடு, இந்திய வேளாண்மையை அந்நிய நிறுவனங்கள் கட்டுப்படுத்துவதற்கு வழிவகுக்கும்’ என இதுகுறித்து எச்சரிக்கிறார் மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானி புஷ்பா எம் பார்கவா. ஒரு நாட்டின் உணவுச்சந்தையையும், பாரம்பரிய விதைப்பொருட்களையும் கைப்பற்றிவிட்டால் அந்நாட்டை மிக எளிதாக ஆக்கிரமித்துவிடலாம் என்பதே பன்னாட்டு நிறுவனங்கள் கொண்டிருக்கிற வியாபார யுக்தி. அதற்கு மரபணு மாற்றப்பயிர்களை தயாரித்து, விதைச்சந்தையைக் கைப்பற்றுவது, பிறகு, பாரம்பரிய விதைகளை அழித்து அந்நாட்டின் வேளாண்மையையே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்கிற நுட்பத்தைக் கைக்கொண்டுதான் நாடுகளின் வேளாண்சந்தையைக் கட்டுப்படுத்த முனைகின்றன. இச்சதித்திட்டத்திற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு ஒருபோதும் உடன்படுதல் கூடாது. மரபணு மாற்றப்பயிர்களை அனுமதிக்கும் இவ்வகை முயற்சிகளானது, மாநிலப்பட்டியலில் வேளாண்மையைக் கொண்டிருக்கிற இந்திய அரசியல் சாசனத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்குமே எதிரானது என்பதை உணர வேண்டும்.
கடந்த ஆட்சிக்காலத்தில் மரபணு மாற்றக் கத்தரிக்காயை அன்றைய காங்கிரஸ் அரசானது கொண்டுவர முற்பட்டபோது அதனை எதிர்த்த பாஜக, இன்றைக்கு மரபணு மாற்றக் கடுகைத் திணிக்க முற்படுவது நகைமுரணாகும். மரபணு மாற்றப்பயிர்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என 2014ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பாஜக தற்போது அதற்கு எதிராக மரபணு மாற்றப்பயிர்களை அனுமதிக்க முற்படுவது ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் செய்கிற பச்சைத்துரோகமாகும். எனவே, பன்னாட்டு நிறுவனங்களின் இலாபவெறி வேட்டைக்கு இந்நாட்டு வேளாண்சந்தையை தாரைவார்க்கும் மரபணு மாற்றத்தொழில்நுட்பத்திற்கு முற்றாகத் தடைவிதித்து, பாரம்பரிய பயிர் ரகங்களை காக்க முன்வர வேண்டும் எனவும், மாநில உரிமைகளைக் காக்கும்பொருட்டு தமிழக அரசானது மரபணு மாற்றப்பயிர்களுக்கு எதிராகக் குரலெழுப்ப வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.