20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுப்பதா? – சீமான் கண்டனம்

368

20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுப்பதா?
– சீமான் கண்டனம்

20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய முடியாது எனக்கூறி திமுக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. சிறைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் இசுலாமிய மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனாலேயே அவர்களுக்கான சனநாயக உரிமையான விடுதலையை மறுத்து வரும் திமுகவின் மதவாதப்போக்கு வன்மையானக் கண்டனத்திற்குரியது.

தமிழகச்சிறைகளில், இசுலாமியர்களை எவ்வித விசாரணையுமின்றி, சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே நீண்ட நெடுங்காலமாக அடைத்து வைத்திருப்பது பெருந்துயரென்றால், மறுபுறம், சட்டத்தின்படி இருக்கும் தார்மீக வாய்ப்புகளை முற்றாக மறுத்து, 20, 25 ஆண்டுகளென தனது வாழ்நாளின் பெரும்பகுதியை சிறையிலேயே கழித்து வரும் இசுலாமியத்தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்ய விடாப்பிடியாய் மறுத்து வதைத்து வருவது வரலாற்றுப் பெருங்கொடுமையாகும். இருபெரும் திராவிடக்கட்சிகளும் மாறி மாறி தமிழகத்தை ஆண்டபோது, பல முறை அவ்விடுதலைக்கான கோரிக்கைகள் வைக்கப்பட்டும், அதற்குரிய அதிகாரம் அரசுகளிடமிருந்தும் இசுலாமிய சிறைவாசிகளை விடுதலைசெய்ய அவை முன்வரவில்லை என்பது சனநாயகத்துரோகமாகும்.

முன்னாள் முதல்வர் ஐயா கருணாநிதி அவர்களது ஆட்சிக்காலத்தில், கடந்த 2008 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பத்தாண்டுகளுக்கும் மேலாகத்தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகளை விடுதலை செய்யலாம் எனும் அரசாணை வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், மதுரை மாமன்ற உறுப்பினர் அம்மா லீலாவதியை வெட்டிக்கொன்ற கொடுங்கோலர்களைக்கூட விடுதலை செய்த அன்றைய திமுக அரசு, இச்சட்டம் நீண்டகாலமாகச் சிறையில் வாடும் இசுலாமியர்களுக்குப் பொருந்தாது என்றறிவித்தது ஈவிரக்கமற்ற கொடுஞ்செயலாகும். இந்நிலையில், தற்போதைய ஆட்சியில், கடந்த செப்டம்பர் 13 அன்று தமிழகச்சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று வெளியிட்ட அறிவிப்பிலும், இசுலாமிய சிறைவாசிகள் இடம்பெறாதது பெரும் ஏமாற்றமளிக்கிறது. கடந்த காலங்களில் கடைப்பிடித்த அதே பாராமுக அணுகுமுறையை தற்போதும் திமுக அரசு கடைப்பிடிப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. இசுலாமியர்களை வெறும் தேர்தல் காலத்து வாக்கு வங்கிகளாக மட்டும் பயன்படுத்திக்கொண்டு, அவர்களது உயிருக்கும், உரிமைக்கும் துளியும் மதிப்பளிக்காது துச்சமெனக்கருதி தூக்கியெறிவது வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த அம்மக்களுக்குச் செய்யும் படுபாதகச்செயலாகும். சிறைவாசிகளின் தண்டனையைக் குறைத்து அவர்களை முன்விடுதலை செய்ய மாநில அரசு முடிவெடுக்கும்போது மொழி, மத, இனம் மற்றும் வழக்கின் தன்மை உள்ளிட்ட எவ்விதப்பாகுபாடும் காட்டக்கூடாது என உச்சநீதிமன்றமே தெளிவுபடுத்தியப்பிறகும், இரு திராவிடக்கட்சிகளும் மதத்தினைக் காரணமாகக் காட்டி இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலையை மறுப்பது மிகப்பெரும் மோசடித்தனமாகும்.

கடுங்குற்றம் புரிந்து தண்டனைப்பெற்ற மற்ற சிறைவாசிகளையெல்லாம் 10 ஆண்டுகளில் முன்விடுதலை செய்யும்போது, அதேபோல, இசுலாமிய சிறைவாசிகளையும் தண்டனைக் குறைப்பின் கீழ் விடுதலைசெய்வதில் திமுக அரசுக்கு என்ன தயக்கம்? சட்டத்தின்படி, அவர்கள் விடுதலை பெறுவதற்கான உரிமை இருந்தும் அதனை மதத்தின் பெயரால் மறுத்து வருவது மனிதத்தன்மையற்ற கொடுங்கோன்மை இல்லையா? இசுலாமியரென்றாலே பயங்கரவாதிகளென முத்திரைக் குத்தி மதத்தின் பெயரால் மக்களைப் பிளந்து பிரித்து, வெறுப்பையும், வன்மத்தையும் வளர்க்கும் பாஜகவின் செயலுக்கும், இசுலாமியர் என்பதால் விடுதலை செய்ய முடியாது என்கிற திமுகவின் மதப்பாகுபாட்டு நிலைப்பாட்டிற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? பாஜகவை அடியொற்றி செல்கிறதா திமுக அரசு? ‘சிறுபான்மையினர்’ என்று பெரும்பான்மை தமிழினத்தின் அங்கத்தினராக விளங்கும் இசுலாமியர்களை விளித்து, அவர்களது காவலரெனத் தங்களுக்குத் தாங்களே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் திமுக அரசு, அம்மக்களைக் காக்கும் செயல் இதுதானா? வெட்கக்கேடு!

ஆகவே, மதத்தினை அளவுகோலாகக் கொண்டு மானுட உரிமையான விடுதலையை மறுக்கும் போக்கைக் கைவிட்டு, 10 ஆண்டுகளைக் கடந்த இசுலாமிய சிறைவாசிகள் அனைவருக்கும் தண்டனைக்குறைப்பு செய்து, அவர்களை உடனடியாக விடுவிக்க முன்வர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். இக்கோரிக்கையை வலியுறுத்தி, முதற்கட்டமாக வரும் டிசம்பர் 12 ஆம் தேதி சென்னையில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கிறோம். விடுதலையைத் தாமதப்படுத்தப்படும்பட்சத்தில், தமிழகம் முழுக்க மக்களைத் திரட்டி தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம் என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  • செந்தமிழன் சீமான்
    தலைமை ஒருங்கிணைப்பாளர்
    நாம் தமிழர் கட்சி
முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறையின் சார்பாக மாபெரும் பேச்சுப்போட்டி
அடுத்த செய்திகுளித்தலை தொகுதி- கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார் மலர்வணக்க நிகழ்வு