தமிழினத்தின் தனித்துவமிக்கப் புரவலரும், தமிழ்தேசிய அரசியலை எண்ணற்றவர்களின் இதயத்தில் விதைத்தவருமான பெருந்தமிழர் ஐயா நா.அருணாசலம் அவர்களின் மறைவு தமிழ்தேசிய அரசியலுக்குப் பேரிழப்பு. வாழ்வாங்கு வாழ்ந்த மாமணி ஐயா ஆனா.ரூணா இல்லம் சென்று செந்தமிழன் சீமான் புகழஞ்சலி செலுத்தினார்..
1990களின் முற்பகுதியிலிருந்து தமிழர் நலன் மற்றும் உரிமை சார்ந்த அணைத்துவகையான போராட்ட ஒருங்கிணைப்பு வடிவங்களுக்கும் வாரிக்கொடுக்கும் வள்ளலாக, காத்து நிற்கும் போராளியாக எல்லாத் துயர தருணங்களிலும் இந்தத் தமிழினத்துக்குத் துணை நின்ற ஐயா ஆனா.ரூனா அவர்கள் தமிழ்தேசிய விடுதலை அரசியலில் என்னென்றும் போற்றப்படுவார். வரலாற்றுச் சிறப்புமிக்கப் போராட்டங்களைப் பெரும் துணிவோடு நடத்தி, பல வலிமைமிக்க இளைஞர்களை இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் தந்தவர் என்றால் மிகையாகாது. நந்தன் வழி என்ற சமூக அரசியல் புரட்சிகர ஏட்டை வெகு சிரமத்திற்கிடையே நடத்தி அடுத்தத் தலைமுறை பிள்ளைகளுக்குத் தமிழினத்தின் நியாய அரசியல் வகுப்பெடுத்தவர்.
தமிழ் வழிக்கல்விக்கான பாடதிட்டங்களை உருவாக்கி பரந்தப்பட்ட சூழலுக்குத் தகுந்தாற்போல் வடிவமைக்கப் பெரும் சிரத்தை எடுத்தவர். தமிழிசைக்கான தனித்துவத்தைத் தமிழர்கள் மத்தியில் கொண்டுசெல்ல, அமைப்பு கட்டி போராடியவர். தமிழ் சான்றோர் பேரவையின் நிறுவனராக இருந்து எண்ணெற்ற அறிவுக்களஞ்சியங்களை உருவாக்க முனைந்தவர். 26 தமிழர் தூக்கு வழக்கிற்கான நிதிதிரட்டலில் பெரும் பங்குவகித்தவர். 2009 இனப்படுகொலைக்குபின் மொழி, கலை, இலக்கியம், பன்பாடு என எல்லா வகையிலும் மிகநெருக்கடியாக இந்தத் தமிழினம் தத்தளித்துக்கொண்டிருக்கும் சூழலில், தனது வாழ்நாள் முழுக்கத் தமிழின மீட்சிக்காகத் தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்த ஐயா ஆனா.ரூணா இன்று நம்மிடம் இல்லையென்பது மாபெரும் பின்னடைவு. இறுக்கமான தலைநகரான சென்னையில், தமிழரல்லாதோர் மட்டுமே ஆட்கொண்டுள்ள தொழில் துறையில் தமிழராக ‘மாணவர் நகலகம்’ என்ற பெரிய வலைப்பின்னல் தொழற்கூடத்தைத் தொடங்கி இந்நாள்வரை வெற்றிகரமாக உழைத்துவரும் அனைவருக்கும் நாம்தமிழர் கட்சி கடமைப்பட்டுள்ளது.