மாணவர் லெனின் குடும்பத்துக்கு 25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மாணவர்களின் கல்விக்கடன்கள் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும் – நாம் தமிழர் மாணவர் பாசறை வலியுறுத்தல்

27

மாணவர் லெனின் குடும்பத்துக்கு 25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மாணவர்களின் கல்விக்கடன்கள் முழுவதையும் அரசே ஏற்க வேண்டும் – நாம் தமிழர் மாணவர் பாசறை வலியுறுத்தல்
lenin-student-suicide-education-loan
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கல்விக்கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று வங்கி கொடுத்த அழுத்தத்தால் மதுரை அவுனியாபுரத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் லெனின் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஏற்கனவே, வங்கிகள் கொடுத்த நெருக்கடியால் கடன்தொல்லை தாங்க முடியாது இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நாடு முழுக்க தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இன்றும் அது தொடர்ந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில், மாணவர்களும் தற்கொலை செய்துகொண்டிருப்பது மிகுந்த கவலையையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

ஒரு சமூகத்தைப் பண்பட்ட சமூகமாக மாற்றுவது கல்விதான். கல்வியிலே முழுமையான தன்னிறைவு பெருகிறபோதுதான் சமூக மாற்றங்களும், வளர்ச்சிகளும் ஏற்படத் தொடங்குகிறது. அரசாங்கம் என்ற ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டதுகூட கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் பரவலாக்கப்பட்டு அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காகத்தான்! மக்களுக்குக் கட்டணமில்லாது தரமான கல்வியை அளிக்க வேண்டியது ஒரு அரசின் தலையாயக் கடமை. அதனை கடன்வாங்கிப் பெற வேண்டிய நிலையில் வைத்திருப்பது பெருங்கொடுமையாகும். இதனைத்தான் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி செயற்பாட்டு வரைவு, ‘கல்வி என்பது கடன் அல்ல! கடமை’ என வரையறுத்து, அனைவருக்கும் ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்விவரை இலவசம், மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன்கள் முற்றிலும் தள்ளுபடி என அறிவித்தது. ஆனால், ஆளுகிற அரசுகள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தனைப் பொருட்களிலும் கல்விக்கென்று வரியைப் பிடித்துக்கொண்டு கல்வியைக் காசுக்கு விற்கிறது.

தற்கொலை செய்துகொண்ட லெனின் ஏழ்மைக்குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், தனது பொறியியல் படிப்பிற்காக 1.90 இலட்சம் ரூபாயை பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து கடனாகப் பெற்றுள்ளார். பாரத ஸ்டேட் வங்கியானது தனது பங்கினை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விற்றுள்ளதால் அந்நிறுவனமானது அடியாட்களை அனுப்பி கடனை கட்டுமாறு லெனினின் குடும்பத்தை மிரட்டியுள்ளது. படிப்பை முடித்து ஒரு மாத காலமே ஆன நிலையில் கடனைக் கட்டச் சொல்லி தொந்தரவு கொடுத்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான லெனின் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு டிராக்டர் தவணைத்தொகையை கட்டாத தஞ்சை விவசாயி பாலனை தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும், காவல்துறையினரும் மிரட்டி பலபேர் முன்னிலையில் அடித்துதைத்தது நமக்கு நினைவிருக்கலாம். ஏறக்குறைய அதே அணுகுமுறையைத்தான் ரிலையன்ஸ் நிறுவனமும் கையாள்கிறது. இதனால்தான், மாணவர் லெனினின் தற்கொலையும் நிகழ்ந்திருக்கிறது. இந்தப் போக்கினை உடனடியாகத் தடுத்து நிறுத்தாவிட்டால், ‘விவசாயி தற்கொலை’ என்ற செய்தியோடு இனி, ‘மாணவர் தற்கொலை’ என்பதும் வாடிக்கையான செய்தியாக மாறிவிடும்.

எனவே, இவ்விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவண்ணம் தடுக்க வேண்டும். அத்தோடு, பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்திற்கு 25 ரூ இலட்ச ரூபாய் இழப்பீட்டைப் பெற்றுத்தர வழிவகை செய்ய வேண்டும். ‘வேலை கிடைக்காத மாணவர்களின் கடன் மட்டும் தள்ளுபடி செய்யப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதியோடு நிறுத்திக்கொள்ளாமல் ஒட்டுமொத்த மாணவர்களின் கல்விக்கடன்களையும் தமிழக அரசே ஏற்று மாணவச்சமுதாயத்தைக் காக்க வேண்டும் என நாம் தமிழர் மாணவர் பாசறை வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்திபெருந்தலைவர் காமராசர் 114வது பிறந்தநாள் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – அம்பத்தூர்
அடுத்த செய்திமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம் 24-07-2016