கூட்டமைப்பின் ஆதரவாளர் வீட்டுக்கு தீ வைத்தனர் ஆளும் கட்சி ஆதரவாளர்கள்! – வன்னிவிளாங்குளத்தில் சம்பவம்

11

முல்லைத்தீவு மாவட்டத்தில் வன்னிவிளாங்குளத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர் ஒருவரின் வீட்டுக்கு ஆளும் கட்சி ஆதரவாளர்கள் தீ வைத்ததால் அந்த வீடு முற்றாக எரிந்து சாம்பராகியுள்ளது. இந்த வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும் தையல் மிசின் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பராகியுள்ளன. மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிலுள்ள அடைக்கப்பன் பூபாலன் என்பவரின் வீடே எரிக்கப்பட்டுள்ளது. மேற்படி நபர் இன்று நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது வாக்குச் சாவடி ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கண்காணிப்பாளராக பணியாற்றச் சென்றிருந்தார். இவரது மனைவியும் இரு பிள்ளைகளும் வாக்களிக்கச் சென்றுவிட்டு உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தனர்.

இந்த நிலையில் இன்று நண்பகல் 12.45 மணியளவில் அந்த வீட்டுக்குச் சென்ற ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள் வீட்டுக்குத் தீவைத்துக் கொழுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். அந்த வீடு தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்ட அயலவர்கள் தீயை அணைக்க முயன்ற போதும் அது சாத்தியப்படாமல் போகவே அந்த வீடு முற்றாக எரிந்து சாம்பராகியது.

அங்கிருந்த அனைத்து ஆவணங்களும் எரிந்து சாம்பராகியதுடன் தையல் மிசின் இயந்திரம், தளபாடங்கள் உள்ளிட்ட பல இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்தழிந்தன. இச்சம்பவம் தொடர்பாக பவ்ரல் தேர்தல் கண்காணிப்பு நிறுவனத்தில் முறையிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி2 ஆம் இணைப்பு தமிழர் தேசம் சிங்களத்துக்கு வன்னி மண்ணில் கொடுத்த முதலடி! முதலிடத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு!
அடுத்த செய்திவெடி கொழுத்திக் கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர் மீது இராணுவம் தாக்குதல்!