பன்முகத்தன்மை கொண்ட ஆளுமை ஐயா சோ இராமசாமி – சீமான் இரங்கல்

40

மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் நடிகரும் நாடக ஆசிரியருமான சோ இராமசாமி அவர்கள் இன்று 06-12-2016, புதன்கிழமை அதிகாலையில் காலமானார். அவரது மறைவையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

தேர்ந்த நகைச்சுவை நடிகர், நாடக ஆசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், அரசியல் விமர்சகர், வழக்கறிஞர் என்று பல துறைகளில் தன் அறிவாற்றலால் உச்சத்தைத் தொட்ட ஆளுமை சோ இராமசாமி அவர்களின் மரணச் செய்தி மனவருத்தத்தைத் தருகிறது.

தான் கொண்ட கருத்தை எதற்கும் அஞ்சாமல் எடுத்துவைக்கும் துணிச்சல், அதற்கு அவர் சேர்க்கும் வலுவான வாதங்கள், எள்ளல் கலந்த எழுத்துக்கள் போன்றவை அக்கருத்திற்கு எதிரானவர்களையும் கவரும் தன்மை உடையது.
46 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக ஒரு இதழ் நடத்தி இன்றளவும் பல வாசகர்கள் துக்ளக்கில் அவர் எண்ணங்களையும் எழுத்துக்களையும் படிக்கக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதே அவரின் எழுத்தாளுமைக்குச் சான்று.

திரைத்துறையில் பல நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் சோ அவர்கள் அதில் தனி முத்திரை பதித்தவர். திரையில் அவரின் தனித்தன்மையான உடல்மொழி பலரை கவர்ந்தது. அதே போல் அவரது அரசியல் விமர்சனங்களும் வித்தியாசமானவை, மிகக் கூர்மையானவை. தன்னுடைய விமர்சனங்களில் தவறிருப்பின் அதைத் தயங்காமல் ஒப்புக்கொண்ட நேர்மையாளராக இருந்தார்.

கடந்த தமிழக அரசியல் வரலாற்றில் பல நேரங்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஐயா சோ அவர்களின் பங்கு இருந்தது என்பது அனைவரும் அறிந்தது. அவரின் பல நிலைபாடுகளில் மாற்றுக்கருத்துக் கொண்டிருந்தாலும் அவரின் ஆளுமையை மதிக்காமல் இருக்க முடியாது.

ஐயா சோ இராமசாமி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் துக்ளக் வாசகர்களுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன்.

சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.

முந்தைய செய்திமனஉறுதி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வாழ்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை, காலநதியினால் கரைத்துவிட்டுச் செல்ல முடியாத மாமலை! – சீமான் புகழாரம்
அடுத்த செய்திஇனியவளே உனக்காக – புத்தக வெளியீட்டு விழா | சீமான் சிறப்புரை