இறக்கவில்லை திலீபன் எம்மிடையே இருக்கிறான் – புகழேந்தி தங்கராஜ்!

102

சென்ற இதழ் கட்டுரை தொடர்பாக நண்பர்கள் அப்புசாமிக்கும் குப்புசாமிக்கும் இடையே ஒரு மோதலே நடந்து முடிந்துவிட்டது. திலீபன் என்கிற ஈடு இணையற்ற போராளியின் உன்னதமான அறப்போர் பற்றி எழுதவேண்டிய நேரத்தில் பொறுப்பும் அர்ப்பணிப்பும் இல்லாத தயிர் சோற்று சிவகாமிகள் பற்றியெல்லாம் எழுதலாமா என்பது குப்புசாமியின் வாதம். போலிகளைப் பற்றி எழுதினால்தான் திலீபனின் தியாகத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்பது அப்புசாமியின் வாதம். (இந்த மாஜி ஐ.ஏ.எஸ். பற்றித்தான் எழுதச் சொன்னாராம் அவர்.)

நீங்கள் அப்புசாமி கட்சியா குப்புசாமி கட்சியா? எனக்குத் தெரியாது. என்றாலும் தயிர்சாதத்துடன் அன்புச் சகோதரி சிவகாமி உண்ணாவிரதப் பந்தலுக்குள் நுழைந்ததையும் தயிர்சாதம் சாப்பிடுவதற்கு முன்பு ஒரு மணி நேரமும் தயிர் சாதம் சாப்பிட்ட பின்பு ஒரு மணி நேரமும் அவர் தன் உடலை வருத்தி உண்ணாவிரதம் இருந்ததையும் பற்றி எழுதியது நியாயம்தான் என்றே நான் நினைக்கிறேன். இதற்குப்பிறகு சிவகாமியையோ அவரது படையையோ உண்ணாவிரத அறப்போர்களுக்கு அழைப்பவர்கள் தயிர் சோற்று அண்டாவுடன் அவர் வருகிறாரா என்பதை எச்சரிக்கையுடன் கண்காணிக்க இந்தத் தகவல் உதவும் தானே! (உணவாளர்கள் பராக் பராக்! உணர்வாளர்களே…. உஷார்! உஷார்!)

தயிர் சோற்று விஷயத்தை மறந்துவிடுங்கள். அது அற்பசொற்ப விவகாரம். ஒரு வாய் தண்ணீர் கூட குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்தானே திலீபன்….. அவனைத்தான் நாம் மறக்கக் கூடாது. ‘என்னுடைய தேசியப் பொறுப்பை நான் நிறைவேற்றியிருக்கிறேன்… இது எனக்கு பெரும் மனநிறைவைத் தருகிறது’ என்று மரணத் தருவாயிலும் நிலையில் திரியாது நின்றானே…. அந்த மன உறுதியைத்தான் நாம் மனத்தில் தாங்க வேண்டும்.

தேசியப் பொறுப்பு – என்று திலீபன் சொன்னதற்கு ஆழ்ந்த பொருள் இருக்கிறது. அதை நாம் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும்.

ராசையா பார்த்திபன் என்பது அவனது இயற்பெயர். திலீபன் என்பது இயக்கப் பெயர். யாழ்ப்பாணம் ஹிந்து கல்லூரியில் படித்தபோதே அவன் பெயர் பிரபலம். சென்னையில் ரயிலிலோ பேருந்திலோ அடுத்த கல்லூரி மாணவர்களை விரட்டி விரட்டிப் பிளந்துகட்டி பிரபலமாகிறார்களே பொறுக்கிகள் – அதைப்போன்ற பிரபலமில்லை அது. தன் மக்களின் தாயகம் பற்றிய பொறுப்போடு இயங்கியதால் கிடைத்த பிரபலம். 1983ல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்த திலீபன் தனது அறிவாலும் உழைப்பாலும் மிக விரைவிலேயே இயக்கத்தின் யாழ் பகுதி அரசியல் பிரிவுத் தலைவனாக உயர முடிந்தது. (புலிகள் இயக்கத்தில் போஸ்டர் ஒட்டியோ பேனர் வைத்தோ உயர்ந்துவிட முடியாது. அந்த மத்தாப்பு கித்தாப்பு எல்லாம் இங்கே தான் வொர்க் அவுட் ஆகும்!)

புலிகள் யுத்த வெறியோடு மக்களிடம் வரவில்லை. தமிழறிஞர் கா.சிவத்தம்பியின் மொழியில் சொல்லவேண்டுமென்றால் – ‘யுத்தம் எங்கள் இளைஞர்கள் மீது திணிக்கப்பட்டது.’ அவர்கள் எல்லா சமயத்திலும் சம உரிமையுடன் கூடிய சமாதானத்துக்குத் தயாராகவே இருந்தனர். அதன் அடையாளம்தான் அரசியல் பிரிவு. முப்படைகளையும் கொண்டிருந்த புலிகள் அமைப்பில் அரசியல் பிரிவுக்கும் மிக முக்கியப் பங்கு இருந்தது.

போர்க்களத்தில் எதிரிகளைச் சமாளிப்பது முப்படைகளின் பொறுப்பு என்றால் அரசியல் களத்தில் அமைதி வழியில் எதிர்க் கருத்துக்களை எடுத்துவைப்பது அரசியல் பிரிவின் பொறுப்பாக இருந்தது. அந்தப் பொறுப்பைத்தான் திலீபன் நிறைவேற்ற முன்வந்தான்.

சொந்த நாட்டில் எழுந்த கடும் அரசியல் எதிர்ப்பிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே ராஜீவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது ஜெயவர்தனே என்கிற கிழட்டு நரி. இது இந்தியாவுக்கும் தெரியும். என்றாலும் அடுத்த நாட்டிலும் போய் நாட்டாமை செய்ய ஆசைப்பட்டது இந்திய ஓநாய். ஜெயவர்தனேவின் மோசடியில் கூட்டாளியானது.

தமிழர்களைக் காப்பதற்காகவே ஒப்பந்தம் போடப்பட்டதாக புளுகித் திரிந்தன இந்தியாவும் இலங்கையும்! இந்திய அமைதி காப்புப் படை – வெறும் ஆக்கிரமிப்பு ராணுவமாக மட்டுமே இல்லாமல் இலங்கையின் கூலிப்படையாகவும் செயல்படத் தொடங்கிய பிறகுஇ அதன் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்துவது அவசியமாயிற்று! அந்தப் பொறுப்பைத்தான் திலீபன் ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

ராஜீவ் – ஜெயவர்தனே மோசடி ஒப்பந்தத்திலிருந்த வார்த்தைகளை வைத்தே வழக்காடினான் திலீபன். ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா வழங்கியிருந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் அவனது கோரிக்கைகளின் அடிப்படை. இந்தியா சொன்னதற்கு முரணான எதையும் கேட்கவில்லை திலீபன். ‘சொன்னதைச் செய்’ என்பதுதான் அவனது முழக்கமாக இருந்தது.

ழூ தமிழர்களின் தாயகமான வடகிழக்குக்கென இடைக்கால நிர்வாகக் குழு உடனடியாக அமைக்கப்படவேண்டும்.

ழூ புனர்வாழ்வு என்கிற போர்வையில் வடகிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு வருவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இடைக்கால அரசு அமையும்வரை புனர்வாழ்வுத் திட்டங்களை மேற்கொள்ளக்கூடாது.

ழூ பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும். நெருக்கடி நிலைச் சட்டத்தை ரத்து செய்யவேண்டும்.

ழூ வடகிழக்கில் புதிய காவல் நிலையங்கள் மற்றும் ராணுவ முகாம்களை அமைக்கக் கூடாது. தமிழர் தாயகத்திலிருந்து இலங்கை ராணுவம் வெளியேறவேண்டும்.

ழூ ஊர்க்காவல் படையினருக்குத் தரப்பட்டிருக்கும் ஆயுதங்களைத் திரும்பப் பெறவேண்டும்.

திலீபனின் இந்தக் கோரிக்கைகளில் என்ன தவறிருக்கிறது? நீ கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொறுப்பு உனக்குத்தானே இருக்கிறது – என்பதைத்தானே உரிமையுடன் கேட்டான்!

1987ல் திலீபன் முன்வைத்த கோரிக்கைகளும்இ 25 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு தமிழ்த் தேசியக் கூட்டணி வட மாகாண சபை தேர்தலில் முன்வைக்கிற கோரிக்கைகளும் ஒரு வார்த்தை கூட மாறாமல் அச்சு அசலாக அப்படியே இருப்பதைக் கவனித்தீர்களா? 25 ஆண்டுகளாக இலங்கை சண்டிமாடு மாதிரி கவிழ்ந்தடித்து படுத்திருக்கிறது என்பதைத்தவிர இதற்கு வேறென்ன அர்த்தம்? இந்த சண்டிமாட்டுக்கு முன் மண்டியிட்டு நின்றதைத் தவிரஇ வேறென்ன கிழித்தது இந்தியா?

தமிழர் தரப்பின் கருத்தை முழுமையாக அறியாமலேயே தன்னிச்சையாக ஜெயவர்தனேவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டவர் ராஜீவ்காந்தி. தான்தோன்றித் தனமாக அவர் ஒப்பந்தம் செய்துகொண்டபோதும் நட்பு நாடாக இந்தியாவை மதித்து ராஜீவ் கேட்டுக்கொண்டபடி ஆயுதத்தை ஒப்படைத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். ராஜீவின் ஒப்பந்தத்திலுள்ள முக்கிய அம்சங்கள் நிறைவேற்றப்படவேண்டும் என்று திலீபன் கோரியதை இந்தியா ஏற்றுக்கொண்டிருக்க வேண்டாமா?

1987 செப்டம்பர் 15ம் தேதி காலை ஒன்பதரை மணிக்கு தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினான் திலீபன். ஓரிரு நாட்களிலேயே எத்துணை ஓர்மத்துடன் அந்தப் போராட்டத்தில் அவன் இறங்கியிருக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்தது.
திலீபன் அழைப்பது சாவையா?
இந்தச் சின்ன வயதில் இது தேவையா?
என்கிற உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் பாடல் திலீபனைப் பார்க்கத் திரண்ட ஆயிரக்கணக்கான ஈழ உறவுகளைக் கண்கலங்க வைத்தது.

மக்களின் உணர்ச்சி வேகத்தைப் பார்த்த யாழ்ப்பாணத்திலிருந்த இந்திய அமைதி காப்புப் படை அதிகாரிகள் இந்தியா தலையிட்டு அந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துவைக்கவேண்டும் என்று விரும்பினர். இதுதொடர்பான அவர்களது பதிவுகளிலிருந்து இதை அறிய முடிகிறது. ஆனால்இ ராஜீவின் இந்தியா அசைந்து கொடுக்கவேயில்லை. ராஜீவுக்குத் தவறான பாதையைக் காட்டிய உளவுத் துறையின் மூர்க்கத்தனமான பிடிவாதம்தான் இதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தது. (ஆட்சி மாற்றம் ஏற்படும்பட்சத்தில்இ அந்தக் காலக்கட்டத்தில் உளவுத் துறையில் இருந்த உயர் அதிகாரிகளின் தமிழர் விரோத நிலைக்கும் இலங்கை விசுவாசத்துக்கும் ‘எது’ காரணம் என்பதுபற்றி விசாரித்தே ஆக வேண்டும்.)

சுதந்திர இந்தியாவில் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத அறப்போர்கள் கூட உருப்படியான சில வாக்குறுதிகளின் அடிப்படையில் நிறுத்திக் கொள்ளப் பட்டிருக்கின்றன. காந்தியின் பெயரால் குடும்பம் நடத்தி ஆட்சியில் அமர்ந்த இந்திய ஆட்சியாளர்கள் திலீபன் விஷயத்தில் அப்படி ஒரு முயற்சியை மேற்கொள்ளவேயில்லை. ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் திலீபன் உண்ணாவிரதம் இருந்ததை வக்கிரப் புத்தியோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது இந்தியா. சிறுகச் சிறுக அந்த இளைஞனைச் சாகவிட்டது.

உண்ணாவிரதம் தொடங்கிய ஒருவாரம் கழித்து பலாலிக்கு வந்தார் இந்தியத் தூதர் ஜே.என்.தீட்சித். அவரை பிரபாகரனும் பாலசிங்கமும் சந்தித்தார்கள். திலீபனின் உயிரைக் காக்கும்படி அவரிடம் அவர்கள் கோரியபோது ராஜீவின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்ந்த தீட்சித் என்கிற அந்த மனிதர் அதிகார மமதையுடன் அளித்த பதில் இதுதான்: ‘அது என்னுடைய வேலையில்லை.’

‘அது என்னுடைய வேலையில்லை’ – என்கிற இந்த வார்த்தைகள் அகம்பாவம் – திமிர் – பொறுப்பின்மை – அயோக்கியத்தனம் – மனவக்கிரம் – ஆகியவற்றின் அப்பட்டமான வெளிப்பாடு. இதே வார்த்தைகளைத் தான் மூத்த மத்திய அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி 2009ல் சொன்னார். லட்சக்கணக்கான மக்கள் இலங்கையின் மரண வளையத்துக்குள் இருந்தபோது அவர்களைக் காப்பாற்றுவது தன்னுடைய வேலை இல்லை என்று ஆணவத்தோடு அறிவித்தவர் அந்த மாமனிதர். அப்படி அறிவித்ததற்கான பரிசும் கருணாநிதியின் தயவுடன் அவருக்குத் தரப்பட்டு விட்டது.

இவர்களுக்கெல்லாம் வேறு எதுதான் வேலை? விரட்டி விரட்டிக் கொல் – என்று ஆயுதமும் ஆலோசனையும் கொடுப்பதா? கற்பழிப்பைக் கூட ஆயுதமாகப் பயன்படுத்து சினேகிதா – என்று அந்த நட்புப் பொறுக்கிக்கு கிரீன் சிக்னல் கொடுப்பதா? மிகக் குறுகிய காலத்தில் மிக அதிக கற்பழிப்புகள் நடந்த நாடு என்கிற சாதனை படைத்த ஒரு நாட்டில்தான் காமன்வெல்த் மாநாடு நடக்கவேண்டும் – என்று ஒற்றைக்காலில் நிற்பதா? இதுமட்டும் தான் தங்களது வேலை என்று நினைக்கிறார்களா அவர்கள்!

திலீபனிடம் அவனது கோரிக்கைகள் என்ன என்பதைக் கேட்டறிந்து குறிப்பிட்ட சில வாக்குறுதிகளை இந்தியா வழங்கியிருந்தால் அவனைக் காப்பாற்றியிருக்க முடியும். ஒப்பந்தத்தில் இருப்பதைத்தானே நிறைவேற்றச் சொல்கிறான் – என்று இலங்கையையும் சமாளித்திருக்க முடியும். ராஜீவ் அரசு இதைச் செய்ய முயற்சிக்கவே இல்லை. அதன் அலட்சியமும் திமிரும்தான் சாவை நோக்கித் தள்ளியது திலீபனை!

இந்தியா திலீபனின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிவிடும் – என்ற நம்பிக்கையுடன் தான் காத்திருந்தார்கள் அவனைப் பார்க்கக் கண்ணீருடன் திரண்டிருந்த ஆயிரமாயிரம் தமிழ் மக்கள். அந்த நம்பிக்கையை நாசமாக்கியது இந்தியாவின் கள்ள மௌனம். உண்ணாவிரதம் தொடங்கிய 12வது நாள் செப்டம்பர் 26ம் தேதி காலை 10.48க்கு திலீபனின் உயிர் பிரிந்தது.

திலீபனின் மரணம்இ இந்தியாவின் ராஜதந்திர லட்சணத்தை அம்பலப்படுத்தியது. அந்த இளைஞனைக் காப்பாற்றிஇ தமிழ் மக்களின் நம்பிக்கையை முழுமையாகப் பெற்றிருக்க முடியும் இந்தியா. பரமார்த்த குருவாலும் அவரது சிஷ்யர்களாலும் அதைச் சாதிக்க முடியவில்லை. வெறுப்பையும் விரோதத்தையும் விதைப்பதிலேயே அவர்கள் குறியாயிருந்தனர்.

இதை நாம் சொல்லவில்லை. இந்திய அமைதி காப்புப் படையின் முக்கிய அதிகாரியான ஹர்கிரட் சிங் தனது நூலில் இதை வெளிப்படையாக எழுதினார்.

‘திலீபனின் மரணம் இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஆழமான பெரும் பிளவினை தேவையில்லாமல் அதிகரித்துவிட்டது’ என்று எழுதினார் அவர்.

திலீபன் – உலக வரலாற்றின் பக்கங்களில் ஒரு அழுத்தமான பதிவு. இரு நாடுகளுக்கிடையிலான ஒரு ஒப்பந்தத்தின் பெயரால் ஒரு இனத்தின் சுய மரியாதையும் சுயாட்சியும் பறிக்கப்பட்டதை தன் உயிரைக் கொடுத்து அம்பலப்படுத்திய உன்னதமான இளைஞன். இரு தனி நபர்களின் ஒப்பந்தமாகத்தான் பார்க்கவேண்டியிருக்கிறது என்றாலும் ராஜீவ் – ஜெயவர்தனே ஒப்பந்தம் என்பது ‘இந்திய – இலங்கை ஒப்பந்தம்’ என்றுதான் அழைக்கப்படுகிறது. இப்படியொரு சர்வதேச ஒப்பந்தத்தின் மோசடி முகத்திரையைத் துணிச்சலுடன் கிழித்து எறிந்தவன் உலக வரலாற்றிலேயே திலீபன் என்கிற அந்த 27 வயது தமிழ் இளைஞன் மட்டும் தான்.

திலீபனின் இந்தத் துணிவும் தெளிவும்தான் போற்றப்படுகிறது இன்றுவரை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திலீபன் என்கிற பெயர் எங்கள் இனத்தின் பெயராகவே மாறிவிட்டிருக்கிறது. கணேசன் முருகன் வெங்கடேசன் – என்றெல்லாம் பெயரிடும் காலம் மலையேறி பள்ளிகளின் வருகைப் பதிவேட்டில் ஒரு வகுப்புக்கு ஒரு திலீபனாவது இருக்கிறான் இன்று! ‘திலீபன்’ என்று ஆசிரியர் கூப்பிடும்போதெல்லாம் ‘இருக்கிறேன் ஐயா’ என்கிற திலீபன்கள் ‘திலீபன் இறக்கவில்லைஇ நம்மிடையே இருக்கிறான்’ என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

திலீப்குமார் – என்கிற பிரபல இந்தி நடிகரின் பெயர் வைக்கப்பட்ட காலமில்லை இது. ‘அன்’ என்கிற ஆண்பால் விகுதியோடு திலீபன் என்று பெயரிடும் பொற்காலம். ஏழரைக் கோடி தமிழக மக்களின் உணர்வு ஒட்டுமொத்தமாக மழுங்கிவிடவில்லை என்பதை தமிழகமெங்கும் உலாவரும் பிரபாகரனின் படங்கள் மட்டுமில்லாமல் ‘திலீபன்’ என்கிற அந்தத் தியாக தீபத்தின் பெயரும் சேர்ந்துதானே பறைசாற்றுகிறது இன்றுவரை!

தமிழக அரசியல்
23.09.2013
புகழேந்தி தங்கராஜ்

முந்தைய செய்திவடக்கில் இந்தியாவின் காய்நகர்த்தல்?
அடுத்த செய்திநவநீதம்பிள்ளையின் வேண்டுகோள் அடங்கிய கடிதம் கிடைக்கவில்லை – வெளிவிவகார அமைச்சு