போராட்டக்களத்தில் நின்ற பெருமாட்டி மாரியம்மாள் அவர்களுக்கு சீமான் புகழ் வணக்கம்

107

6.11.2015 – செந்தமிழன் சீமான் கலிங்கப்பட்டியில்
அண்ணன் வைகோ வீட்டில் தனது வாழ்நாளின் கடைசி காலம்வரை ஒரு
போராளியாகவே வாழ்ந்து,போராட்டமே தனது வாழ்வு என அதனை செயல்படுத்தியும் காட்டி மறைந்த அன்பு தாயார் மாரியம்மாள் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தினார்.
அண்ணனுடன் நெல்லை, தூத்துக்குடி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் புலிகள் கலந்து கொண்டு புகழ் வணக்கம் செலுத்தினார்கள்.

போராட்டக்களத்தில் நின்ற பெருமாட்டி – சீமான் புகழாரம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் பெருமதிப்பிற்குரிய அண்ணன் ‪‎வைகோ‬ அவர்களின் தாயார் ‪மாரியம்மாள்‬ அவர்கள் காலமான செய்தி கேட்டு ஆழ்ந்த துயரம் அடைகிறோம்.

அருமைத்தாயார் மாரியம்மாள் அவர்கள் இறுதிவரை போராட்ட உணர்வு நீங்காத பெருமாட்டியாக வாழ்ந்தவர்.சமூகப் போராட்டக்களங்களுக்கு பெற்றெடுத்த தன் மகனை தன்னைப்போலவே உறுதியான நெஞ்சுரம் கொண்டவராக வளர்த்தெடுத்து போராட்ட களத்திற்கு அனுப்பி வைத்த வீரத்தாயாக அருமைத்தாயார் மாரியம்மாள் விளங்குகிறார். தேசியத்தலைவர்.மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் இளைய மகன் பாலச்சந்திரன் சிங்கள பேரினவாதிகளால் கொல்லப்பட்ட புகைப்படங்கள் வெளியான போது, அம்மையார் மாரியம்மாள் அவர்களும் அக்கொடுமையை சகிக்க முடியாமல் அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டார்.

சில மாதங்களுக்கு முன் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தின் உயிர் ஈகம் செய்த காந்தீயவாதி சசிப்பெருமாள் அவர்களின் மறைவிற்குப் பிறகு தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக எழுந்த போராட்டக்களத்தில் தன்னை ஒரு போராளியாக இணைத்துக்கொண்டு தள்ளாத வயதிலும் தளராத தனது போராட்ட உணர்வில் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தை தலைமையேற்று நடத்திய பெருமை அருமைத்தாயார் மாரியம்மாள் அவர்களுக்கு உண்டு. உறுதியான நெஞ்சுரம் உடைய பெருமாட்டியார் மாரியம்மாள் அவர்களின் இழப்பில் வாடி இருக்கும் அண்ணன் வைகோ மற்றும் அவரது குடும்பத்தார்களின் பெருந்துயரத்தில் பங்கேற்கிறேன்.

மேலும் வற்றா பெருமைகளோடு வாழ்ந்து முடிந்திருக்கும் மதிப்பிற்குரிய அருமைத் தாயார் மாரியம்மாள் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் புகழ்வணக்கத்தை செலுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.