இராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி. பட்டணம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட முஸ்லீம் இளைஞர், சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் வன்செயல் கண்டனத்திற்குரியது-நாம் தமிழர் கட்சி கண்டனம்

21

நாம் தமிழர் கட்சியின் அறிக்கை பின்வருமாறு:

இராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி. பட்டணம் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட முஸ்லீம் இளைஞர், அந்நிலையத்தின் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்தினார் என்றும், அந்தத் தாக்குதலில் இருந்து தன்னை காத்துக்கொள்ள காவல் உதவி ஆய்வாளர் அந்த இளைஞரை சுட்டதாகவும், அதில் அந்த இளைஞர் இறந்துவிட்டதாகவும் சொல்லும் காவல்துறையின் கூற்று ஏற்கத்தக்கதாக இல்லை.

புகாரின் பேரில் காவலர்களால் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்படும் எவரும், உடனடி சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, அவரிடம் ஆயுதங்கள் ஏதும் இருந்தால், அவைகள் களையப்படும் என்பது காவல் நிலைய நடவடிக்கைகள் பற்றி அறிந்த எவருக்கும் தெரிந்த விவரமாகும். அப்படியிருக்கையில், விசாரணை நடத்த முற்படும்போது, சையது முகம்மது என்கிற அந்த இளைஞர், மேசை மீதிருந்த கத்தியை எடுத்து காவல் உதவி ஆய்வாளர் காளிதாசனை தாக்கியதாக கூறப்படுவது நம்பத்தக்கதாக இல்லை. சையது முகம்மதுவை காவலர்கள் அழைத்து வந்த போது அவரிடம் இருந்த கத்தியை பரிமுதல் செய்து மேசை மீது வைத்திருப்பார்களா? அதுவும் அந்த இளைஞர் விசாரணைக்கு உட்படுத்தும்போது அவருடைய கைக்கு எட்டும் இடத்தில் இருக்குமா? என்கிற கேள்விகள் எழுகின்றன.

எனவே மாவட்ட காவல் துறையினரின் கூற்று நம்பத்தக்கதாக இல்லை. இப்படிப்பட்ட என்கவுண்டர்கள் சமீப காலமாக தமிழ்நாட்டில் அதிகரித்து வருகின்றன. புகார் எப்படிப்பட்டதாக இருந்தாலும், விசாரணைக்கு அழைத்து வரும் நபரை பாதுகாப்பாக வைத்திருந்து, பூர்வாங்க விசாரணைக்குப் பிறகு, வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தி, பிறகு விசாரணைக் காவலில் எடுத்துத்தான் முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பது காவல் நடைமுறை. அப்படியிருக்க, காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்துவதும், இப்படி சுட்டுக்கொல்வதும் சட்ட ரீதியான நடைமுறைகளுக்கு முரணானதாகும். மேலும், இப்படிப்பட்ட நிகழ்வுகள் காவல் துறை மீது மக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும். அது சமூக ஒழுங்கிற்கும், அமைதிக்கும் கேடானதாகும். எனவே இச்சம்பவத்திற்கு நாம் தமிழர் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துகொள்கிறது.

காவல் துறையின் என்கவுண்டரில் கொல்லப்பட்ட சையது முகம்மதுவின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.10 இலட்சத்திற்கும் குறையாத நட்ட ஈட்டை வழங்குவதோடு, தந்தையையும், தனயனையும் இழந்துள்ள அந்த குடும்பத்தின் உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பையும் தர தமிழக முதல்வர் முன்ர வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றோம்.

தமிழக காவல் துறையினர் தன்னிச்சையாகவும், தான்தோன்றித்தனமாகவும் செயல்படுவதும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் தப்படிப்பதற்கும், வாடிப்பட்டி மேளம் அடித்துச் செல்வதற்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தடை விதித்தது. இந்தத் தடையை காரணமாக்கி, கோயில் விழாக்களிலும், இதர மத விழாக்களிலும் தப்படிக்கவோ அல்லது வாடிப்பட்டி மேளம் அடிக்கவோ கூடாது என்று இராமாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒட்டுமொத்தமாக தடை விதித்துள்ளார். இதனால் தப்படித்து, வாடிப்பட்டி மேளம் அடித்து வாழும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழக அரசு தலையிட்டு அந்த தடையை இரத்து செய்ய வேண்டுமாய் கேட்டுகொள்கிறோம்.

இதுபோலவே, கருத்துச் சுதந்திரம் அரசமைப்பு ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ள நமது நாட்டில், பொதுக் கூட்டம் நடத்துவதற்குக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு சென்றுதான் அனுமதியை உறுதி செய்ய வேண்டியுள்ளது. சமீபத்தில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் நடத்த இடதுசாரி கட்சிகள் விடுத்த கோரிக்கைக்கு அனுமதியளிக்க காவல் துறை மறுத்துள்ளது. இது ஜனநாயக விரோத, கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நீதிமன்றத்தில் தீர்ப்பால் சிறைப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட அ.தி.மு.க. கட்சியினரை அனுமதிக்கும் காவல் துறையினர், எதிர்க்கட்சிகளுக்கு அதே உரிமையை மறுப்பது சட்டத்திற்கு முரணான செயலாகும். இதில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் தலையிட்டு, காவல் துறையினரின் அதீத விசுவாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏனெனில் காவல் துறையினரின் இப்படிப்பட்ட தவறான செயல்பாடு தமிழக ஆட்சியாளர்களுக்குத் தான் விரோதமாக முடியும்.

நாம் தமிழர் கட்சிக்காக,

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்