கும்பகோணம் பெரிய கடை வீதியில் போக்குவரத்து நெரிசல்:- நாம் தமிழர் கட்சி அறிக்கை

34

அறிக்கை

கும்பகோணம் பெரிய கடை வீதியில் போக்குவரத்திற்கு இடையூறாக  கனரக வாகனங்களை காவல்துறை அனுமதிப்பது பொதுமக்களின் அன்றாட வாழ்விற்கு மிகப்பெரிய இடைஞ்சலாக மாறியுள்ளது. கும்பகோணம் பெரிய கடைவீதியில் மொத்தம் மற்றும் சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் பலர் கடைகள் வைத்துள்ளனர். பகல் நேரத்தில் சில பெரிய கடைகளுக்கு சரக்கு ஏற்றி, இறக்க வரும் லாரி போன்ற கனரக வாகனங்களால் அத்தெருவில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாகவே உள்ளது. மேலும் பண்டிகை காலமான இக்காலக்கட்டத்தில் இப்பிரச்சனை பன்மடங்காக மாறி விடுகிறது. சில சமயங்களில் சவ ஊர்வலம் செல்லும் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சவ ஊர்வலம் கூட காத்திருந்து செல்லக்கூடிய அவல நிலை நீடிக்கிறது. சரக்கு ஏற்றி, இறக்கும் உடலுழைப்பு தொழிலாளர்களும் இதனால் மிகுந்த சிரமத்திற்கும், பணிச்சுமைக்கும் ஆளாகின்றனர். இவ்வாறு கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் போது அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுகிறது. போக்குவரத்தை சரி செய்ய வேண்டிய காவல்துறை இப்பிரச்சனையில் மிகுந்த அலட்சியத்தோடு இருப்பது அப்பகுதியில் கடை வைத்திருக்கும் வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் மிகப்பெரிய கவலையை அளிக்கிறது. எப்போதும் போக்குவரத்து நெரிசலாக இருக்கும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய அப்பகுதியில்  இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை மட்டும் கனரக வாகனங்களை சரக்கு ஏற்றி ,இறக்க அனுமதிப்பது என்பது தான் தீர்விற்கான ஒரே வழி என அப்பகுதி பொதுமக்களும், வணிகர்களும், தொழிலாளர்களும் கருதுகின்றனர். எனவே காவல்துறையும், அரசு அதிகாரிகளும் உடனே தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

வழக்கறிஞர்.மணி செந்தில்
மாநில இளைஞர் பாசறை செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅக்டோபர் 26 அன்று காலை 09 மணிக்கு சென்னை தலைமையகத்தில் மாணவர் பாசறை பொறுப்பாளர்களின் மிகமுக்கிய கலந்தாய்வுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
அடுத்த செய்திதேசியத்தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மாபெரும் ஒருநாள் எழுவர் கால்பந்துப் போட்டி