நாம் தமிழர் நிறுவனத் தலைவர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 36ஆம் ஆண்டு நினைவு நாள் – சீமான் மலர்வணக்கம்

365

நாம் தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று (24-05-17) காலை சென்னை, எழும்பூரிலுள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மலர்வணக்கம் செலுத்தினார். இதில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, சாதி, மதங்களால் பிளந்து பிரிந்த தமிழர்களை ஓர்மைப்படுத்தி ‘நாம் தமிழர்’ எனும் அரசியல் பெரும்படையைக் கட்டியெழுப்பிய புரட்சியாளர், நாம் தமிழர் கட்சியின் நிறுவனத் தலைவர் ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் நினைவு நாளில், அவர் எந்த இலட்சிய நோக்கத்திற்காக கட்சியைத் தொடங்கினாரோ அதனை எவ்வித சமரசத்திற்கும் இடங்கொடாது இறுதிவரை உறுதியாக நின்று நிறைவேற்றுவோம் என உறுதியேற்கிறோம். ஐயா சி.பா.ஆதித்தனார் மட்டுமல்லாது அவரோடு சேர்த்து எம் முன்னோர்கள் எல்லோரது கனவையும் நிறைவேற்ற எமது நிலத்தை தமிழர் நாங்களே ஆள்வோம். அது மிக விரைவில் நடக்கும். அப்போது உலகின் தலைசிறந்த நாடாக எம் நிலத்தை மாற்றிக் காட்டுவோம். தமிழர் நாட்டை தமிழரே ஆள வேண்டும் என்பது எமது கனவு மட்டுமல்ல! எங்கள் ஐயா சி.பா.ஆதித்தனாரின் கனவும்கூட! இதனைத்தான், ‘நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக்கொளல்’ என்று 2,000 ஆண்டுகளுக்கு முன்பே எங்களது மறை திருக்குறள் போதிக்கிறது. அவரவர் வீட்டையும், அவரவர் நாட்டையும் அவரவரே ஆள வேண்டும்; அதுவே ஆண்மை கொண்ட மக்களுக்கு அழகு என இலக்கணம் வகுக்கிறது. அது எங்களது தார்மீக உரிமையாகும். காவிரியிலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீரைத் தர மறுக்கும் கர்நாடகாவிலிருந்து முதலமைச்சர்களும், தலைவர்களும் மட்டும் தமிழகத்திற்கு வருவார்களா? இதனைக் கேட்டால், சனநாயகம் பற்றிப் பேசுபவர்கள், காவிரியில் நாங்கள் தண்ணீர்கேட்கிறபோதெல்லாம் கர்நாடகாவில் தமிழர்களைத் தாக்கி அகதிகளாக அடித்து விரட்டுகிறார்களே அப்போது எங்கே போனது இவர்களது சனநாயகம்? தமிழகத்தை மறைமுகமாக பாஜகதான் ஆட்சி செய்கிறது. அதனைத்தான், எச்.ராஜாவே சொல்கிறார். அதிமுகவானது ஆட்சியை அடமானம் வைத்துவிட்டது. 40 நாட்களுக்கு மேலாகப் போராடிய விவசாயிகளையும், தமிழகத்தின் எதிர்க்கட்சித்தலைவரையும் சந்திக்க மறுத்த பிரதமர் மோடி அவர்கள் ஒ.பன்னீர்செல்வத்தை மட்டும் சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டிய தேவையென்ன? பன்னீர்செல்வம் என்ன அரசுப்பொறுப்பில் இருக்கிறார்? அங்கு அரசியல் எதுவும் பேசவில்லை என்கிறார்கள். அரசியல் பேசாது அங்கு வேறு என்ன பேசுனீர்கள்? ரஜினியை கட்சிக்கு அழைக்கிற நிலையில்தான் தமிழகத்தில் பாஜகவின் பலமிருக்கிறது. அமைப்பு பிழையாக இருக்கிறது என்று இன்றைக்கு குறிப்பிடுகிறார் ரஜினிகாந்த். இதனை 6 மாதங்களுக்கு முன்பு மார்க்கண்டேய கட்ஜூ குறிப்பிட்டார். ஆனால், இதனை 8 ஆண்டுகளாக நாங்கள் பேசி வருகிறோம். ‘அடிப்படை மாற்றம், அமைப்பு மாற்றம், அரசியல் மாற்றம்’ என மாற்றத்தை முன்வைக்கிறோம்.