குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது அரசப்பயங்கரவாதம்! – சீமான் கடும் கண்டனம்

52

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது அரசப்பயங்கரவாதம்!
– சீமான் கடும் கண்டனம்

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகக் காவல்துறையினர் கோரத்தாக்குதல் தொடுத்திருப்பது பேரதிர்ச்சியைத் தருகிறது. அங்கு போராடியவர்களை காவல்துறையினர் தாக்கியக் காட்சிகளை இணையத்தில் காணும்போதும், தாக்குதலில் இருவர் உயிரிழப்பு என்ற செய்தியும் கேட்டு நெஞ்சம் பதைபதைக்கிறது. பெருஞ்சினமும், ஆத்திரமும் பிறப்பெடுக்கிறது.

தங்களது உரிமைக்காக அறவழியில் போராடுவதும், அரசின் சட்டங்கள் குறித்து மாற்றுக் கருத்துத்தெரிவிப்பதும் அடிப்படை சனநாயக உரிமை. அதனையே மறுத்து அரசின் முடிவை மக்கள் மீது திணிப்பதும், எதிர்ப்போரைத் தாக்குவதும், சிறைப்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது. குடியுரிமைச் சட்டத்திருத்தம் எனும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியை எதிர்த்துப் போராட வேண்டியதும், அதற்கெதிராகக் குரலெழுப்ப வேண்டியதும் இந்நாட்டு குடிமக்கள் ஒவ்வொருவரின் தார்மீகக்கடமையாகும். அந்தவகையில் நாட்டின் மீது பற்றுக்கொண்டு, மதச்சார்பின்மையைக் காக்க அறவழியில் போராடியவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டது ஏற்கவே முடியாத பாசிசம்; அரசப்பயங்கரவாதம்.

ஆகவே, குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது தாக்குதல் தொடுத்திட்ட காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், போராடுவோர் மீதான அடக்குமுறைகள் கைவிடப்பட்டு, அறவழியில் போராடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகலந்தாய்வு கூட்டம்-அண்ணாநகர் தொகுதி
அடுத்த செய்திமட்டக்களப்பு மாணவர்களுக்கு நாம் தமிழர் பிரான்சு உதவி