தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மாபெரும் புரட்சியன்றை நிகழ்த்தியுள்ளனர். மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்று கூறி தியாக தீபமான திலீபன் அவர்களின் கனவு நனவாகியது போன்று அவருடைய நினைவு அனுஸ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் வடபுலத்து தமிழ் மக்கள் பெரும் புரட்சியன்றைப் படைத்துள்ளமையானது சர்வதேச ரீதியாகப் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
எவருமே எதிர்பார்க்க முடியாதவாறு தமிழ் மக்கள் எழுச்சியடைந்து வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமது வாக்குகளைப் பதிவு செய்து சாதனை நிலைநாட்டியுள்ளனர். யுத்த காலத்திலும் யுத்தத்திற்கு பிந்திய காலங்களிலும் வடபுலத்தில் பல தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் போன்று மக்களின் வாக்களிப்பு அமைந்திருக்கவில்லை. இந்த தேர்தலில் மக்கள் மிகவும் நிதானமாக வாக்களித்திருக்கின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கூட இத்தகையதொரு வெற்றியை எதிர்பார்த்திருக்கவில்லை. ஆளும் கட்சியைப் படுதோல்வியடையச் செய்து தமிழ் மக்கள் இவ்வாறு வாக்களித்தமைக்கு காரணம் என்ன என்பதை ஆராய வேண்டியது முக்கியமானது. இதற்கு பெரும் ஆய்வுகள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தமிழீழத் தேசியத் தலைவரால் உருவாக்கபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வடக்கின் ஆட்சியை ஒப்படைக்கவேண்டும் என்று மக்கள் முடிவெடுத்ததன் விளைவாகவே இந்த வெற்றியைக் கூட்டமைப்பு எட்ட முடிந்திருக்கின்றது. அதை விடுத்து தனியே விக்னேஸ்வரன் ஐயாவுக்கோ சம்பந்தன் ஐயாவுக்கோ ஏனைய உறுப்பினர்களுக்கோ தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை.
தமிழீழ தேசியத் தலைவரினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் போராட்ட சாதனைகள் நிறைந்த வடபகுதியை, மாவீரர்களின் ஈழக் கனவாக இருந்த வடபகுதியை சிங்கள ஆட்சியாளர்களிடம் ஒப்படைக்க தமிழ் மக்கள் விரும்பாததன் வெளிப்பாடாகவே இந்த வெற்றி எட்டப்பட்டிருக்கின்றது. தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் சிறீலங்கா அரசுக்கு சம பலமான ஆயுத பலத்துடன் தமது அதிகாரத்தை தக்க வைத்திருந்த காலப்பகுதியில் புலிகளை சிங்கள அரசாங்கம் தொடர்ந்தும் பயங்கரவாதிகளாகவே சித்தரித்து வந்தது. தமிழ் மக்கள் வேறு புலிகள் வேறு என்று சர்வதேச ரீதியாகப் பிரசாரம் செய்த சிங்கள அரசின் முகத்திரையை உடைக்க வேண்டிய தேவை ஏற்பட்டதன் விளைவாகவே தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.
பிரபாகரன் அவர்கள் தமிழ்த் தேசியத் கூட்டமைப்பை புலிகளின் அரசியல் பிரசாரப் பிரிவாக உருவாக்கினார்.
கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட அதே ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அது பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றது. இதன் மூலம் தமிழ் மக்களின் பெரும் அரசியல் பிரிவாகக் கூட்டமைப்பு உருவெடுத்தது. இந்த அரசியல் பிரிவின் மூலமாக புலிகள் சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டிலும் பல கைங்கரியங்களை மேற்கொண்டனர். இது தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளையும் தேவையையும் சர்வதேச ரீதியாக எடுத்தியம்பப் பெரும் உதவியாக அமைந்தது.
ஆனால், துரதிஸ்டவசமாக சமாதான காலம் முடிவுக்கு வந்து போரில் புலிகளின் கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டுள்ள பின்னர் நட்டாற்றில் நின்ற தமிழ் மக்களுக்கு தமிழீழ தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கரம் கொடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. கடந்த பல வருடங்களாக கூட்டமைப்புக்குள் பிளவுகள், முரண்பாடுகள் தோற்றம் பெற்றாலும் இந்தக் கூட்டமைப்பு உடையவில்லை. இதனை உடைப்பதற்கு மகிந்த ராஜபக்ச பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்ற போதிலும் ஏனைய கட்சிகளைப் போன்று இதனை உடைக்க முடியவில்லை.
இதற்குக் காரணம் இதற்கு பின்னாலுள்ள தமிழீழத் தேசியத் தலைவரின் இராஜதந்திரமும் சிந்தனையும்தான். இந்த நிலையில் கூட்டமைப்பை விட்டால் மாற்றுத் தலைமை என்ற ஒன்று தமிழ் மக்களுக்கு இல்லாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடாகவே இந்தத் தேர்தலில் மக்கள் கூட்டமைப்புக்கு அமோக ஆதரவை வழங்கியிருக்கின்றனர்.
தமிழ் மக்கள் தமது ஒட்டுமொத்த ஆதரவை கூட்டமைப்புக்கு வழங்கியதன் மூலம் அவர்கள் வடக்கில் இராணுவப் பிரசன்னத்தை விரும்பவில்லை என்ற செய்தி வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருக்கின்ற அதேவேளை, தமிழ் மக்களின் நீண்ட காலக் கோரிக்கையான தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் என்ற கோட்பாடு அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதையும் மக்கள் வெளிக்காட்டியிருக்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தில் 13 ஆவது திருத்தச்சட்டத்தைக் காட்டிலும் கூடுதலான அதிகாரங்களுடன் (13 பிளஸ்) தமிழ் மக்களுக்கான தீர்வை முன்வைப்பேன் என்று கூறி புலிகளுடன் அதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கம், தற்போது புலிகளின் கட்டமைப்புகள் அனைத்துமே அழிக்கப்பட்டுள்ள நிலையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தையே அமுல்படுத்த மாட்டோம் என்று கூறுகின்றது. புலிகளின் ஆயுத பலம் இருந்த வேளை தமிழ் மக்களில் மகிந்தவுக்கு ஏற்பட்ட அன்பும் அக்கறையும் தற்போது இல்லாமற் போயிருக்கின்றது.
இதிலிருந்து மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை நோக்கி தமிழ் மக்களைத் தள்ளிச் செல்லப்படுகின்றார்கள் என்ற மறைமுக உண்மை வெளிப்படுகின்றது. இந்த நிலையில், வடக்கு மாககண சபைத் தேர்தலுக்காக கடந்த ஒரு மாதகாலமாக இடம்பெற்ற பிரசாரக் கூட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரன் ஐயா உரையாற்றும் போது, தமிழீழ தேசியத் தலைவரைப் பற்றியும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றியும் வெளிப்படுத்திய கருத்துக்கள் தமிழ் மக்களை சிந்திக்கத் தூண்டியிருந்தது. பிரபாகரன் பயங்கரவாதியென்று சிங்கள அரசாங்கமும் சிங்கள ஊடகங்களும் சித்தரித்து வந்த நிலையில், பிரபாகரன் எவருக்கும் அஞ்சாத மாவீரன் என்று விக்கினேஸ்வரன் ஐயா தெரிவித்திருந்தார்.
மேலும், தமிழ் மக்களின் உரிமைகளை வழங்குவதற்கு கடந்த அரசாங்கங்கள் மறுத்த காரணத்தாலேயே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கினார்கள் என்றும் இனிமேலும் சிங்கள அரசாங்கங்கள் தமிழரின் உரிமைகளை மறுக்கு
மாயின் மீண்டும் நாம் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை வரும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். இந்தக் கருத்துக்கள் தமிழ் மக்களை மிகவும் சிந்திக்கத் தூண்டின. கூட்டமைப்பு ஆயுதப் போராட்டம் குறித்து வலியுறுத்துகின்றது என்பதற்கு அப்பால் கடந்த கால நிலமைகளை மக்கள் நினைவுக்கு கொண்டு வந்தார்கள்.
கடந்த காலங்களில் ஜனநாயக வழியில் தமிழ் மக்கள் நடத்திய போராட்டங்களையெல்லாம் சிங்கள அரசாங்கங்கள் ஆயுத பலம் கொண்டு அடக்கினர். தமிழ்த் தலைவர்களின் நீதி கோரிய சத்தியாக்கிரகப் போராட்டங்கள் குண்டர் படைகள் ஏவப்பட்டு அடக்கப்பட்டன. இந்த அடக்குமுறைகளின் இறுதியாகவே, தந்தை செல்வா, இனிமேல் எமது இளைஞர்கள் உங்களுக்கு ஆயுதங்களுடன் வந்துதான் பதிலளிப்பார்கள் என்று கூறினார்.
இந்த வார்த்தைக்கு தலைவர் பிரபாகரன் வடிவம் கொடுத்தார். அந்த வடிவமே இன்று தமிழரின் பிரச்சினைகளை உலகறியச் செய்த ஆயுதப் போ£ரட்டமாக மாறியது. இந்த வரலாற்றை எந்தவொரு தமிழ் மக்களும் அறியாதவர்கள் இல்லை. ஆனால், கடந்த தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் விக்கினேஸ்வரன் ஐயா ஆயுதப் போராட்டம் குறித்த கருத்து முன்வைத்தமையானது எமது இளைஞர்களைச் சிந்திக்கத் தூண்டியது. இதன் விளைவாகவே இன்று கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றிருக்கின்றது.
இந்த வெற்றியானது அன்று தமிழீழப் பிரகடனத்திற்கு கிடைத்த அதே வெற்றிபோன்றே ஒப்பிடப்படவேண்டியது. தனித் தமிழீழமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு என்று அன்று வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நடைபெற்ற தேர்தலில் தமிழர்கள் அமோகமாக வாக்களித்தமை போன்றே இன்றும் வாக்களிப்பு நடைபெற்றுள்ளது. அதனைவிட, இந்தத் தேர்தலானது மக்களுக்கு மிகத் தெளிவான சிந்தனையை ஊட்டியிருக்கின்றது. வடக்கு எமது பிரதேசம்.
இதனை எப்படி மற்றவனிடம் ஆளக் கொடுப்பது என்று தமிழ் மக்களிடம் இயல்பாகவே கேள்வி எழுந்திருந்தது. எமது முப்பது வருடப் போராட்டம் இதற்குத் தானே இடம்பெற்றது. எமது மாவீரர்களின் கனவு தனித் தமிழீழமாக இருந்த போதிலும் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் ஆட்சி மலரவேண்டும் என்பதை அவர்கள் விரும்பியிருந்தனர். அவர்களின் எண்ணத்தைச் செயற்படுத்த இதுவொரு சந்தர்ப்பமாக, முதல் படியாக அமையுமென்று தமிழ் மக்கள் கருதியதாலேயே இந்த தேர்தலில் யாருமே எதிர்பார்க்காதவாறு தமிழ் மக்கள் வாக்களித்தனர்.
தமிழர் தாயகத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இராணுவத்தால் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றது. இராணுவ முகாம்கள் , சிங்களக் குடியேற்றங்கள் என்று என்றுமில்லாதவாறு தமிழர் தாயகம் ஆக்கிரமிக்கப்படுகின்றது. இவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டுமாயின் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற உண்மைக் கருத்தை தமிழ் மக்கள் உணர்ந்துகொண்டனர். அந்த உணர்வின் வெளிப்பாடாகவே இந்தத் தேர்தல் வெற்றிவாகை சூடப்பட்டிருக்கின்றது.
தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்ததன் மூலம் வெளிப்படுத்திய கருத்தை சர்வதேசம் நிச்சமாக உன்னிப்பாக அவதானிக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். கூட்டமைப்பின் மீதும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா மீதும் புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடையே பல விமர்சனங்கள் உள்ளன. இந்த விமர்சனங்கள் நியாயமானதாக இருந்தாலும் அதைப் பேசித் தீர்வு காணும் நிலை ஏற்பட வேண்டும். ஏனெனில் தமிழ் மக்களுக்கு தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டால் வேறு வழி இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது.
எனவே கூட்டமைப்பின் வெற்றியானது தனியே ஈழத் தமிழ் மக்களின் வெற்றி மட்டுமன்று. அது ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பங்கு. புலம்பெயர் தமிழ் மக்களின் மிகப் பெரிய பங்கும் இந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கின்றது. எனவே, இந்த வெற்றியை மிக நல்ல முறையில் பயன்படுத்தி எமது இலக்கான சுதந்திர தமிழீழத்தை அடைவதற்கு நாம் அனைவரும் பாடுபடவேண்டும்.
– தாயகத்தில் இருந்து வீரமணி
நன்றி: ஈழமுரசு