நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்றால் மட்டுமே இனப்பிரச்சினைக்கு தீர்வு – குர்ஷித்திடம் வலியுறுத்திய மஹிந்த

28

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதொரு அரசியல் தீர்வை விரைந்து முன்வைக்குமாறு இலங்கையை இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில், இவ் விவகாரம் குறித்து தனது நிலைப்பாட்டை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மாற்றவில்லை. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பதன் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வைப் பெறமுடியும் என்று அவர் கூறியுள்ளார். இதனை இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் அவர் திட்டவட்டமாக இடித்துரைத்துள்ளார். ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்றால் மட்டுமே இனப்பிரச்சினைக்கு விரைவான தீர்வைக் காணலாம்” என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குர்ஷித்திடம் நேரடியாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், நேற்றுக் காலை அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போது, 13 ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப் படுத்தி அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஊடாக இனப்பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வைக் காணவேண்டும் என்றும், இந்திய அரசு இதில் உறுதியாக இருக்கின்றது என்றும் குர்ஷித் வலியுறுத்தினார். இதற்குப் பதிலளிக் கும்போதே ஜனாதிபதி மஹிந்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் கருத்துத் தெரிவிக்கும் போது, ‘பல தசாப்தங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையின் கீழ் வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்றதை இந்திய அரசின் சார்பில் நான் பாராட்டுகின்றேன். இந்தத் தேர்தல் தமிழ்ச் சமூகத்திற்கான ஒரு முக்கியமான கட்டமாகும். நான் இதனை ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வாகப் பார்க்கின்றேன். இந்தத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டி வடக்கு மாகாணசபையை தனது ஆளுகைக்குள் கீழ் கொண்டுவந்துள்ளது. வடக்கு மாகாண சபை முதலமைச்சர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்ததன் ஊடாக கூட்டமைப்பின் நல்லிணக்க சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இந்த மாகாணசபை அபிவிருத்திகாண இலங்கை அரசு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இந்திய அரசும் தன்னாலான பங்களிப்பை வழங்கும்.

வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் என்னுடன் நேற்று (நேற்றுமுன்தினம்) நடத்திய சந்திப்பின் போது தெரிவித்துள்ளனர். எனவே, வடக்கு, கிழக்கு மக்கள் கெடுபிடிகள் எதுவுமின்றி நிம்மதியாக வாழும் சூழ்நிலை ஏற்படவேண்டும். இதேவேளை, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை அரசு முழுமையாக அமுல் படுத்தவேண்டும். மாகாணசபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை இலங்கை அரசு வழங்க வேண்டும். இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கோரி நிற்கின்றது. இலங்கை அரசானது அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு ஊடாக இனப்பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வைக் காணவேண்டும். இந்திய அரசு இதில் உறுதியாக இருக்கின்றது” என்று தெரிவித்தார் சல்மான் குர்ஷித். இதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பதிலளிக்கும் போது, “நாடாளுமன்றம் ஊடாகவே இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவைக் கூட்டி மக்களின் தேவையைக் கருத்திற்கொண்ட தீர்வொன்றை பேச்சின் மூலம் பெற்றுக்கொள்வதே இந்தப் பிரச்சினைகளுக்கு சிறந்த வழியாகும்.

எனவே, அரசு நியமித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டாயம் பங்கேற்று எம்முடன் கலந்துரையாடி மக்கள் விரும்புகின்ற ஒரு தீர்வுக்கு வரவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இனியும் பங்கேற்க மறுக்குமானால் நாம் ஒன்றும் செய்ய முடியாது’ என்று தெரிவித்தார் ஜனாதிபதி மஹிந்த. இந்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கான அபிவிருத்தி மூலோபாய நோக்கங்களின் அடிப்படையில் பல்வேறு பரஸ்பர நலன்கள் குறித்த விடயங்களும் கலந்துரையாடப்பட்டன. இரண்டு நாடுகளையும் சேர்ந்த மீனவர்களுக்கிடையே எழும் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி ராஜபக்ஷவும் குர்ஷித்தும் கலந்துரையாடினர். மீனவர்கள் தங்களது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தாங்களாகவே கண்டுகொள்ளும் வகையில் இரண்டு நாடுகளையும் சேர்ந்த மீனவர் சமூகங்களுக்கிடையில் ஒரு கலந்துரையாடலுக்கான வசதியைச் செய்து கொடுப்பது சிறந்த வழியாகும் என இந்தச் சந்திப்பின் போது உடன்பாடு காணப்பட்டது. இலங்கை மற்றும் இந்திய வர்த்தகர்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்தவும் வர்த்தக சமூகங்களுக்கு மத்தியிலும் இத்தகையதோர் அணுகுமுறை இதன்போது முன் மொழியப்பட்டது. கொழும்பிலுள்ள இந்திய உயரிஸ் தானிகர் வை.கே.சிங்ஹாவும் இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய உயரிஸ்தானிகராலயத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பாரம்பரியக் கைத்தொழில்கள் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வலு சக்திவள அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, வெளி விவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம மற்றும் இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திபொதுநலவாய மாநாடு: கனடா ஆளும்கட்சி தமிழர் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட ஏற்பாடு.
அடுத்த செய்திதேசியத் தலைவர் பிரபாகரனின் வீடு தகர்க்கப்பட்டதன் உண்மை என்ன..?