இலங்கை அரசு வட மாகாண சபையுடன் இணைந்து செயற்பட வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்

16

கடந்த 21ம் நாள் நடைபெற்று முடிந்த தேர்தலில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாணசபையுடன் இலங்கை அரசாங்கம் இணைந்து செயற்பட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வாசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் பசாகி நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதுகுறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மூன்று மாகாணசபைகளுக்கு செப்ரம்பர் 21ம் நாள் நடத்தப்பட்ட தேர்தல் வெற்றிகரமாக அமைந்ததற்கு இலங்கை மக்களுக்கு அமெரிக்கா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. 2009ல் போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கு மாகாண சபைக்கு முதல் முறையாக நடந்துள்ள இந்தத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது மக்கள் தமது விருப்பங்களுக்கேற்ப, மாகாண சபைகளுக்கு பிரதிநிதிகளைத் தெரிவு செய்துள்ளனர். மாகாணங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பொதுமக்கள் தலைமைத்துவத்துக்கு ஆதரவாக செயற்பட இலங்கை அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது.

குறிப்பாக, பரந்தளவிலான நல்லிணக்க நடவடிக்கைகளை விரிவாக்கிக் கொள்வதற்கு, புதிதாக தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையுடன் இணைந்து செயற்படும் வாய்ப்பை இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.