சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவரின் மர்ம மரணத்திற்கு நீதிவிசாரணை வேண்டும் – நாம் தமிழர் மாணவர் பாசறை

414

சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவரின் மர்ம மரணத்திற்கு நீதிவிசாரணை வேண்டும். மாணவர்களுக்கு கொடுக்கும் உளவியல்ரீதியான தொந்தரவுகளை தடுத்து நிறுத்த வேண்டும் -நாம் தமிழர் மாணவர் பாசறை அறிக்கை

சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவரின் மரணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை, தாம்பரத்தில் இயங்கும் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் அபிநாத் என்ற மாணவர் கல்லூரி வளாகத்திலுள்ள கிணற்றில் மர்மமான முறையில் சடலமாகக் கண்டடெடுக்கப்பட்டுள்ளார். விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் தனியார் கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட செய்தி அடங்குவதற்குள்ளாகவே நடந்துள்ள இந்தச் சம்பவமானது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.

கல்வியை சந்தைப்படுத்தினால் சிந்தனையே சந்தைப்படுத்தப்படும் என்கிறார்கள் அறிஞர்கள். ஆனால், இங்கு கல்வியானது விற்பனைப்பொருளாக மாறியிருக்கிறது; காசு இருந்தால்தான் கல்வி கற்க முடியும் என்ற நிலையிருக்கிறது. இதனால் வங்கியிலும், அக்கம்பக்கத்திலும் வட்டிக்கு கடன்வாங்கி தங்களுக்கு கிடைக்காத கல்வி தங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும் என பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அனுப்பி வைக்கிறார்கள். ஆனால், அவர்களின் நம்பிக்கையை தகர்க்கிறது இன்றையக் கல்விக்கூடங்கள். பாட்டு, நடனம், விளையாட்டு, ஓவியம், பேச்சு, எழுத்து, கவிதை, கட்டுரை என ஒவ்வொரு மாணவனும் ஒவ்வொரு திறமையைக் கொண்டிருப்பான். அதனைக் கண்டறிந்து அவர்களுக்கு நம்பிக்கையூட்டி சாதிக்கச் செய்வதற்கு வழிகாட்டுவதுதான் கல்விக்கூடங்களின் பணி. ஆனால், இன்றைக்கு இருக்கிற கல்விக்கூடங்கள் மதிப்பெண் என்ற ஒன்றை மட்டுமே இலக்காகக் கொண்டு, மாணவர்களுக்குள் இருக்கும் தனித்திறமைகளைக் குழிதோண்டிப் புதைக்கிற கொலைக்களமாக மாறி நிற்கிறது.

மதிப்பெண் குறைவாக வாங்கும் மாணவர்களை மற்ற மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்துவது, பெற்றோர்களை அழைத்துவரச் சொல்லிக் கண்டிப்பது, கல்விக்கூடத்தை விட்டே நீக்குவது போன்ற வன்முறைச்செயல்களிலும் பள்ளி, கல்லூரிகள் ஈடுபடுகிறது. கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வியைப் போதிப்பதுதான் கல்விக்கூடங்களின் வேலை. ஆனால், இங்குள்ள கல்விக்கூடங்கள் நன்றாக படிக்கும் மாணவர்களை மட்டும் தங்களது கல்விக்கூடங்களில் சேர்த்துக்கொள்கிறது. மதிப்பெண்ணானது, ஒரு பாடத்தை முழுமையாகக் கற்றோமா? இல்லையா? என்பதற்கான அளவுகோல்தானே ஒழிய, ஒரு மாணவனின் திறமைக்கான அளவுகோல் அல்ல என்பதை பள்ளி, கல்லூரிகளின் நிர்வாகங்கள் உணர வேண்டும். மேலும், மதிப்பெண்ணில் பின்தங்கிய மாணவர்களை வகுப்பறைக்குள் கடைசி இருக்கையில் அமர வைப்பது, அவர்களை தீண்டத்தகாதவர்கள் போல நடத்துவது, எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பது, அவர்கள் பாடத்தில் சந்தேகம் கேட்டால் கூட சொல்ல மறுப்பது, தரம்தாழ்ந்த சொற்களை பயன்படுத்துவது என ஆசிரியர்களும், நிர்வாகமும் கொடுக்கும் உளவியல்ரீதியான தொந்தரவுகளையும், அழுத்தங்களையும் நிறுத்த வேண்டும்.

கல்லூரிக்குள் ஆண்-பெண் பேச தடைவிதிப்பது, எதற்கெடுத்தாலும் மாணவர்களுக்கு அபராதம் விதிப்பது என விதிகளை வைத்திருக்கிறது பெரும்பாலான கல்லூரிகள். இத்தகைய விதிமுறையை வகுக்க எந்தச் சட்டம் சொல்கிறது? கல்லூரிக்குள்ளே விதிமுறைகள் என்ற பெயரில் கடைபிடிக்கப்படும் இதுபோன்ற கிடுக்கிப்பிடிகள் மாணவர்களின் இயல்பான சுதந்திரத்தைப் பறிக்கிறது; இறுக்கமான மனநிலைக்கு அவர்களை தள்ளுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் வளர்க்கப்படுவதால்தான் பெரும்பாலான மாணவர்களுக்கு சமூகம் பற்றிய பார்வையில்லாது தன் குடும்பம், தன் வாழ்க்கை என அவர்களின் உலகம் சுருங்கி நிற்கிறது.

எண்ணற்ற கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளும் வகுக்கும் கல்லூரிகளிலோ அடிப்படை வசதிகளான உணவு, சுகாதாரம்கூட சரியாக இருப்பதில்லை. அதனைக்கேட்டு மாணவர்கள் அமைதியான முறையில் போராடினால் அவர்களை கல்லூரியைவிட்டே நீக்குகிறது நிர்வாகம். இதனால்தான், மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராகப் போராடும்போது துணியைக்கட்டி முகத்தைக் மூடிக்கொண்டு போராடுகிறார்கள்.

மொத்தத்தில் கொத்தடிமைகள் போலத்தான் மாணவர்களை நடத்துகிறது பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள். இத்தகையப் போக்கினால்தான் மாணவர்கள் தற்கொலை என்ற தவறான பாதைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே, மாணவர்களுக்கு கல்விக்கூடங்களில் கொடுக்கப்படும் உளவியல்ரீதியான தொந்தரவுகளை தடுக்க தமிழக அரசானது தக்க வழிவகை செய்ய வேண்டும்.

சாய்ராம் கல்லூரி மாணவர் அபிநாத்தின் மரணம் தற்கொலை என்று கல்லூரி நிர்வாகம் கூறினாலும், அந்த மாணவருக்கு நீச்சல் தெரியும்; அவர் எப்படி கிணற்றில் மூழ்கி சாவார்? என்று சகமாணவர்கள் கேள்வியெழுப்புகிறார்கள். மேலும், மாணவரின் உடலில் காயங்கள் இருப்பதாகவும் கூறுகிறார்கள். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசானது தலையிட்டு உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திசாதிய ஆணவக்கொலை தமிழ்த்தேசிய இனத்தையே தலைக்குனிய வைக்கிறது – சீமான் சீற்றம்
அடுத்த செய்திதமிழினப் போராளி அய்யா.நகைமுகனின் இழப்பு தமிழ்ச் சமூகத்திற்கு பேரிழப்பு – செந்தமிழன் சீமான்