பொங்கல் பொதுவிடுமுறை கட்டாயமல்ல என்கிற மத்திய அரசின் அறிவிப்பு தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிக்கிற கொடுஞ்செயல் – சீமான் ஆவேசம்.

131

பொங்கல் விழாவிற்குக் கட்டாயப் பொதுவிடுமுறை இல்லை என்கிற மத்திய அரசின் அறிவிப்பு தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிக்கிற கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்த்தேசிய இனத்தின் பெருமைமிகு பண்டிகையான பொங்கல் திருநாளுக்குக் கட்டாயமாகப் பொது விடுமுறை அளிக்கத் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்து இருப்பது இந்நாட்டில் வசிக்கும் 10 கோடிக்கும் மேற்பட்ட தமிழர்களை வெகுவாகக் காயப்படுத்தி இருக்கிறது. கர்நாடாகாவில் 1 கோடிக்கும் அதிகமான தமிழர்கள், மகாராசுடிரத்தில் ஏறக்குறைய 35 லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் என இந்நாடு முழுக்கத் தமிழர்கள் பரவி வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டு இருக்கிற இந்த அறிவிப்பு தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிக்கிற கொடுஞ்செயல்.

ஏற்கனவே காவிரி நதி நீர் சிக்கலில் உச்சநீதிமன்றம் உத்திரவிட்ட பிறகும் கூடக் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்தது, தமிழரின் தொன்மையான பண்பாட்டு நிகழ்வான சல்லிக்கட்டு மீதான தடையை நீக்க மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்ற வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருவது, பாடத்திட்டங்களில் சமஸ்கிருத மொழி திணிப்பு, கல்விக்கொள்கைகளில் மாற்றங்கள் என்பதான தொடர்ச்சியான தமிழர் விரோதச் செயல்களில் மோடி தலைமையிலான பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. தற்போது வெந்தப்புண்ணில் வெந்நீர் ஊற்றும் தமிழ்த்தேசிய இனத்தின் பெருமை மிகு திருவிழாவான பொங்கல் பண்டிகைக்குக் கட்டாய விடுமுறை இல்லை என்று அறிவித்து இருப்பது தமிழர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பொங்கல் திருநாள் என்பது தமிழர்களின் தொன்மையான தேசியப் பண்டிகை. தமிழர்களின் பண்பாட்டு பெருமித வரலாற்றின் அடையாளச்ச்சின்னமாகப் பொங்கல் திருநாள் பண்டிகை விளங்குகிறது. தமிழர் நிலத்தில் கொண்டாடப்படும் இதர பண்டிகைகள் எல்லாம் காலப் போக்கில் வந்து ஊடுருவி திணிக்கப்பட்ட பண்டிகைகள் ஆகும்.ஆனால் உழவர் திருநாளாக, செந்நெல் எடுத்து உச்சி மோர்கிற அறுவடைப்பண்டிகையான பொங்கல் திருநாள் மட்டுமே தமிழர்களின் ஒரே பாரம்பரியப் பண்டிகை ஆகும். இப்படிப்பட்ட பெருமைகள் வாய்ந்த பொங்கல் திருநாளுக்குக் கட்டாய விடுமுறை தேவையில்லை என்கிற மத்திய அரசின் அறிவிப்பு தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிக்கும் அறிவிப்பாகதான் இதைக் கருத வேண்டியுள்ளது. தமிழர் நிலத்தில் மட்டும் பிற இனத்து பண்டிகைகளான ஓணம் பண்டிகை, குருநானக் ஜெயந்தி,மகாவீர் ஜெயந்தி போன்ற பண்டிகைகளுக்கு விடுமுறை விடுகிற மத்திய அரசு தமிழர்களின் தேசிய திருவிழாவான பொங்கல் திருநாளுக்கு மட்டும் கட்டாய விடுமுறை அளிக்கத்தேவையில்லை என அறிவித்து இருப்பது அப்பட்டமான தமிழர் விரோதப் போக்கினையே காட்டுகிறது.

இந்தியா என்கிற நாட்டின் உருவாக்கத்திற்கும், அதன் சுதந்திர போராட்டத்திற்கும் தமிழர்கள் எண்ணற்ற ஈகங்கள் செய்திருக்கின்றனர். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் தொடங்கி , சமீபத்திய கார்கில் போர் வரையிலும் இந்நாட்டிற்காகத் தன்னுயிர் தந்த தமிழர்களின் தியாகம் அளப்பரியது. இந்நாட்டிற்கு வரி செலுத்தி, வாக்கு செலுத்தி மற்ற எல்லா மாநிலங்களையும் காட்டிலும் பற்றுறுதி மிக்கக் குடிமக்களாகத் திகழும் தமிழர்களைத் தொடர்ச்சியாக அவமானப்படுத்தி, காயப்படுத்தி வருவதன் மூலமாக மத்திய அரசு தமிழர்களை மாற்றாந்தாய் மக்களாகத்தான் பார்க்கிறது என்பதை உறுதி செய்யும் அறிவிப்பாகதான் மத்திய அரசின் இந்த அறிவிப்பு அமைந்திருக்கிறது.

சங்க காலம் தொடங்கித் தமிழரின் வாழ்வியலில் இரண்டற கலந்துள்ள பெருமிதப்பண்டிகை பொங்கல் திருவிழாவாகும். தமிழரின் பண்பாட்டு விழுமியத் திருவிழாவான பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளிக்க மறுப்பதன் அரசியல் எம்மை இந்நாட்டின் மக்கள் இல்லை என மத்திய அரசே அறிவித்ததற்குச் சமம்.

அதுவும் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் இந் நாட்களில் இது போன்ற அறிவிப்பு வெளியிடுவதற்கான உள்நோக்கம் தமிழர்களைச் சீண்டி பார்ப்பது அன்றி வேறென்ன…?
ஏற்கனவே இவ்வருடமாவது சல்லிக்கட்டு நடக்குமா என்கிற எதிர்பார்ப்பிலும், ஆற்றாமையிலும் இளைஞர்களும், மாணவர்களும் தன்னெழுச்சியாகப் போராடி வரும் இக் காலச்சூழலில் இது போன்ற அறிவிப்பினைத் திட்டமிட்டு வெளியிடும் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு போராடி வரும் தமிழர்களைச் சல்லிகட்டுப் பிரச்சனையிலிருந்து திசைத்திருப்ப இது போன்ற அறிவிப்பினை வெளியிடுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
எனவே மத்திய அரசு உடனே இதில் கவனம் செலுத்தி , வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பினைத் திரும்பப்பெற்று.. கொதித்துப் போய் இருக்கும் தமிழர் நிலத்தைப் போராட்டக்களமாக மாற்றிட வேண்டாம் எனக் கோருகிறேன். மேலும் தமிழர்களின் தேசிய விழாவான பொங்கல் பண்டிகையை தேசியப் பண்டிகையாக அறிவித்துக் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்றும், மறுக்கும் பட்சத்தில் தமிழர்களை ஒரே குடையின் கீழ் திரட்டி நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக மாபெரும் போராட்டங்களில் ஈடுபடும் என எச்சரிக்கிறேன்.

– இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

முந்தைய செய்திபத்திரிகையாளர் சந்திப்பு – சிவாஜிகணேசன் சிலைக்கு மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்கக் கோரி தமிழக அரசிடம் மனு
அடுத்த செய்திவிவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்து இழப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்