போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குழு விசாரிக்க இலங்கை ஒப்புதல் அளிக்க வேண்டும் – பான்கி மூன்

19

இறுதிப் போரின் போது பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்துள்ளதன் மூலம், சர்வதேச மனித உரிமை சட்டத்தை இலங்கை இராணுவம் மீறியுள்ளது. இதுகுறித்து இலங்கை அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும், என ஐநா பொதுச்செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உள்நாட்டில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குழு விசாரிக்க ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் இலங்கை அரசை ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது. இலங்கை ஒப்புதல் தராமல் போனால், சர்வதேச அழுத்தங்கள் மூலம் இந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டி வரும் என்றும் ஐநா எச்சரித்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான தாக்குதலில் இலங்கை ராணுவம் ‘நினைத்துப் பார்க்க முடியாத’ அளவு போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளதை ஐ.நா. குழு ஆய்வு செய்து கண்டறிந்துள்ளது.

இது தொடர்பாக இக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டனிடல் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா.சபை பொதுச் செயலாளர் பான் கி மூன், “இலங்கை அரசு செய்துள்ள போர் குற்றங்கள் குறித்து நிச்சயம் விசாரணை நடத்தப்படும். ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்துள்ளதன் மூலம், சர்வதேச மனித உரிமை சட்டத்தை இலங்கை ராணுவம் முற்றாக மீறியுள்ளது.

இதுகுறித்து இலங்கை அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும். போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேசக் குழு விசாரிக்க இலங்கை அரசு ஒப்புக்கொள்ள வேண்டும். ஒப்புதல் தரத் தவறினால் அதை சர்வதேச அழுத்தங்கள் மூலம் பெற வேண்டியிருக்கும்.

இந்த விசாரணைக் குழுவை ஐநா சபையே அமைக்கும். ஐநாவின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்டதாக அந்த குழு இருக்கும்.

மேலும் இலங்கையில் உள்ள ஐ.நா. ஊழியர்களின் பாதுகாப்புக்கு அந்நாட்டு அரசு உத்தரவாதம் வழங்க வேண்டும்,” என்றார்.

முந்தைய செய்திசிறீலங்கா அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்
அடுத்த செய்திநீண்டகாலமாக தடுப்புக்காவலில் உள்ள தமிழ் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்: சிறீலங்கா உயர் நீதிபதி