கச்சா எண்ணெயையே அகற்றமுடியாத இவர்கள் எப்படி அணுஉலை கழிவுகளை அகற்றுவார்கள்? – சீமான் ஆதங்கம்

22

கச்சா எண்ணெயையே அகற்றமுடியாத இவர்கள் எப்படி அணுஉலை கழிவுகளை அகற்றுவார்கள்? – சீமான் ஆதங்கம்

நேற்று 02-02-2017 மாலை 6 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள், திருவொற்றியூர் கடற்கரையில் நடைபெற்று வரும் கச்சா எண்ணெயை அகற்றும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, சுற்றுச்சூழல் மாசு அடையாமலிருக்க என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை ஆய்வுசெய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் இதுகுறித்து சீமான் கூறியதாவது,

கப்பல்கள் மோதியதில் கச்சா எண்ணெய் கொட்டிய விபத்து குறித்தான முழுமையானத் தகவல்கள் தெரியவரவில்லை. எல்லாம் செவிவழி செய்தியாகவே இருக்கிறது. கொட்டிய கச்சா எண்ணெய்யானது எர்ணாவூர், காசிமேடு, தாழங்குப்பம் உள்ளிட்டப் பகுதிகளில் மட்டுமல்லாது புதுச்சேரி வரை பரவிவிட்டது. கொட்டிய எண்ணெயை அகற்ற அதனை வாளி மூலம் அள்ளி ஊற்றுகிறார்கள். இப்படி ஊற்றி என்றைக்கு முழுமையாக எண்ணெய் படலத்தை அப்புறப்படுத்துவது என்று தெரியவில்லை. இவ்வளவு நவீனங்கள் வளர்ந்த இக்காலக்கட்டத்திலும் கடலில் கொட்டிய எண்ணெயை அகற்ற முடியாமல் வாளிகளைக் கொண்டு அள்ளுகிறோம். இது நாம் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்று காட்டுகிறது.

அப்புறப்படுத்தப்படுகிற எண்ணெய் படலங்கள் நிலத்தில் ஊற்றப்பட்டாலும் நிலம் பாழ்படும். கடலில் ஆமைகள் செத்து கரை ஒதுங்குகிறது. அவை எண்ணெய் கொட்டியதால் செத்தவைதானா என்பது குறித்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஆய்வு முடிவுகள் வந்தால்தான் அது நமக்குத் தெரியவரும். நான் மீனவர்களிடம் கேட்டவரை, ‘மீன்கள் கடலில் ஆழப்பகுதியில்தான் இருக்கும். அதனால், பாதிப்பில்லை’ என்று தெரிவித்தார்கள். தற்போது கடலில் பிடிக்கப்படுகிற மீன்கள் உண்ணுவதற்கு உகந்தவைதான் என்று உறுதிப்படக் கூற முடியாது.

கடலில் கச்சா எண்ணெய் கொட்டியதையே நம்மால் அப்புறப்படுத்த முடியவில்லை எனும்போது அணு உலையில் ஒரு விபத்து ஏற்பட்டால் எப்படி அதிலிருந்து மீள முடியும்? அணு உலை பாதுகாப்பானது என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், சொல்கிற எவரும் கூடங்குளம் பக்கத்தில் குடியிருப்பதில்லை. அப்படியிருக்கக் கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்பதை எப்படி நம்புவது? கச்சா எண்ணெய் கொட்டியதனால் மீனவர்கள் மீன்பிடிக்கப் போவது முழுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, ஒருவார காலமாக மீன்பிடித் தொழிலுக்குப் போகாததால் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். எனவே, பாதிக்கப்பட்டு இருக்கிற மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என்றார்.