மெட்ராஸ் கபே திரைப்படத்தை திரையிட தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது

27

மெட்ராஸ் கபே திரைப்படத்தை திரையிட தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது:

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை மறைத்து, அவர்களின் ஆயுப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட தமிழினப் படுகொலையை நியாயப்படுத்தி மதராஸ் கபே என்கிற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

தமிழின உணர்வாளர்களின் கோரிக்கைக்கு இணங்க சென்னை திரையரங்கு ஒன்றில் நேற்று அப்படம் திரைப்படப்பட்டது. இத்திரைப்படத்தை பார்த்த எல்லோருக்கும், இது சிறிலங்க அரசு தயாரித்து மகிந்த ராஜபக்ச இயக்குனராக இருந்து எடுக்கப்பட்டத் திரைப்படமோ என்று நினைக்கின்ற அளவிற்கு மதராஸ் கபே திரைப்படம் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

முதலில் ஜாப்னா என்று பெயரிடப்பட்டு எடுக்கப்பட்டு பிறகு மதராஸ் கபே என்று பெயர் மாற்றம் செய்து, இப்படத்தின் நாயகனாக நடித்துள்ள ஜான் ஆப்ரகாம் தயாரித்துள்ள மதராஸ் கபே, யாழ்ப்பாணத்தில் தமிழின மக்களுக்கு எதிராக சிங்கள இனவெறி அரச படைகளும், இந்திய அமைதிப் படையும் நடத்திய கொலை வெறித் தாண்டவத்தை மறைத்துவிட்டு, ஏதோ ராஜீவ் காந்தியை கொல்வதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதுபோல் சித்தரிக்கிறது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள இனவெறி அரசு நடாத்திய ஒரு திட்டமிட்ட இன அழித்தலை நியாயப்படுத்த, 1980-90 ஆண்டுகளுக்கு இடையிலான ஒரு காலகட்டத்தை கதைக்கு அடிப்படையாக்கி, தமிழின போராட்டத்தை பயங்கரவாதமாகவும், தமிழின விடுதலைக்குப் போராடிய தமிழர்களை கொலைகாரர்களாகவும் சித்தரித்து எடுக்கப்பட்ட இந்தப் படம், சிங்கள இனவெறி அரசின் தமிழின அழித்தலை நியாயப்படுத்தவே எடுக்கப்பட்டது என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, தமிழினத்தை தீவிரவாத மனப்போக்கு கொண்டவர்களாக சித்தரிக்கும் அதே வேளையில், ராஜீவ் காந்தியை காப்பாற்ற மலையாள அதிகாரிகள் சிரத்தையுடன் செயலாற்றியதாகவும் சித்தரிக்கிறது. ராஜீவ் காந்தியை கொல்லும் சதித் திட்டம் இந்திய உளவு அமைப்புக்கு தெரிந்திருந்ததாகவும், அவர்கள் ராஜீ்வ் காந்தியை எச்சரிப்பதுபோலவும் காட்டப்படுகிறது. அப்படியானால் இவர்கள் ராஜீவ் காந்தியை காப்பாற்றாமல் போனாது ஏன்? அவர்களும் ராஜீவ் சதியில் சம்மந்தப்பட்டுள்ளார்களா? என்கிற கேள்வியையும் திரைக்கதை எழுப்புகிறது. ஏனெனில், நீதிபதி ஜெயின் விசாரணை ஆணையத்தின் முழு அறிக்கையையும் படித்த பிறகே இந்தக் கதையின் கருவை முடிவு செய்ததாக ஜான் ஆப்ரகாம் கூறுகிறார். 

மதராஸ் கபே திரைப்படத்தை பார்க்கும் எந்த தமிழனுக்கும் மலையாளிகள் மேல் கோபம் ஏற்படும். அந்த அளவிற்கு மலையாளிகளை தூக்கி வைத்தும், தமிழர்களை தாழ்த்தியும் படத்தை எடுத்துள்ளார்கள். எனவே, இந்த திரைப்படத்தின் பின்னணியில் தமிழினத்தை கேவலப்படுத்தும், தமிழர் மலையாளிகளிடையே மோதலை உண்டாக்கும் உள்நோக்கம் அப்பட்டமாகத் தெரிகிறது. 

இலங்கையில் வரும் நவம்பரில் காமன்வெல்த் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்கும் இத்திரைப்படம், சிங்கள பெளத்த இனவெறி அரசின் போரை நியாயப்படுத்தும் உள்நோக்கம் கொண்டதாகும். ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராடத்திற்கான நியாயத்தைப் பற்றி ஒரு வரி கூட பேசாமல், தமிழினம் அங்கு திட்டமிட்ட இன அழித்தலுக்கு ஆளாக்கப்படுவதை மறைத்து, தம் இனத்தைக் காக்க தமிழர்கள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தை கண்மூடித்தனமான தீவிரவாதமாக சித்தரிக்கும் இத்திரைப்படத்தை தமிழர்களால் சகித்துக்கொள்ள முடியாது. இத்திரைப்படம் தமிழர்களின் உணர்வுகளை திட்டமிட்டு கேவலப்படுத்துகிறது. இதனை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் திரையிடக் கூடாது என்று தமிழக முதல்வர் கேட்டுக் கொள்கிறோம்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இப்படிப்பட்ட திரைப்படங்களுக்கு அனுமதி வழங்கப்படுமானால், இந்திய தணிக்கை வாரியத்திடம் நாம் முன் வைக்கும் கேள்வி இதுதான்: ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உண்மையாக சித்தரிக்கும் திரைப்படத்தை நாங்கள் எடுத்து வெளியிட்டால் அதற்கு இதே கருத்துச் சுதந்திரம் என்கிற அடிப்படையில் அனுமதி அளிப்பீர்களா? தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்லர், அவர்கள் தங்கள் தேசத்தை மீட்க போராடி உயிர் துறந்த தியாகிகள் என்பதை உள்ளது உள்ளபடியே காட்டும் படத்தை எடுத்து இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியிட தணிக்க வாரியம் அனுமதியளிக்குமா? எங்களின் கேள்விகளுக்கு பதில் கூறட்டும். தமிழினத்தை கொச்சைப்படுத்தும் இத்திரைப்படத்திற்கு எந்த அடிப்படையில் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டது? 

தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம், இத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்கு திரையிட்டாலும் அது தமிழர்களின் உணர்வை பாதிக்கும். தமிழர்களின் உணர்வை பாதிக்கும் திரைப்படம் இந்தியா முழுவதும் காட்டப்படும் என்றால், தமிழனின் உணர்வுகளுக்கு இந்தியாவில் மதிப்பில்லை என்றே புரிந்துகொள்ளப்படும். அது இந்த தேசத்தின் அங்கும் நாம் என்கிற உணர்வோடு வாழும் தமிழர்களை அந்நியப்படுத்தும், அது நல்லதல்ல. எனவே இத்திரைப்படத்தை இந்தியாவின் எந்த மாநிலத்திலும் வெளியிட தடை விதிக்குமாறு இந்திய மத்திய அரசை தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

இத்திரைப்படம் தமிழர் நாட்டில் எங்கு வெளியிடப்பட்டாலும் அதனை எதிர்ப்போம். இது உறுதி. 

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்