மதுக்கடைகளை மூடக் கோரும் மாணவர்களின் போராட்டம் வெல்க-செந்தமிழன் சீமான்

39

மதுக்கடைகளை மூடக் கோரும் மாணவர்களின் போராட்டம் வெல்க: நாம் தமிழர் கட்சி ஆதரவு 

தமிழ்நாட்டில் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்றும், முழுமையான மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கோரி சட்டக் கல்லூரி மாணவி நந்தினி உள்ளிட்ட மாணவர்களும், அவர்களோடு காந்தியவாதி சசி பெருமாள் ஆகியோரும் நடத்தும் பட்டிணி போராட்டத்தை நாம் தமிழர் கட்சி ஆதரிக்கிறது. 

நமது நாடு விடுதலை பெற்று கால் நூற்றாண்டுக் காலம் கடந்த நிலையிலும் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு நடைமுறையில் இருந்தது. புதுச்சேரி உட்பட தமிழ்நாட்டை சுற்றியிருக்கும் மாநிலங்களில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டிருந்த நிலையிலும் தமிழ்நாடு மதுவிலக்குக் கொள்கையை உறுதியாக கடைபிடித்தது. அதன் விளைவே, கல்வியிலும், தொழிலிலும், தொழிலக, விவசாய உற்பத்தியிலும், சேமிப்பிலும், சமூக அமைதியிலும் தமிழ்நாடு மிகச் சிறந்த மாநிலமாக திகழ்ந்தது. அறிவாளிகளையும், தலைவர்களையும் உருவாக்கும் மாநிலமாகத் திகழ்ந்தது தமிழ்நாடு. இந்தியாவின் வேறெந்த மாநிலத்தையும் விட கல்வி, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் பெரும் ஏற்றத்தை கண்ட மாநிலமாக பெருமையுற்ற நிலையில் இருந்தது தமிழ்நாடு.

இதற்கெல்லாம் காரணம், தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக இருந்த ஓமந்தூரார் முதற்கொண்டு, ராஜாஜி, காமராசர், அண்ணா என்று அனைத்துத் தலைவர்களும் மதுவிலக்குக் கொள்கையில் உறுதியாக இருந்ததுதான். ஆனால், அண்ணாவிற்கு பின்னர் முதல்வராக பொறுப்பேற்ற கருணாநிதிதான் தமிழ்நாட்டில் முதன்முதலாக மதுவிலக்கை தளர்த்தினார். அதனை எதிர்த்து பெருந்தலைவர் காமராசர் தமி்ழநாடு தழுவிய மிகப் பெரிய சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுத்தார். அதற்கு மக்கள் பெருமாதரவு அளித்ததனை பார்த்த முதல்வர் கருணாநிதி, காமராஜ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மதுக் கடைகளை மூடுகிறேன் என்று கூறினார். கருணாநிதி இவ்வாறு கூறியதனால் கடும் கோபமுற்ற காமராசர், நான் சொன்னேன் என்பதற்காக மூடுகிறேன் என்று கூறுகிறீரே, நானா மதுக்கடைகளை திறக்கச் சொன்னேன்?என்று கேள்வி எழுப்பியதோடு, மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதற்காக, அவர்களின் நலனில் அக்கறை கொண்டு மூடுகிறேன் என்று சொல்லுங்கள் என்று கூறினார். ஆனால் பெருந்தலைவர் மறைவி்ற்குப் பிறகு மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டது. முதலில் எதிர்த்த எம்.ஜி.ஆரும் பிறகு மதுவிலக்குக் கொள்கையை கைவிட்டார்.

இதன் விளைவு, கடந்த 40 ஆண்டுகளில் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி மூன்று தலைமுறை கெட்டுவிட்டது. அன்றைக்கு வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே இருந்த குடிபழக்கம் இன்று இளைஞர்கள், மாணவர்கள் வரை பழகிவிட்டது. கல்வியும், அறிவும், உழைப்பும் தமிழ்நாட்டின் அடையாளங்களாக இருந்த நிலை மாறி, இன்று டாஸ்மாக் கடைகள் தமிழ்நாட்டின் அடையாளமாகிவிட்டது. உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று பார்த்தால், மிக இளைய வயதில் இறந்தபோனவர்களுக்கு அஞ்சலி கூறி ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் சுவர்களை நிறைத்திருக்கின்றன. கிராம பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மாலை நேரத்தில் அலைமோதும் கூட்டத்தை அங்குள்ள சந்தைகளில் கூட காண முடியவில்லை. அந்த அளவிற்கு குடிப்பழக்கம் தமிழர் சமூகத்தில் புரையோடிப்போன விதியாகிவிட்டது. 

இந்த குடிப்பழக்கமே பல சமூக விரோத செயல்களுக்கும் அடிப்படையாகி வருவதை குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அளித்த வாக்குமூலங்கள் நிரூபணம் செய்கின்றன.

இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா? இனி வரும் தலைமுறைகளையாவது காப்பாற்றிட வேண்டாமா? என்பதே தமிழர் நலம் நாடும் அனைவரின் உள்ளத்திலும் பிறந்துள்ள ஏக்கமிகு கேள்வியாகும். இந்த ஏக்கத்தை முன்வைத்துத்தான் மாணவி நந்தினியும், அவரோடு பல மாணவ தோழர்களும், காந்தியவாதி சசி பெருமாளும் இன்று 4வது நாளாக பட்டிணிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்திலுள்ள நியாயத்தை உணர்ந்து மதுவிலக்குக் கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்திடும் ஒரு முடிவை, ஒரு காலவரையை முன்வைத்து தமிழக அரசு அறிவித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இது அரசியல் அல்ல, தமிழர் நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முன்வைக்கப்படும் கோரிக்கை என்பதை முதல்வர் புரிந்து கொண்டு முடிவெடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது. 

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

முந்தைய செய்திதிருப்பூர் அவினாசி ஒன்றியத்தில் கருத்தியல் விளக்கப்பொதுக்கூட்டம் – 14/08/2013
அடுத்த செய்திதந்தி தொலைக்காட்சி செய்தியாளர் மீதான அத்துமீறல் கண்டனத்திற்குரியது-செந்தமிழன் சீமான்