ஆண்டுகள் கடந்தாலும் கொண்ட காயங்களைக் கடக்க முடியாது! – சீமான்

49

மே18 – தமிழ் இனப்படுகொலை நாள் : ஆண்டுகள் கடந்தாலும் கொண்ட காயங்களைக் கடக்க முடியாது – சீமான்

==================================================

மே18 – தமிழ் இனப்படுகொலை நாள் நினைவேந்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (18-05-2017) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்த்தேசிய இனத்தின் பெருந்துயர நாளாக நம் இனம் சிங்களப் பேரினவாதக் கரங்களினால் அழிந்துப் போன நாளாக மே 18 விளங்குகிறது. 8 வருடங்களுக்கு முன்னர், கண்ணீரும் செந்நீரும் பெருக்கெடுத்த இந்நாட்களில் தான் தன் சொந்த இனம் அழிவதைக் கண் முன்னே காண நேர்ந்த துயரம் தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்தது. நமது அண்ணன்-தம்பிகள், அக்கா-தங்கைகள், உற்றார்-உறவினர் என நமது உதிர உறவுகள் உருக்குலைந்து உயிர் இழந்து உதிர்ந்த போது, அழுதழுது சிவந்த கண்களோடு கைப் பிசைந்து நின்றதும், இந்த உலகமே ஒற்றைக் குடையின் கீழ் நின்று சிங்களப் பேரினவாத அரசைப் பாதுகாத்து, தமிழீழ மண்ணில் இனப்படுகொலை நிகழ்த்த ஆயுதங்களை, போர் ஆலோசனைகளை வாரி வழங்கி, பொருளாதாரப் பலம் அளித்து நமது இனத்தை அழித்துப் போட்ட கொடூரம் நிகழ்ந்ததும் நாம் உயிருள்ள வரை மறக்க முடியாத, மறக்கக்கூடாத துயர நினைவுகள்.இதற்கு நடுவிலும் தாய்மண்ணைக் காத்திட தன்னுயிர் அளித்துத் தாய்மண்ணிற்கு விதைகளாக, எதிர்காலத் தலைமுறைக்கு ஒரு பாடமாக விளங்கிட, வீரம் என்ற சொல்லிற்கு இந்தப் பாரிய பூமியில் விளக்கம் அளித்திட நம் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் தலைமையில் அலை அலையாய் அணிவகுத்த மாவீரர் கூட்டத்தைப் பார்த்து உலகமே அசந்து நின்றது. தாய்மண்ணிற்காக உயிரை இழக்கத்துணிவது உத்தமம் தான். ஆனால் உயிரை இழக்க தாய்மண் ஒன்று வேண்டுமே, நமக்கென நம்மைத் தேற்ற இப்பூமிப்பந்தில் ஒரு தேசம் வேண்டுமே என்பதை உணர்ந்துதான் நமது உடன்பிறந்தார்கள் உயிரை இழந்து கனவைச் சுமந்து தமீழிழ நாட்டினைக் கட்டத் துணிந்தார்கள்.

ஒரு தேசிய இனத்தின் அடிப்படை உரிமையான சுயநிர்ணய உரிமையை இந்த உலகம் தமிழினத்திற்குத் தராமல் பூர்வகுடி ஒன்றினைப் பூண்டோடு அழிக்கத்துணிந்த பேரினவாதத்தின் பொல்லாக் கரங்களில் பூச்செண்டு கொடுத்து மகிழ்ந்தது. இந்தப் பூமிப்பந்தில் பிறந்த ஒவ்வொரு தமிழனும் தனது தாய் மண் தனது கண் முன்னாலேயே தரிசாக்கப்பட்டு,இனம் அழித்தொழிக்கப்பட்டு இல்லாமல் போனது கண்டு முச்சற்று,காட்சியற்று நின்றான்.

தன்னினம் அழிவதைக் காண சகிக்காது, இடையில் இருக்கும் கடல் எங்கள் உடல் நிறைந்தால் திடலாக மாறி விடும் எனக்கருதி முத்துக்குமார் உள்ளீட்ட 20க்கும் மேற்பட்ட தாயகத்தமிழர்கள் தன்னுயிரை வழங்கி தொப்புள் கொடி உறவினை உலகிற்கு அறிவித்தார்கள்.

இது வரை மானுடச்சரித்திரம் கண்டறியாத இனப்படுகொலையை நிகழ்த்தி முடித்த சிங்கள இன ராணுவத்தின் கோரத்தாண்டவத்தை மறைத்து பாதுகாக்கும் கவசங்களாக நாம் வாக்கு செலுத்தி, வரி செலுத்தி வாழுகிற இந்திய வல்லாதிக்கமும், உலக வல்லாதிக்கமும் திகழ்கின்றன. எங்கெல்லாம் நீதி கிடைக்க வழி உண்டோ, அங்கெல்லாம் நின்று கண்ணீர் விட்டு கதறி பார்த்தும் நம்மினத்திற்கான நீதி இதுநாள் வரை வழங்கப்பட வில்லை. இந்த இனப்படுகொலைகளுக்குப் பிறகும் கூட ஒரு பொது வாக்கெடுப்பின் மூலம் தமிழீழ மண்ணில் வாழும் நம்மின உறவுகளுக்கு ,மற்ற மேலை நாடுகளில் நடப்பது போலச் சுயநிர்ணய உரிமை வழங்கப்படவில்லை.

போர் முடிந்து 8 ஆண்டுகள் ஆகியும் துயரம் தீரவில்லை. ஆறாத காயங்களைக் கூடக் காலம் ஆற்றிவிடும் என்பார்கள். ஆனால் தாய்நிலம் இழந்த தமிழ் இனத்தின் தாகம் காலம் ஆற்றி விடும் கடந்த போக முடிந்த துன்ப நினைவு அல்ல. இனி எத்தனை ஆண்டுகளானாலும், எம் தாய்நிலம் விடுதலையாகும் வரை தணியாத, அது கடக்க முடியாத துயரம் தோய்ந்த நெடியப் பாலை.

அதே நினைவுகளோடு இனப்படுகொலை நிகழ்ந்த மண்ணின் மற்றொரு கரையில் இருந்து உகுக்கிற கண்ணீரோடும் …ஆண்டுகள் பலவாயினும் ஆறாத ரணத்தோடும், எம் மாவீரர்கள் சுமந்த அதே கனவினை நிறைவேற்றும் உறுதியோடும்.. நாம் உறுதி ஏற்கிறோம்.

என்ன விலைக் கொடுத்தேனும் அந்நியர் கரங்களில் அகப்பட்டுக் கிடக்கும் எம் தாய் மண்ணை மீட்போம். இனப்படுகொலை நிகழ்த்தி இதுவரை எவ்வித தண்டனையோ, குற்றச்சாட்டுகளோ இல்லாமல் இன்புற்றிருக்கும் சிங்களப் பேரினவாத அரசின் தலைமைகளுக்கு உலக அரங்கில் நீதி புகட்டுவோம்.

கரைந்தோடுகிற கண்ணீரைத் துடைத்து விட்டு கம்பீரத்தோடு.. வீழா புலிக்கொடியைத் தாங்கிப் பிடித்து உயர்த்திய இன்னொரு தாயக மண்ணில் இருந்து இந்நாளில் முழங்குவோம்.
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்.

– இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்திமரபணு மாற்றப்பயிர்களுக்கு தடைவிதித்து, பாரம்பரிய பயிர் வகைகளைக் காக்க மத்திய அரசு முன்வர வேண்டும்: சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திமே 18, இன எழுச்சி நாள் – மாபெரும் பொதுக்கூட்டம் – பாம்பன் | சீமான் எழுச்சியுரை