செங்கல்பட்டு மற்றும் வேளச்சேரி பகுதியில் நிவாரணப்பணியில் சீமான்

58

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தொடர்ந்து எட்டாவது நாளாக இன்று(13-12-15) செங்கல்பட்டு மற்றும் வேளச்சேரி தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று வீடு வீடாக நிவாரண உதவிகளை செய்தார்.

பாதிப்பிற்கு காரணம் மழையல்ல

மழையால் இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை, வரைமுறை இல்லாமல் நீரை திறந்து விட்டதுதான் இவ்வளவு பெரிய இழப்பிற்கு முழு காரணம். படிப்படியாக நீரை திறந்து விட்டு இருந்தால் இந்த அளவிற்கு இழப்பு ஏற்பட்டு இருக்காது. குறைந்தது முன்னறிவிப்பு செய்துவிட்டாவது நீரை திறந்துவிட்டு இருக்கலாம். இவ்வளவு பெரிய கவனக்குறைவான செயலை பொறுத்துக்கொள்ள முடியாது. எனவே அந்த துறை சார்ந்த அதிகாரிகளை விசாரித்து, இந்த அளவிற்கு பெரிய தவறு எப்படி நடந்தது இது முதல்வருக்கு தெரியுமா தெரியாதா என விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மத்திய மாநில அரசுகளுக்கு இடையே ஒற்றுமை இல்லை

மழை வெள்ளத்திற்கு முன்பு மட்டும் அல்ல வெள்ள பாதிப்பு ஏற்ப்பட்டதற்கு பிறகும் கூட இந்த மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை. இங்கே தமிழகத்தில் இலட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்ப்பட்டு இருக்கிறது. ஆனால் இங்கே ஒரு 50ஆயிரம் கோடி அறிவித்து மக்களுக்கு சேவை செய்ய முன்வராத மத்திய அரசு, புல்லட் ரயில் விட 98ஆயிரம் கோடி அறிவித்துள்ளது. இதை சிறிது காலம் கழித்து அறிவிக்ககூடாதா?. அப்படியென்றால் மத்திய அரசு இதை பொருட்படுத்தவில்லை என்றுதானே அர்த்தம். மாநில அரசு தன் மாமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளமன்ற உறுபினர்களை மக்களுக்கு நேரில் சென்று உதவுங்கள் என்று ஒரு அறிக்கை கூட விடவில்லை. பிறகு இங்கு எங்கே இருக்கிறது ஒருங்கிணைப்பு.

நோய் பரவும் ஆபத்து அதிகம்

சட்டமன்றத்தை கூட்டி விவாதம் நடத்த வேண்டும் மற்றும் விசாரணைக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் அப்போதுதான் என்ன நடந்தது, யார் ஏரியை திறந்தது இது முதல்வருக்கு தெரியுமா தெரியாதா என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும். சென்னை மாநகராட்சி முழுக்க குப்பைகளாக நிறைந்து கிடக்கிறது, சென்னை மாநகராட்சிக்கு தேவையான பணியாளர்களே இல்லை, எங்கு பார்த்தாலும் மற்ற மாநகராட்சி ஊழியர்கள் தான் வேலை செய்கிறார்கள், நாம் ஏற்கனவே டெங்கு வால் பெரிதும் பாதித்துள்ளோம், இப்படி நிர்வாகம் மோசமாக இருந்தால் இன்னும் எப்படி பாதிப்போம் என்று எண்ணிப்பாருங்கள்.

தமிழன் மட்டும்தான் இந்தியனாக இருக்கவேண்டுமா?

கேரளா மற்றும் கர்நாடக அரசு எப்போதுமே அந்த மாநில மக்களுக்காகதான் பேசும். அதன் அடிப்படையில்தான் முல்லைபெரியாறு அணை விடயத்திலும் உம்மன்சாண்டி பேசுகிறார். கேரளாவில் கம்மியுனிஸ்ட், காங்கிரஸ் எது ஆண்டாலும் அந்த மாநில கட்சியாகதான் செயல்படும் தேசிய கட்சியாக ஒரு போதும் செயல்படாது. அதுபோல் தமிழக அரசும் தமிழகத்தின் வளங்கள் அனைத்தும் தமிழகத்திற்கு மட்டும்தான் சொந்தம் என்று அறிவித்தால்தான் இதற்கு முடிவுவரும் என்று சீமான் கூறினார்.

முந்தைய செய்திகோட்டூர்புரம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரணப் பணிகள்
அடுத்த செய்திமத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை – சீமான்