நீர்வளப் பெருக்கம் – நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு | மக்களரசு

1116

நீர்வளப் பெருக்கம் – நாம் தமிழர் ஆட்சி செயற்பாட்டு வரைவு | மக்களரசு | நாம் தமிழர் கட்சி

பல்வேறு பெருமைகளைத் தன்னகத்தே கொண்டதுடன் நீண்ட நெடிய வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்ட இனமாகவும் தமிழ்த்தேசிய இனம் விளங்குகிறது. ஓடுகின்ற நீரைத் தேக்கி வைத்து அதைப் பாசனத்திற்கும், பயிர் வேளாண்மைக்கும் பயன்படுத்த முடியும் என உலகத்திற்கு உரைத்தவன் எம் பாட்டன் கரிகால் பெருவளத்தான். 2000 ஆண்டுகளுக்கு முன்பாக மணற்பாங்கான ஆற்றின் குறுக்கே, ஓடிக்கொண்டிருக்கும் பெருவெள்ளத்தைத் தடுத்துக் கல்லணை கட்டி நீர் மேலாண்மையை நிலை நாட்டியது தமிழினம். எகிப்தின் நைல் நதியின் குறுக்கே தடுப்பணை கட்டும் முயற்சி நடந்து தோல்வியில் முடிந்ததாக வரலாறு அறிவிக்கிற காலத்தில் தமிழன் வெள்ளப்பெருக்கெடுத்தோடி வரும் காவிரி நீரைத் தடுத்து உலகத்திற்கே உதாரணமாக நின்றான்.

பண்டைய தமிழகத்தின் நீர் ஆதாரங்கள்:

  • தமிழனின் தாய்த்தொழில் வேளாண்மை. வேளாண்மை செழிக்கக் காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, தாமிரபரணி என முப்பத்திரெண்டு ஆறுகள் வற்றாத உயிராறுகளாகத் தமிழர் நிலத்தில் நிறைந்து ஓடிப் பண்டைய தமிழகத்தை வளம் கொழிக்கச் செய்தன.

காவிரி, தென்பெண்ணை, பாலாறு தமிழ்
கண்டதொரு வையை பொருநைநதி என
மேவிய ஆறு பல ஓடத்
திருமேனி செழித்த தமிழ்நாடு”

என்று பாடி உவகை கொண்டான் நம் பாட்டன் பாரதி.

  • வடகிழக்குப் பருவமழை, தென்மேற்குப் பருவ மழை என வான்மழை தந்த அமுதங்களாய் இரு பருவ மழைக்காலங்கள் பருவம் தவறாமல் பொழிந்து தமிழ்மண்ணைச் செழிக்க வைத்தன. வான்மழை நீரையும், மலையில் இருந்து உருவாகி நிலம் நோக்கி ஓடி வரும் ஆற்று நீரையும் சேகரிக்க ஏரி, கண்மாய், கரணை, தாங்கல், தருவை, ஏந்தல், ஊருணி, குளம், குட்டை எனப் பல்வகையான நீர்நிலைகளை உருவாக்கி வைத்துத் தமிழ்நிலத்தைச் செழிக்க வைத்தார்கள் தமிழர்கள். 1970 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படித் தமிழர் நிலத்தில் தோராயமாக 39 ஆயிரம் நீர்நிலைகள் இருந்தன.
  • 1960 ஆம் ஆண்டுவாக்கில் தோராயமாக 50 இலட்சம் ஏக்கர் இருபோக விளைச்சலைத் தரக் கூடிய நன்செய் நிலங்கள் இருந்தன. இன்றைய அளவில் அவை 35 இலட்சம் ஏக்கர் நிலங்களாகக் குறைந்திருக்கிறது என்று கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் மழைநீர்:

  • தமிழகத்தில் ஓராண்டிற்குக் கிடைக்கும் மழைநீர் 4,000 டி.எம்.சி.
  • அதில் நாம் பயன்படுத்தும் நீரின் அளவு 1,500 டி.எம்.சி.
  • வீணாகக் கடலில் கலக்கும் நீரின் அளவு 2,500 டி.எம்.சி.
  • இதில் ஆற்று நீரில் இருந்து கிடைக்கும் நீர் 850 டி.எம்.சி
  • கிணறுகள் மூலம் கிடைக்கும் நீரின் அளவு 450 டி.எம்.சி.
  • கர்நாடகம்- ஆந்திராவில் இருந்து கிடைக்கும் நீர் 400 டி.எம்.சி.

இவ்வாறு நமக்கு இயற்கையாகக் கிடைக்கிற நீர் வளம் சரியாகச் சேகரிக்கப்படாமல், பாதுகாக்கப்படாமல், பயன்படுத்தப்படாமல் கடந்த 50 ஆண்டுக்காலத் திராவிடக் கட்சிகளின் தன்னலம் சார்ந்த, ஊழல், இலஞ்சம் நிறைந்த ஆட்சி முறைகளால் நீர்வளத்தில் தன்னிறைவு அடையாமல் பற்றாக்குறையால் தமிழகம் தவித்து வருகிறது.

வீணாய்ப் போன நீர் ஆதாரங்களும், தொலைந்துபோன நீர் நிலைகளும்:

  • சென்னையின் கூவம் நதி சாக்கடைக் கால்வாயாக ஓடிக்கொண்டிருக்கிறது.
  • கெடிலம் ஆறு கழிவு நீர் கலந்து சீரழிந்துபோனது.
  • நொய்யலாறு சாயக்கழிவு கலந்து கொடிய நச்சு கலந்த நீராகி நாசமானது.
  • குண்டாறு, வேம்பாறு, பச்சையாறு எனப் பல ஆறுகள் ஆக்கிரமிப்புகளால் அழிந்து போயின.
  • பாலாற்றில் நீர்வரத்தே நின்று போனது.
  • ஏரி, குளங்களின் நீர்ப் பரப்பினில் மூன்றில் ஒரு பங்கு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது.
  • இயற்கையாக உருவான நீர்வழிப்பாதைகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கிறது. ஆக்கிரமிப்புகளால் மறிக்கப்பட்டிருக்கிறது.
  • அளவற்ற ஆற்று மணற் கொள்ளையால் ஊற்றுநீர் வளமும் வற்றிப்போய்விட்டது.
  • ஏரி, குளங்கள், கரணைகள் தனியார்களால் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
  • நீரின்று அமையாது உலகு என்று போதிக்கிறது தமிழ்மறை. எனவே நீர்நிலைகளைக் காத்திட, நீர் ஆதாரங்களைப் பெருக்கிட, ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்வழித் தடங்களைப் புதுப்பித்திடப் பல்வேறு செயல்திட்டங்களை அமையவிருக்கும் நாம் தமிழர் அரசு உடனடியாக நிறைவேற்றும் என உறுதியளிக்கிறது.

நாம் தமிழர் அரசு செயல்படுத்தும் நீர்மேலாண்மை முதன்மைப் பணிகள்:

  • ஆறுகளில், நீர்நிலைகளில் கலக்கும் கழிவுநீர் முற்றிலுமாகத் தடுக்கப்படும்.
  • ஆறுகளுக்கான நீர்வழிப் பாதைகளை ஒழுங்கமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் வழித் தடங்கள் சீர்படுத்தப்படும்.
  • நீர் நிலைகளின் கரையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு,நீர் நிலைகளின் இயற்கைப் பரப்பு மீட்டெடுக்கப்படும். .
  • ஏரி, குளங்கள், ஆறுகள் போன்ற நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு அதன் கரைகள் வலுப்படுத்தப்படும்.

நீர்நிலைகளைச் சுற்றி மரங்கள்:

  • ஆறு, ஏரி, கண்மாய், கரணை, ஏந்தல், குளம், குட்டை கரைகளைச் சுற்றி வேப்பமரம், புங்கைமரம், பனிக்கொன்றைமரம், நாவல்மரம், கனிக்கொன்றைமரம், ஆலமரம், பூவரசுமரம், மருதமரம், அரசமரம், தேக்குமரம், கோங்குமரம் மற்றும் பனைமரங்கள் நட்டு வளர்க்கப்பட்டு உயிர்ச்சூழல், பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு ஏற்றாற் போல் நீர் நிலைகள் மாற்றப்பட்டுப் பாதுகாக்கப்படும்.

நீர் நிலைகளின் கரைகளைச் சுற்றி நடப்படும் பனைமரங்கள் நிலத்தடிக்குக் கீழே ஆயிரம் அடிவரை சென்று நீரைப் பாதுகாத்து வைத்துக்கொள்ளும். அது வேளாண்மைக்குப் (விவசாயத்திற்குப்) பயன்படும். தவிரப் பனைமரத்தில் வௌவால்கள் சென்று அடைந்து தங்கும். அந்தப் பகுதி விவசாய நிலங்களில் உள்ள பூச்சிகளை உண்டு வாழும். வேளாண் தொழிலுக்கு நண்பனாக இருக்கும். அதனால் நீர்நிலைகளைக் காத்து உழவுக்கு உதவியாக நிற்கும் பனை மரங்கள் வளர்க்கப்படும்.“

  • அனைத்து நீர்நிலைகளும் முள்வேலி அமைக்கப்பட்டு,மின் விளக்குகள் பொருத்தப்பட்டுச் சிறப்புக் காவல்படையினரைக் கொண்டு பாதுகாக்கப்படும்.
  • ஏரி, குளங்களுக்கான நீர்வரவுத் தடங்களில் இருக்கிற ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுச் சீரமைக்கப்படும்.
  • நீர்த் தேவை அதிகமாகத் தேவைப்படும் இடங்களில் புதிய நீர்வரவுத் தாரைகள் உருவாக்கப்படும்.
  • ஆழ்துளைக் குழாய்களின் மூலம் நீரை எடுப்பது படிப்படியாகக் குறைக்கப்படும். ஏரி கண்மாய், குளம் குட்டைகளில் நீரைச் சேமித்தால் ஆழ்துளைக் குழாய் நீர் தேவையிருக்காது. இதனால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும்.

புதிய ஏரிகளுக்குப் பெரும்பாட்டன்களின் பெயர்கள்

  • கரிகால் சோழன்
  • இராசராச சோழன்
  • இராசேந்திரச் சோழன்
  • பராந்தகச் சோழன்
  • ஆதித்த கரிகாலச் சோழன்
  • குந்தவை நாச்சியார்
  • இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார்

போன்ற நமது பெரும்பாட்டன்களின் பெயர்களில் 500 மற்றும் 1000 ஏக்கர் பரப்பளவில் புதிய ஏரிகள், கண்மாய்கள் உருவாக்கப்படும். அவற்றுக்கான நீர்வரத்துக் கால்வாய்கள் வெட்டப்படும். அவற்றின் கரையோரங்களில் பல்வேறு பெரு மரங்கள் நடப்படும். அந்த நீர் நிலைகளைப் பாதுகாத்திடச் சிறப்புக் காவல் மையங்கள் உருவாக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்ட சூழலியல் மையங்களாக மாற்றப்படும்.

  • ஒவ்வொரு நூறு குறுக்கம் நிலங்களுக்கும் 25 குறுக்கம் அளவில் புதிய குளங்கள் வெட்டப்பட்டு மழைநீரைத் தேக்கி வைத்து வேளாண்மைத் தொழில் வளப்படுத்தப்படும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அரசு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
  • நீரை உறிஞ்சி நீர்க் கொள்ளையடிக்கும் தனியார் நிறுவனங்கள் தடை செய்யப்படும். அவர்களுடனான ஒப்பந்தங்கள் திரும்பப் பெறப்படும்.

பாண்டியாறு, பொன்னம்புழா நீர்த்தேக்கத் திட்டம்

  • 1955-ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட பாண்டியாறு – பொன்னம்புழா நீர்த்தேக்கத் திட்டத்திற்குக், கூடலூரில் இருந்து 5.கிலோ மீட்டர் தொலைவில் அடிக்கல் நாட்டப்பட்டது. பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களைக் கொண்டு கேரள அரசு கொடுத்த தொடர் அழுத்தத்தால் 72ஆ-ம் ஆண்டு அந்தத் திட்டத்தைக்கைவிட்டார்கள். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் வேளாண் நிலங்கள் பலனடைந்திருக்கும். கூடலூர் உள்ளிட்ட பகுதிகள் சிறந்தசுற்றுலாத்தலமாகியிருக்கும். 40 மெகாவாட் நீர்மின் உற்பத்தியைச் செய்வதோடு, அந்த நீரைப் பெரிய குழாய்கள் மூலம் மாயர் ஆற்றில் இணைத்துப் பவானி ஆற்றோடு கலக்கச் செய்திருந்தால் அந்த பகுதியின் வேளாண் தொழிலையும் பெருக்கியிருக்க முடியும். இதுவரையிலும் ஆட்சியில் இருந்த திராவிடக் கட்சிகள் இதை நடைமுறைப்படுத்தவேயில்லை. நாம் தமிழரின் அரசு இதை முதன்மையாகச் செயல்படுத்தும்.

அதைப்போலவே

  • அத்திக்கடவு, -அவினாசி நீர்வளத் திட்டம்,
  • நல்லாறு, -ஆழியாறு பாசன விரிவாக்கத் திட்டம்,
  • பம்பா, அச்சன்கோவில்-, வைப்பாறு இணைப்புத் திட்டம்,
  • மதுரை மாவட்டம் அழகர் அணைத் திட்டம்
  • என நீண்ட காலமாக திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ள நீர்ப்பாசனத் திட்டங்கள் நாம் தமிழர் அரசு பதவியேற்ற இரண்டாண்டுகளுக்குள் முழுமையாக நிறைவேற்றும்.
  • தாமிரபரணி, நம்பியாறு, கருமேனியாறு வெள்ளநீர்க் கால்வாய்த் திட்டம் ஓராண்டுக்குள் நிறைவேற்றப்படும்.
  • குமரி மாவட்டத்தின் தாமிரபரணி ஆற்றுநீர் முழுவதும் பாசனத்திற்குப் பயன்படுத்தப்படும் வகையில் புதிய திட்டம் நிறைவேற்றப்படும்.
  • பத்தாண்டுக் காலமாக மறுக்கப்பட்டு வரும் நெய்யாற்றின் இடதுபுறக் கால்வாய்ப் பாசன உரிமை மீட்கப்படும்.
  • வீராணம் ஏரி தூர் வாரப்பட்டுக் கரைகள் வலுப்படுத்தப்பட்டு நீர்க்கொள்ளளவைக் கூடுதலாக்கிப் பாசனப்பரப்பு விரிவு படுத்தப்படும்.
  • தென்பெண்ணை, பாலாறு, காவிரி, வைகை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து ஆறுகளிலும் 15 கிலோ மீட்டருக்கு ஒரு நீர்த் தடுப்பணை கட்டிப் புதிய வேளாண் மண்டலங்கள் உருவாக்கப்படுவதுடன் மக்களின் குடிநீர்த் தேவையும் நிறைவு செய்யப்படும்.
  • தாமிரபரணி ஆற்றில் ஒவ்வொரு ஐந்து கிலோ மீட்டருக்கும் ஒன்றெனப் புதிய அணைகள் கட்டப்படும்.

மரங்களின் பேய்:

  • நிலத்தடியில் நாற்பதடிச் சுற்றளவுக்கும், ஆழத்திற்கும் நீர் வளத்தைச் சுத்தமாக உறிஞ்சிச் சுற்றி இருக்கும் காற்றில் உள்ள நீர்ச் சத்தையும் உறிஞ்சி மண் வளத்தை நீர்த்துப்போகச் செய்யும் மரங்களின் பேயான சீமைக்கருவேல மரங்கள் முற்று முழுதுமாக அழிக்கப்படும். இதற்கென்றே தனிப் பிரிவு ஒன்று ஏற்படுத்தப்படும்.
  • தமிழகம் முழுதும் சுற்றுப்புறச் சூழலுக்குக் கொடும் பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக்கருவேல மரத்தை முற்றாக அழிக்கும் பணி விரைவாக முடிக்கப்படும். இதனால் நீர்வளம் பாதுகாக்கப்படும்.

சமூக நலக்கேடுகள்:

  • சமூக நலக் காடுகள் என்று மலைப்பிரதேசம் எங்கும் யூக்கலிப்டஸ் மரங்களை நட்டு வைத்தார்கள். கருவேல மரங்களைப் போன்றே பூமிக்கடியில் நீர்வளத்தை சிதைத்துக் காற்றில் உள்ள ஈரப்பத்தையும் சிதைத்து, மேகங்களையும் கலைத்துவிடும் தன்மை கொண்ட இந்த மரங்கள் முற்று முழுதுமாக அழித்தொழிக்கப்படும். சமூக நலக்காடுகள் என்ற பெயரில் சமூக நலக் கேடுகளைச் செய்து கொண்டிருக்கும் இந்த மரங்கள் போர்க்கால அடிப்படையில் அகற்றப்படும். அதற்கு மாற்றாகத் தேக்கு, சவுக்கு, புளி, வேம்பு, நாவல், மூங்கில் போன்ற மர வகைகள் நடப்படும்.

தனியார் மணல் கொள்ளை:

  • தமிழக நீர் நிலைகளில், தனியாரால் நிகழ்த்தப்பட்டு வரும் ஆற்று மணற்கொள்ளை அடியோடு ஒழிக்கப்படும். அரை அங்குலம் ஆற்று மணல் உருவாவதற்கு நூறு ஆண்டுகள் ஆகும். ஆனால் ஒரு நாளைக்கே முப்பதடி ஆழத்திற்கும் மேலாக ஆற்றுமணலைச் சுரண்டி, ‘மணல் கொள்ளை’ நடந்தித்கொண்டிருக்கிறார்கள். அதை இந்தக் கொள்கை அற்ற அரசே நடத்திக்கொண்டு இருக்கிறது.
  • மணற்கொள்ளையால் ஆற்றுப்படுகையில் உள்ள தென்னை பனை மரங்கள்கூடப் பட்டுப்போய்ப் பட்டமரமாய் நிற்கின்றன. மூன்றுபோகம் விளைந்த ஆற்றுப்படுகை வறண்ட நிலமாகியிருக்கிறது. அதனால் நாம் தமிழர் அரசு மணற்கொள்ளையைத் தனிப்படைகளை அமைத்து முழுதுமாகத் தடுக்கும்.

“தாமிரபரணி ஆற்றில் ஒவ்வொரு ஐந்து கிலோ மீட்டருக்கும் ஒன்றெனப் புதிய அணைகள் கட்டப்படும்”

முந்தைய செய்திமுதல் கட்ட தேர்தல் சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரல் – முதல் நாள்
அடுத்த செய்திஇராணிப்பேட்டை தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை