ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்திருப்பது மோடி அரசும் காங்கிரசின் பாதையில்தான் பயணிக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது

19

ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்திருப்பது மோடி அரசும் காங்கிரசின் பாதையில்தான் பயணிக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதிவியேற்கும் நிகழ்விற்கு சார்க் அமைப்பின் தலைவர்களை அழைப்பது என்ற போர்வையில், தமிழினத்தை திட்டமிட்டு அழித்தொழித்த சிங்கள பெளத்த இனவெறி இலங்கை அரசின் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு இந்திய அயலுறவு அமைச்சகம் அழைப்பு விடுத்திருப்பது இந்திய நாட்டின் அங்கமாக இருக்கும் 9 கோடி தமிழர்களை அவமதிக்கும் செயலாகும். இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

தேர்தல் பரப்புரைக்காக முதன் முதலில் தமிழ்நாட்டிற்கு வந்த நரேந்திர மோடி, திருச்சியில் நடந்த பா.ஜ.க.வின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசியபோது, இலங்கையில் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ்வதை பா.ஜ.க. அரசு உறுதி செய்யும் என்று பேசினார். ஆனால், இன்றைக்கு ஆட்சியில் அமர்வதற்கு முன்னரே, தமிழினத்தின் உரிமைகளை பறித்த, அவர்களை பூண்டோடு திட்டமிட்டு அழித்த ராஜபக்சவை பதிவியேற்பு விழாவிற்கு அழைத்திருப்பது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயலாகும். இந்த அழைப்பின் பின்னணியில் இந்திய அரசின் தேச பாதுகாப்பு ஆலோசகராக இன்றளவும் நீடிக்கும் தமிழின எதிரி சிவ் சங்கர் மேனன் இருப்பது நன்றாகத் தெரிகிறது. சார்க் நாடுகளின் தலைவர்களை அழைப்பது என்கிற போர்வையில்,இலங்கை அதிபரை அழைத்து கெளரவிப்பதே இந்த அழைப்பின் நோக்கம் என்பதை இந்த நாட்டின் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடி அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் இலங்கை தொடர்பான இந்திய அரசின் நிலைப்பாடு மாற்றமின்றி தொடர்கிறது என்பதை உலக நாடுகளுக்கு இந்திய அயலுறவு அமைச்சகம் உணர்த்துகிறது.

தேர்தலுக்காக பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையிலும், இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுடன் நட்புடன் இருப்பதையே பா.ஜ.க. அரசும் விரும்புகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அறிக்கையில் இலங்கை தமிழர்கள் தொடர்பான பிரச்சனை பற்றி ஒரு வார்த்தை கூட தெரிவிக்கப்படவில்லை. எனவேதான் அயலுறவு கொள்கையில் தமிழின எதிர்ப்பில் தீவிரமாக இருந்த சோனியா வழிகாட்டுதலில் இயங்கிய காங்கிரஸ் அரசு கடைபிடித்த கொள்கையையே பாரதிய ஜனதா அரசும் கடைபிடிக்கும் என்ற நாம் தமிழர் கட்சி பரப்புரை செய்ததது. அது இன்றைக்கு உண்மையாகியுள்ளது.

தனது நாட்டின் மக்களின் மீதே, சர்வதேச அளவில் போரில் கூட பயன்படுத்தக் கூடாது என்று தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்திக் கொன்ற குற்றச்சாற்று ராஜபக்ச அரசு மீது உள்ளது. ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய போர் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அந்த தீர்மானத்தை உதாசீனப்படுத்தும் வகையில் ராஜபக்சவுக்கு இந்திய அரசு அழைப்பு விடுக்கிறது. இலங்கை அரசுடன் இணைந்துதான் இந்திய அரசு செயல்பட வேண்டும் என்று தமிழின அழிப்பை ஆதரித்து பேசிவரும் சுப்பிரமணியன் சாமியின் கருத்திற்கிணங்கவே இந்திய அரசின் இந்த முடிவு உள்ளது.

இந்திய அரசின் இந்த முடிவு, தமிழர்களை அவமதிப்பதாகும். இந்த முடிவை இந்திய நாட்டின் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி அவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டுமாய் நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது. அவ்வாறு நடக்காவிட்டால், ராஜபக்சவின் வருகையை எதிர்த்தும், தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவும் மோடி பதிவுயேற்கும் தினத்தன்று நாம் தமிழர் கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திதமிழக மக்கள் நிகழ்த்திய வரலாற்றுப் புரட்சி! தேர்தல் முடிவு குறித்து செந்தமிழன் சீமான்
அடுத்த செய்திஇனப் படுகொளையாளன் ராஜபக்சே இந்திய வருகையை கண்டித்து பெங்களூருவில் ஆர்ப்பாட்டம்