11 அடுக்குக் கட்டட விபத்து ஒரு கண்திறப்பா
சென்னையை அடுத்த போரூரில் கட்டுமானத்தில் இருந்த 11 மாடி அடுக்குக் கட்டடம் நொறுங்கி விழுந்து பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது அதிர்ச்சியையும் அவமானத்தையும் ஏற்படுத்துகிறது.
சொந்த மாநிலத்தில் பிழைக்க வழியின்றி, தமிழ்நாட்டிற்கு வந்து கட்டட பணியில் ஈடுபட்ட அயல் மாநில தொழிலாளர்களே பெரும்பாலும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளது பெரும் துயரமாகும். இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்து நடந்து மூன்று நாட்கள் ஆகிவிட்ட நிலையில்,இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் 45 பேரின் நிலை கவலையளிக்கிறது. தங்கள் பிள்ளைகளை, சொந்தங்களை இழந்து வாழும் குடும்பத்தினருக்கு நாம் தமிழர் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
44 குடியிருப்புக்களைக் கொண்ட இவ்வளவு பெரிய கட்டுமானம், சீட்டுக்கட்டு அடுக்கு போல நொறுங்கி விழுந்து தரைமட்டமாகியுள்ள காட்சியைக் காணும் எவரும், இந்த கட்டுமானத்திற்கு அனுமதி கொடுத்த அரசு துறையின் செயல்பாட்டினை நினைந்து நொந்துபோவர், அவ்வளவு கேவலமாக இருக்கிறது. ஏரிக்கரையில், இவ்வளவு பெரிய கட்டடம் கட்ட அனுமதி வழங்கியுள்ளதிலிருந்தே இது ஊழலால் உருவான கட்டுமானம் என்பது உறுதியாகிறது. அப்பகுதியில் மண் தன்மை இவ்வளவு பெரிய குடியிருப்பை கட்டிட ஏற்றதுதானா என்று சோதிக்கப்படாமலேயே அனுமதி வழங்கப்பட்டிருப்பதும், 11 மாடிகள் கொண்ட குடியிருப்பிற்கு உரிய ஆழத்திற்கும், அகலத்திற்கும் ஏற்ற வகையில் கான்கிரீட் பில்லர்களையும், பீம்களை போடாமல் கட்டப்பட்டிருப்பதும் லாப நோக்குடன் நடந்த ஊழல் திருவிளையாடலை அம்பலப்படுத்துகிறது.
இப்படிப்பட்ட ஒரு பலவீனமான கட்டுமானத்திற்கு காரணமான நிறுவனத்தை மட்டுமின்றி, அதற்கு அனுமதியளித்த அரசுத் துறை அதிகாரிகளையும் உடனடியாக தமிழக அரசு கைது செய்து வழக்குத் தொடர வேண்டும். இறந்தவர்களுக்கும், காயமுற்றவர்களுக்கும் இழப்பீடு வழங்குவதோடு நிறுத்திக்கொள்ளாமல், இதனை கோர படுகொலையாக வழக்குப் பதிவு செய்து சம்மந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
அதுமட்டுமின்றி, இவ்வளவு பெரிய துயரத்திற்குப் பிறகாவது, தமிழ்நாட்டில் உள்ள ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் ஆகிவற்றை உடனடியாக மீட்டெடுக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும். வீட்டு மனைத் தொழிலும்,கட்டுமானமும் தமி்ழ்நாட்டின் நீராதாரங்களை நாள்தோறும் விழுங்கிக்கொண்டிருப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்