இலங்கைக்கு பொதுநலவாய அமைப்பின் தலைமைப் பதவியை வழங்கக் கூடாது – மனித உரிமை கண்காணிப்பகம்

73

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை இலங்கைக்கு வழங்கக் கூடாது என மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது. எதிர்வரும் இரண்டாண்டு காலப்பகுதிக்கு இலங்கைக்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவி இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது. எனினும், இவ்வாறு இலங்கைக்கு தலைமைப் பதவி வழங்கப்படக் கூடாது என பொதுநலவாய நாடுகள் அமைச்சர்களிடம் மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 15 முதல் 17ம் திகதி வரையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு இலங்கையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை அமர்வுகளின் நிகழ்ச்சி நிரல் குறித்த இன்றும் நாளையும் லண்டனில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் மாநாடடில் தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.

இலங்கைக்கு தலைமைப் பதவி வழங்குவது பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகளை பாதுகாப்பது தொடர்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியுள்ளது. யுத்த குற்றச் செயல்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஓர் நாட்டுக்கு தலைமைப்பதவி வழங்குவது பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நன்மதிப்பிற்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடுமென தெரிவித்துள்ளது.

உரிமை மீறல்களில் ஈடுபடும் நாட்டின் உறுப்புரிமையை ரத்து செய்யும் அதிகாரம் பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கு காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. மனித உரிமைகளை பாதுகாக்கவும் நல்லாட்சியை ஏற்படுத்தவும் பொதுநலவாய நாடுகள் அமைப்பு கூடுதல் முனைப்பு காட்ட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

முந்தைய செய்தி“இலங்கையில் பொதுநல வாய மாநாடு நடக்கக் கூடாது” விழிப்புணர்வு பிரச்சாரம்
அடுத்த செய்திகனடிய தலைநகரில் மாபெரும் ஒன்றுகூடலுக்கு தயாராகும் கனடியத் தமிழர் Top News