தம்பி தனஞ்செழியனின் மறைவு ஈடுசெய்ய முடியா பேரிழப்பு! -சீமான் இரங்கல்

29

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தனஞ்செழியன் அவர்களின் மறைவையொட்டி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது,

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரும், கடந்த சட்டமன்றத்தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட்டவருமான என்னுயிர் தம்பி தனஞ்செழியன் அவர்கள் மறைந்த செய்தியானது மிகுந்த மனவலியையும், ஆறாத மனவேதனையையும் தருகிறது. நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலம்முதல் இக்கட்சியில் பயணித்து இம்மண்ணையும், மக்களையும் தனது உயிரென நேசித்து இனத்தின் விடுதலைக்காக அயராது களப்பணியாற்றியவர் தம்பி தனஞ்செழியன் ஆவார். இனத்தின் நலனுக்காக நடந்தேறும் உரிமை மீட்புக்களங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட தம்பி தனஞ்செழியன் அவர்கள் வழக்குகளையும், எதிர்ப்புகளையும் பெற்றபோதிலும் அயராது போராடி சமரசமற்று களத்தில் நின்ற களப்போராளி என்றால், அது மிகையல்ல! அத்தகைய ஒரு போராளியை இன்றைக்கு நாம் இழந்திருக்கிறோம்.
‘இனத்தின் விடுதலையை எட்ட இறுதிவரை உன்னோடு நிற்பேன் அண்ணா!’ என என்னிடத்தில் கூறிய என் தம்பி இன்று என்னை ஏமாற்றிவிட்டு சென்றிருக்கிறார். அவரது இழப்பு நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்ட ஈடுசெய்யமுடியா பேரிழப்பாகும். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இந்த இனத்திற்கு அளப்பெரியப் பங்களிப்பை ஆற்றவேண்டிய தம்பி, வாகன விபத்தில் சிக்குண்டு நம்மைவிட்டு சென்றது பெருத்த ஏமாற்றத்தைத் தருகிறது. மண்ணின் மீதும், மக்களின் மீதும் தீராகாதல் கொண்டும் நிற்கும் தம்பிகள் தங்கள் உடல்நலன் குறித்து அக்கறை கொள்ளாதிருக்கும்போது நேர்கிற சிறுபிழைகளால் பெரும்போராளிகளையே நாம் இழக்க வேண்டியதாகிறது. தம்பி தனஞ்செழியன் அவர்கள் வாகனத்தில் பயணிக்கும்போது இடைவாரை அணிந்திருந்தால் இன்று அவரை இழந்திருக்க மாட்டோம். என்னுயிர் தம்பிகளுக்கு நான் திரும்ப திரும்ப அறிவுறுத்துகிறேன். இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது கட்டாயம் தலைக்கவசத்தை அணியுங்கள்; வாகனங்களில் பயணிக்கும்போது இடைவாரை அணியாமல் பயணம் செய்யாதீர்கள். மிகுந்த கவனத்தோடும், எச்சரிக்கையோடும் பயணத்தை மேற்கொள்ளுங்கள். உயிரைவிட உரிமை பெரிதென்றாலும்கூட, அந்த உரிமைக்குப் போராட நமது உயிரும், உடலும் அத்திவாசியமாகிறது.
தம்பி தனஞ்செழியன் அவர்களின் உடல் அவரது சொந்த ஊரான வந்தவாசி அருகேயுள்ள சேத்துப்பட்டு, பின்னனூருக்கு எடுத்துச்செல்லப்பட்டு நாளை இறுதி மரியாதை செலுத்தப்படுகிறது. அதுசமயம், நாம் தமிழர் உறவுகள் அனைவரும் அந்நிகழ்வில் பங்கேற்று தம்பிக்கு இறுதி வணக்கம் செலுத்தக் கூடுவோம். தம்பி தனஞ்செழியனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு உற்றதுணையாய் நிற்போம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திஉழைக்கும் வர்க்கத்தை மேம்படுத்த உளமாற உறுதியேற்போம் – சீமான் வாழ்த்து!
அடுத்த செய்திதமிழகத்தில் இந்தியைத் திணித்தால் மொழிப்புரட்சி வெடிக்கும் : சீமான் எச்சரிக்கை!