ஆண்டுதோறும் பல இலட்சம் கோடிகளை வரியாக செலுத்தும் தமிழகத்திற்கு நிவாரண நிதியாக ஒரு இலட்சம் கோடியை ஒதுக்க முடியாதா?- மத்திய அரசுக்கு சீமான் கேள்வி

49
Naam Tamilar Seeman visits flood affected areas in Velacheri, Chennai

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கல்லுக்குட்டை, பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேற்று (08-12-15) பார்வையிட்டு, அவர்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கினார். அரிசி, ரொட்டி, போர்வை உள்ளிட்ட அத்திவாசியப் பொருட்களை நாம் தமிழர் கட்சியினர் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கே சென்று வழங்கினர்.

இன்று (09-12-15) திருவொற்றியூர், மணலி, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களைச் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கவுள்ளார்.
அங்கு செய்தியாளர்களிடம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது,

அரைநூற்றாண்டு காலமாக திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆண்டிருக்கிறது. அந்த ஆட்சியின் இலட்சணத்தை மழை இப்போது வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறது. சென்னையில் கழிவுநீர் வெளியேற வடிகால் இல்லை; மழைநீர் வெளியேற வாய்க்கால் இல்லை. தமிழகத்தின் தலைநகரிலே எந்தவித அடிப்படைக்கட்டமைப்பும் இல்லை. எல்லா ஏரிகளும் ஆட்சியாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. ஏரிகளை எல்லாம் ஆக்கிரமித்துவிட்டால் எப்படி நீர் வெளியேறும்? மக்கள்தான் ஏரிகளை ஆக்கிரமித்ததுப் போல தோற்றத்தை ஏற்படுத்தி இன்று மக்கள் மீது பழி போடுகிறார்கள் ஆட்சியாளர்கள். வட்டாட்சியருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும், மாமன்ற உறுப்பினருக்கும் தெரியாமலா மக்கள் ஏரியை ஆக்கிரமிக்க முடியும்? மக்கள்தான் ஆக்கிரமித்தார்கள் என்று சொல்கிற இவர்கள் ஆக்கிரமித்த மக்களுக்கு குடும்ப அட்டையும், மின் இணைப்பும் எப்படி வழங்கினார்கள்? அப்படியென்றால், அதிகாரிகளுக்குத் தெரிந்துதானே ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டது? அரைநூற்றாண்டு காலமாக ‘சாலைகளை சீரமைக்கிறோம்’, ‘வடிகால் அமைக்கிறோம்’ எனக்கூறி மக்களின் வரிப்பணத்தில் பல ஆயிரம் கோடிகளை வீணடித்து, மக்களை ஏமாற்றியிருக்கிறது இருபெரும் கட்சியின் ஆட்சியும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை என எங்களால் முடிந்த சிறுஉதவிகளை செய்கிறோம். ஆனால், வீடு உள்ளிட்ட அத்தனையையும் இழந்து நிற்கிற மக்களுக்கு இது ஈடாகாது. தற்காலிகமாக சில நாட்களுக்கானப் பொருட்களைத்தான் தந்திருக்கிறோம். பல இலட்சம் கோடி மக்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றபோது 60,000 கோடி நிதியை பாரதப்பிரதமர் ஐயா மோடி அந்த நாட்டிற்கு வழங்கினார். ‘ஈழத்தில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது வட்டியில்லாக் கடனாக 80,000 கோடியை இலங்கை அரசுக்கு இந்தியா வழங்கியது’ என இலங்கை அமைச்சரே கூறுகிறார். எல்லா நாட்டுக்கும் பல ஆயிரம் கோடிகளைக் கொட்டிகொடுக்கிற இந்திய அரசு, வரி செலுத்தி வாக்கு செலுத்தி வாழ்கிற சொந்த நாட்டு மக்களுக்கு இலட்சம் கோடியை ஒதுக்க முடியாதா? ஆட்சியாளர்கள் வானூர்தியிலும், உலங்கு ஊர்தியிலும் வெள்ளத்தைப் பார்வையிடுகிறார்கள். வானத்திலிருந்துப் பார்த்தால் எல்லாம் ஒரேமாதிரியாகத் தண்ணீராகத்தான் தெரியும். மக்களோடு மக்களாக வெள்ளத்தில் இறங்கிப்பார்த்தால்தான் வெள்ளச்சேதமும், இழப்பீடும் தெரியும். சில இடங்களில் மக்களைக் மீட்க மீட்புக்குழு பணம் கேட்டிருக்கிறது. வெள்ளச்சேதத்தைவிட இதுதான் மக்களுக்கு வேதனையளிக்கிறது. அதனால், மக்களேதான் தங்களைத் தாங்களே மீட்டு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அரசு ஒதுக்கிய இழப்பீட்டுத் தொகையானது மிகவும் குறைவானது. அதில் பல கோடிகளை ஸ்டிக்கர் அடித்து ஒட்டி விளம்பரப்படுத்துவதற்கே மாநில அரசு செலவு செய்துவிடுகிறது. இப்படி, மக்களுக்குச் செய்ய வேண்டிய அத்தியாவசியக் கடமைகளில்கூட அரசு விளம்பரம் தேடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முந்தைய செய்திசோழிங்கநல்லூர், வேளச்சேரி பகுதிகளில் நிவாரணப்பணிகள்
அடுத்த செய்திமாவீரர் நாள் 2015 சீமான் வீரவணக்க உரை – சேத்தியாதோப்பு கடலூர்