ஐ.ஐ.டி மாணவர் சுராஜ் மீதான காட்டுமிராண்டித்தாக்குதல்: ஏ.பி.வி.பியை கல்லூரிகளுக்குள் அனுமதிக்கக்கூடாது : சீமான் கண்டனம்!

25

இந்திய தொழில்நுட்பக்கழக மாணவர் சுராஜ் மீதான காட்டுமிராண்டித்தாக்குதல்: ஏ.பி.வி.பியை கல்லூரிகளுக்குள் அனுமதிக்கக்கூடாது : சீமான் கண்டனம்!

இந்திய தொழில்நுட்பக்கழக மாணவர் சுராஜ் மீதான தாக்குதல் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சி விற்பனை தடைச்சட்டத்திற்கெதிராகச் சென்னை இந்தியத் தொழில்நுட்பக்கழகத்தில் மாட்டிறைச்சி உண்ணும் விழாவை ஒருங்கிணைத்த பெரியார் – அம்பேத்கர் மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர் சூரஜ் மீது பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. தாக்குதல் தொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. சகிப்புத்தன்மை என்பது துளியுமற்ற, கருத்தியல்ரீதியாக எப்போதும் அணுகத்திராணியற்ற அடிப்படைவாதிகளின் மதத்துவேசமும், காட்டுமிராண்டித்தனங்களுமே இதுபோன்ற தாக்குதலாக உருமாறுகிறது. இவை வன்மையான கண்டனத்திற்குரியது.

வடமாநிலங்களில் மட்டுமே இதுநாள்வரை அரங்கேற்றப்பட்டு வந்த இதுபோன்ற வன்முறைச்செயல்கள் இப்போது தமிழகத்திலும் தொடருவது வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. மக்களிடம் மத உணர்வைத் தூண்டி பிரித்தாளும் சூழ்ச்சியைக் கைகொண்டு அம்மாநில அதிகாரத்தைக் கைப்பற்றும் பாஜகவின் சித்துவேலைகளின் தொடக்கம்தான் இதுவென்பதில் ஐயமில்லை. அதற்குத் தமிழகம் ஒருபோதும் இடந்தரக்கூடாது. இவைகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். இந்த வருடம் பயிற்சி முகாம் என்ற பெயரில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உள்ளிட்ட தமிழகப் பள்ளி கல்லூரியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உள்நுழைந்ததைப் போன்று இனி அனுமதிக்கக்கூடாது. கல்லூரி நிர்வாகங்களும் ஏ.பி.வி.பி போன்ற மதவாத குண்டர்களைக் கொண்ட மாணவர் அமைப்பைத் தங்கள் கல்லூரிக்குள் ஊக்குவிக்கக்கூடாது. இனியேனும் கல்விக்கூடங்களைக் காவிக்கூடங்களாக்க முனையும் மதவெறியர்களின் செயல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டர் சட்டத்தில் கீழ் அவர்கள் கைதுசெய்யப்பட வேண்டும். நினைவேந்தல் நிகழ்வை நடத்தியதற்குக் குண்டர்சட்டம் பாய்ச்சும் தமிழக அரசு இம்மாதிரியான காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்துபவர்கள் மேல் அச்சட்டத்தைப் பாய்ச்சாதா?

ஏழ்மையும், வறுமையும், உழைப்புச்சுரண்டலும் மிகுந்ததால் பசி,பட்டினியையும், ஊட்டச்சத்து குறைப்பாட்டையும் நாள்தோறும் எதிர்கொண்டிருக்கிற இந்தியப்பெருநாட்டில் மலிவுவிலை இறைச்சியான மாட்டிறைச்சி விற்பனை மீதானத் தடை என்பது ஏழை மக்களின் தட்டிலிருக்கும் உணவைத் தட்டிப்பறிக்கிற கொடுஞ்செயலாகும். தனியொரு மனிதனது உணவை அரசுத் தீர்மானிக்க முனையும் பாஜக அரசின் இப்படுபாதகப் போக்கானது சனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் அரசப்பயங்கரவாதமாகும். இது அரசியலமைப்புச்சட்டத்திற்கும், இந்நாடு ஏற்றிருக்கிற மக்களாட்சித் தத்துவத்திற்குமே ஊறு விளைவிப்பதாகும். இதனைத்தான் மதுரை உயர்நீதிமன்றக் கிளையானது சுட்டிக்காட்டி மத்திய அரசின் தடைச்சட்டத்திற்கு இடைக்காலத்தடை பிறப்பித்திருக்கிறது. இதனை நாம் தமிழர் கட்சி முழுமையாக வரவேற்கிறது.

மாணவர் சூரஜ் மீதான இத்தாக்குதலுக்கு மத்திய, மாநில அரசுகள் கடும்கண்டனத்தைத் தெரிவித்து, தாக்கியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழர் மண்ணில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் இனியொரு காலத்திலும் அரங்கேறாவண்ணம் கடும் சட்டம் கொண்டு தடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி30-05-2016 தினம் ஒரு சிந்தனை – 351 | செந்தமிழன் சீமான்
அடுத்த செய்திசிகிச்சை பெற்றுவரும் ஐ.ஐ.டி மாணவர் சூரஜ் குடும்பத்திற்கு சீமான் நேரில் ஆறுதல்