எங்கள் போராட்டம் திசைமாறி போய் விட்டது : சீமான்

42

திண்டுக்கல்லில் நடந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி இல்ல திருமணத்தை, அந்த கட்சியின் ஒருங்கிணைப் பாளர் சீமான், அவரது மனைவி கயல்விழி ஆகியோர் நடத்தி வைத்தனர். முன்னதாக சீமான், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ‘’தஞ்சையில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்ற சுவர் இடிக்கப்பட்டதை கண்டித்தும், பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்ததை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை (இன்று) மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று போராடி கொண்டிருந்த சூழ்நிலையில், நினைவு முற்ற சுவர் இடிக்கப்பட்டதால் எங்கள் போராட்டம் திசைமாறி போய் விட்டது. தமிழக சட்டசபையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, முன்கூட்டியே தகவல் சொல்லாமல் அவசர, அவசரமாக நினைவு முற்ற சுவர் இடிக்கப்பட்டது.

இதில், இந்திய உளவுத்துறை அமைப்புகளுக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது. நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவரை பெயர்த்து எடுத்திருப்பதன் மூலம் எங்கள் உணர்வுகளை சிதைக்கவும், அடக்கவும் முடியாது. இந்த சம்பவத்துக்கு பிறகு மாபெரும் எழுச்சி உருவாகி உள்ளது. இடிக்கப்பட்ட இடத்தை, தினமும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து செல்கின்றனர்.

இலங்கையில் 90 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் விதவைகளாக உள்ளனர். பாலியல் சித்ரவதை செய்யப்பட்டு பெண்கள் கொல்லப்பட்டனர். இசைப்பிரியா, பாலசந்திரன் கொலை சம்பவம் நடந்த போது தி.மு.க. ஆட்சி யில் இருந்தது.

அப்போது எல்லாம் பேசாமல் இருந்துவிட்டு, தற்போது ஈழப்பிரச்சினை பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசுகிறார். தேர்தல் தேவையை உணர்ந்து, தற்போது அனைத்து கட்சியினரும் ஈழப்பிரச்சினை பற்றி பேசுகின்றனர். ஈழப்பிரச்சினை இல்லாமல் அரசியல் இல்லை. இது ஒரு வரலாற்று மாற்றம் ஆகும்.

மன்மோகன்சிங் பிரதமரான பிறகு 4 தடவை காமன்வெல்த் மாநாடு நடைபெற்றிருக்கிறது. இதில் 2 மாநாட்டில் அவர் பங்கேற்கவில்லை. தற்போது இலங்கையில் நடைபெறும் காமல்வெல்த் மாநாட்டில் தமிழர்களின் உணர்வுகளை மதித்து கலந்து கொள்ளவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது.

மத்திய அரசு மற்றும் ராஜபக்சே அரசு ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்துள்ளதாக விளம்பரப்படுத்துவது ஏமாற்று வேலை ஆகும். அப்படி உதவி செய்திருந்தால் சேனல்–4 டி.வி. குழுவினரை வவுனியா பகுதிக்குள் நுழையவிடாமல் ஏன் தடுத்தனர். சமீபத்தில் நடந்த தேர்தலில், தமிழர்கள் ராஜபக்சே கட்சிக்கு ஏன் ஓட்டு போடவில்லை.

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதன் மூலம் ராஜபக்சேவின் இனப்படுகொலை, போர்க் குற்றம் ஆகியவை மூடி மறைப்பட்டு விடும். 2015–ம் ஆண்டு வரை காமன்வெல்த் தலைவராக ராஜபக்சே இருப்பார். இதனால் அவர் மீது எந்த குற்றச்சாட்டும் சொல்ல முடியாமல், வேடிக்கை பார்க்க வேண்டிய நிலை ஏற்படும்’’என்று கூறினார்.