பத்திரிகையாளர் சந்திப்பு – சிவாஜிகணேசன் சிலைக்கு மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்கக் கோரி தமிழக அரசிடம் மனு

25

நடிகர் திலகம் பெருந்தமிழர் சிவாஜிகணேசன் சிலைக்கு மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்கக் கோரி தமிழக அரசின் தலைமைச் செயலர், தமிழ் வளர்ச்சி துறை மற்றும் கலாச்சாரத் துறை செயலாளர், மற்றும் செய்தி விளம்பரத்துறை செயலாளர், ஆகியோர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சார்பாகக் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தமிழக அரசிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது தொடர்பாக இன்று 09-01-2017 காலை 11 மணிக்குச் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் சீமான் அவர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் வெளியிட்ட கோரிக்கை மனுவின் நகலில் கூறியிருப்பதாவது,

சென்னை காமராஜர் சாலை, ராணிமேரிக் கல்லூரிக்கு எதிரில் தற்போது அமைந்துள்ள நடிகர் திலகம் பெருந்தமிழர் சிவாஜிகணேசன் திருவுருவசிலையினை அகற்ற மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசும் மாற்று இடத்தில் அவரின் மணிமண்டபத்தோடு திருவுருவசிலையை வைக்கச் சம்மதித்துள்ளது. அதே சமயம் தமிழகத்தின் பல்வேறு மக்கள் வந்து செல்லக்கூடிய சுற்றுலாத் தளமாக விளங்குகிற மெரினா கடற்கரையில் மக்களின் பார்வையில் படும் படி மேற்கண்ட சிலையை அமைப்பது சரியான தேர்வாக இருக்கும் என நான் நம்புகிறேன். இத்தேசத்தின் விடுதலைக்காகப் போராடிய பல்வேறு வீரர்களைத் தமிழ் மக்களின் மனதில் சென்றடைய செய்த மிகப்பெரிய கலைஞன் தமிழ்த்திரையுலகின் தன்னிகரற்ற கலைஞனைக் கவுரவிக்கும் விதமாக மேற்கண்ட சிலையினை மெரினா கடற்கரையில் போக்குவரத்தினைப் பாதிக்காத வகையில் மாற்று இடத்தில் அமைக்குமாறு பணிவன்புடன் நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுகொள்கிறேன்.

– இவ்வாறு அந்தக் கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

முந்தைய செய்திபண மதிப்பிழப்பும் மக்கள் பரிதவிப்பும்! பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை
அடுத்த செய்திபொங்கல் பொதுவிடுமுறை கட்டாயமல்ல என்கிற மத்திய அரசின் அறிவிப்பு தமிழ்த்தேசிய இனத்தையே அவமதிக்கிற கொடுஞ்செயல் – சீமான் ஆவேசம்.