எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்திற்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கும் இடையில் ஒப்பந்தம்.

26

உலக நாடுகளில் தகுதி பெற்ற தமிழாசிரியர்களை உருவாக்கும் ஒரு திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்திற்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கும் இடையில் கைச்சாத்தானது. மேற்படி நிகழ்வு கடந்த செவ்வாய்கிழமையன்று மாலை சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் அலுவலகத்தில் இடம்றெ;றது. மேற்படி ஒப்பந்தத்தில் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் சார்பில் அதன் பதிவாளர் பேராசிரியர் சேதுராமன் அவர்களும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அனைத்துலக கல்விப் பொறுப்பாளர் கனடா வாழ் திரு வி. எஸ். துரைராஜா அவர்களும் கைசாத்திட்டார்கள். அவ்வமையம் பல்கலைக் கழக துணைவேந்தர் கலாநிதி எம். பொன்னவைக்கோ மற்றும் பேராசிரியர்கள் பாக்கியவதி ரவி, இல. சுந்தரம், ரவி சிங் ஆகியோரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சர்வதேச ஊடகப் பொறுப்பாளர் திரு ஆர். என் லோகேந்திரலிங்கமும் உடனிருந்தனர்.

ஒப்பந்தத்தில் சாட்சிகளாக பல்கலைக் கழகத்தின் சார்பில் பேராசிரியை திருமதி பாக்கியவதி ரவியும் உலகத்தமிழ் பண்பாட்டு இயகத்தின் சார்பில் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் ஆகியோர் கைசாத்திட்டனர். மேற்படி திட்டம் தொடர்பான வேண்டுகோள் உலகத்தமிழ் பண்பாட்டு இயகத்தினரால் கடந்த வருடம் சென்னையில் நடைபெற்ற உலக கல்வி மாநாட்டின் போது அங்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட துணைவேந்தர் திரு. பொன்னவைக்கோ அவர்களிடம் விடுக்கப்பட்டது. மேற்படி வேண்டுகோள் அடங்கிய விண்ணப்பத்தை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகிலச் செயலாளர் நாயகம், ஜேர்மனி வாழ். திரு துரை கணேசலிங்கம் துணைவேந்தரிடம் கையளித்தார். அதன் பின்னர் பல மாதங்களாக தகுதி பெற்ற தமிழாசிரியர்களை உருவாக்கும் இந்த திட்டம் தொடர்பாக கருத்துப் பரிமாற்றங்களும் கடிதத் தொடர்புகளும் இடம்பெற்ற நிலையில் இறுதியாக திட்டத்தை ஆரம்பித்து நடத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம் என்னும் தமிழக கல்வித்துறையினரால் நடத்தப்படும் தொலைக்கல்வித் திட்டத்தில் இணைந்து வெளிநாடுகளில் வாழும் தமிழாசிரியர்கள் பயிலலாம். அதன் பின்னர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு தோற்றி அதில் சித்தியடையும் பட்சத்தில் அவர்களுக்கு தமிழாசிரியர் டிப்ளோமா பட்டம் வழங்கப்படும். இந்த டிப்ளோமா பட்டம் பெறுவதால் அந்த தமிழாசிரியர்கள் அதிக ஊதியம் பெறும் சந்தர்ப்பத்தைப் பெறுகின்றனர். குறிப்பாக தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள கல்விச் சபைகள் மேற்படி டிப்ளோமா பட்டம் பெறும் தமிழாசிரியர்களுக்கு ஊதியத்ததை அதிகமாக வழங்குவதாக உறுதியளித்துள்ளன.

மேற்படி கையெழுத்து இடும் வைபவத்தில் உரையாற்றிய சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பொன்னவைக்கோ அவர்கள் தனது உரையில் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் சிறார்களின் தமிழ் மொழி அறிவை வளர்க்கும் பணியில் நமது எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகத்தோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு பெற்றுள்ளதை மிகவும் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன். இந்த திட்டத்தின் மூலம் நமது பல்கலைக்கழகம் பொருளாதார ரீதியான பலனைப் பெறாவிட்டாலும் உலகத் தமிழர்களுக்கு ஒரு நற்பணியை ஆற்றும் சந்தர்ப்பம் கிட்டியதை பெரிதும் உவகையோடு வரவேற்கின்றது. எனவே இந்த திட்டத்தில் இணைந்து தமிழாசிரியர்கள் தங்கள் டிப்ளோமா பட்டத்தை மட்டுமல்லாது கூடிய கற்பிக்கும் ஆற்றலையும் பெறலாம். என்றார். இறுதியில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் அதன் கல்விப் பொறுப்பாளர் திரு வினாசித்தம்பி துரைராசா நன்றி தெரிவித்தார்.

முந்தைய செய்திவிக்னேஸ்வரன் பிரபாகரனின் மறு ஜென்மம் – அஸ்வர்
அடுத்த செய்திவடக்கு தேர்தல் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும் – கனடியத் தமிழர் பேரவை