தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சிமுறை – நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு

544

தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சிமுறை – நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு | நாம் தமிழர் கட்சி

உலகில் வளர்ந்த நாடுகள் அனைத்தும் தன் குடி மக்களை அன்பான சர்வாதிகார ஆட்சிமுறையின் கீழ்தான் வைத்திருக்கின்றன. நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும், ஒழுங்கிற்கும் கட்டுப்பாடற்ற ஆட்சிமுறை தடையாகத்தான் இருக்கும். நாம் தமிழர் அரசு ஒவ்வொரு குடிமகனின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கவனத்தில் கொண்டே அன்பான சர்வாதிகார ஆட்சிமுறையைக் கடைபிடிக்கிறது.

ஆட்சி முறை:

  • தன்னலம் சார்ந்த கொடுமையான ஆட்சி முறையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
  • நமது ஆட்சிமுறை- ‘தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சிமுறை’

குழந்தை:

  • ஒரு குழந்தை சாகக் கிடக்கிறது. அந்தக் குழந்தையைப் பிழைக்க வைக்கும் ஊசியும் மருந்தும் மருத்துவரிடத்தில் இருக்கிறது. ஊசியைப் போடும்போது குழந்தைக்கு வலிக்கும். போட்டால்தான் குழந்தை பிழைக்கும். வலியைப் பொருட்படுத்தாமல், ஊசியைப்போட்டுக் குழந்தையைக் காப்பாற்றும் செயல்தான் தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சிமுறை.

குழந்தைக்குப் பாடம்:

  • குழந்தையிடம், பாடத்தை ஏட்டில் மூன்று முறை எழுதிக்கொண்டு வா என்று ஆசிரியர் சொல்லும்போது, குழந்தையின் பார்வையில் ஆசிரியர் சர்வாதிகாரியாகத்தான் தெரிவார். ஆனால் நோக்கம், குழந்தை மனத்தில் பாடத்தை நன்றாக பதிய வைக்க வேண்டும் என்பதே. இந்தச் செயல்தான், ‘தன்னலமற்ற அன்பான சர்வாதிகார’ ஆட்சி முறை.

“ஊசியைப் போடும்போது குழந்தைக்கு வலிக்கும்; ஆனால் ஊசி போட்டால்தான் குழந்தை பிழைக்கும்”

“நாம் தமிழர் அரசு, மக்களின் கருத்துக்கானது அன்று. முழுக்க முழுக்க மக்களின் நலனுக்கானது”

பனை:

  • மட்டையைக் கழிக்காமல் பனைமரத்தை அப்படியே விட்டுவிட்டால் பதராகிவிடும். அதற்கு வலிக்குமே என்று பாராமல், வலியைப் பொருட்படுத்தாமல் கத்தியை வைத்து மட்டையைக் கழித்து விட்டால் தான் பனை பயன்தரும். அந்தப் பனையைச் செதுக்கிற முறைதான், ‘தன்னலமற்ற அன்பான சர்வாதிகார’ ஆட்சி.

பெருந்தலைவர் காமராசர்

  • முன்னாள் முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராசர் வைகை அணையைக் கட்டும் போது 20 கிராமத்தைச் சேர்ந்த மக்களை வெளியேற்றுகிறார். அவர்களுக்கு மாற்று இடத்தைக் கொடுக்கிறார். 20 கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கும் அது பெரும் இழப்பாகத் தான் இருந்தது. பிறகு அணையைக் கட்டிமுடித்த பிறகு திறந்து வைக்க முதல்வர் போகிறார். அப்போது 300 பேர் கொண்ட மக்கள் ஒன்றுகூடி கருப்புக் கொடிப் போராட்டம் நடத்துகிறார்கள். “ஐயா, திருப்பிப் போய் விடலாமா?” என்று பெருந்தலைவர் காமராசரிடம் கேட்கிறார்கள். வண்டியை விலக்கி ஓட்டு என்று சொல்கிறார். அணைக்கு அருகே அங்கு 10000 பேர், ‘காமராசர் வாழ்க’ என்றனர். இந்தச் செயல்தான், ‘தன்னலமற்ற அன்பான சர்வதிகார’ முறை.

லீ குவான் யூ

  • விடுதலைக்கு முன்பாக, ‘ஆசியக் கண்டத்தின் தீண்டத்தகாத நகரம்’ என்று இங்கிலாந்து பேரரசு போன்ற மேலை நாடுகளால் கூறப்பட்ட சிங்கப்பூரை, தான் பிரதமராகப் பதவியேற்றதும் ஆசியக் கண்டத்தின் மிகச் சிறந்த நகரமாக ‘லீ குவான் யூ’ மாற்றியமைக்கக் காரணம் அவரது, ‘தன்னலமற்ற அன்பான சர்வதிகார’ ஆட்சி முறைதான்.

செதுக்கி வளர்க்கும்:

  • வெளிநாட்டிற்குப் போகின்ற நமது மக்கள் அங்குள்ள சட்ட திட்டங்களை அப்படியே கடைப்பிடிக்கிறார்கள். இங்கே எச்சில் துப்பாதே, இங்கே சிறுநீர் கழிக்காதே, இந்தச் சாலையை மகிழுந்தில்(Car) இத்தனைக் கிலோமீட்டர் வேகத்தில் கடந்து செல் என்ற அந்த விதிகளை அப்படியே கடைப்பிடிக்கிறார்கள். நமது நாட்டு வானூர்தி நிலையத்தில் வந்து இறங்கியவுடன் அதை அப்படியே மறந்து விடுகிறார்கள். காரணம் அந்த நாடு, ‘தன்னலமற்ற அன்பான சர்வாதிகார’ முறையில் ஆட்சி செய்கிறது. இந்தச் சாலையை 60 கிலோமீட்டர் வேகத்தில் தான் கடந்து செல்லவேண்டும். இல்லை என்றால் ஓட்டுனர் உரிமம் திரும்ப பறிக்கப்படும் என்றிருப்பதால் பயப்படுகிறான். அப்போது அந்த முறைதான் வளர்கின்ற சமுதாயத்தைச் செதுக்கி வளர்க்கும்.

மக்கள் நலன்:

  • நாம் தமிழர் அரசு, மக்களின் கருத்துக்கானது அன்று. முழுக்க முழுக்க மக்களின் நலனுக்கானது.

 அதிகாரம் வலிமையானது, எமது அதிகாரம் எம் மக்களுக்கானது.
– செந்தமிழன் சீமான்