யாழ். பண்ணை பாலத்துக்கு அருகில் சுயேட்சை குழு வேட்பாளர்கள் இருவர் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டு அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் எரியூட்டப்பட்டுள்ளது. பண்ணைப்பாலத்துக்கு அருகில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த சுயேட்சை குழு 7 இன் வேட்பாளர்களான மண்கும்பானை சேர்ந்த சு.பிரகலாதன் (வயது 29) ச. தேவரஞ்சித் (வயது 29) ஆகிய இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக காயமடைந்த பிரகலாதன் தெரிவிக்கையில்,
நாம் இருவரும் மண்கும்பான் பிரதேசத்தில் நேற்று இரவு சுவரொட்டிகளை ஒட்டி விட்டு யாழ். நோக்கி வந்து கொண்டிருந்த போது பண்ணைப்பாலத்திற்கு அருகில் இரவு 12.30 மணியளவில் நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்கள் எம்மை வழிமறித்து தாக்க தொடங்கினர். நாம் அவர்களின் தாக்குதலில் இருந்து தப்பி ஓடினோம் அப்போது அவர்கள் எம்மை விட்டு விட்டு நாம் பயணித்த ஆட்டோவை அடித்து உடைத்தனர் பின்னர் அதனை கீழே தள்ளி விழுத்தி கொளுத்தி விட்டு சென்று விட்டனர்.
நாம் இரவு சுவரொட்டி ஒட்டி கொண்டு இருந்த போது அந்த பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிளில் நால்வர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடினார்கள். அதனால் நாம் சுவரொட்டி ஒட்டுவதை நிறுத்தி விட்டு அங்கிருந்து கிளம்பினோம். அதன் பின்னர் நாம் யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த போதே இத் தாக்குதல் நடைபெற்றது என தெரிவித்தார்.