தந்தி தொலைக்காட்சி செய்தியாளர் மீதான அத்துமீறல் கண்டனத்திற்குரியது: நாம் தமிழர் கட்சி
இந்திய உணவுக் கழக கிடங்கில் செய்தி சேகரிக்கச் சென்ற தந்தி தொலைக்காட்சி செய்தியாளரை பணி செய்ய விடாமல் தடுத்தது மட்டுமின்றி, அந்த செய்திக் குழுவை வலுக்கட்டயமாக வெளியேற்றியதை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்திய உணவுக் கழக கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் பூச்சிகளால் அழிக்கப்பட்டு விணாகிவருவதை இந்திய உச்ச நீதிமன்றமே கண்டித்திருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில், இந்திய உணவுக் கழக கிடங்குகளி்ல் பாதுகாப்பான நிலையில் உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிந்து மக்களுக்கு தெரிவிக்கும் கடமை ஊடகங்களுக்கு இருக்கிறது. அவர்களுக்கு அனுமதி வழங்கவும், மக்கள் தெளிவு பெறக்கூடிய அளவில் அதனை படம் பிடித்துக் காட்டவும் உணவுக் கழக நிர்வாகம் அனுமதிக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யாமல், செய்திக் குழுவை வலுக்கட்டாயமாக வெளியேற்றியிருப்பது ஏற்கத் தக்க நடவடிக்கையல்ல.
இந்திய உணவுக் கழக கிடங்குகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அல்ல. அப்படிப்பட்ட நிலையில் ஏதோ அத்து மீறி நுழைந்த அயலவரை வெளியேற்றுவது போல் செய்தியாளர்களையும் வெளியேற்றுவது தவறான நடவடிக்கையாகும். இந்திய அரசமைப்பு கூறும் கருத்து சுதந்திரத்திற்கு ஆணி வேராக இருப்பது பத்திரிகைகளும் ஊடகங்களும்தான். அவற்றின் ஊடாகவே இந்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை மக்கள் அறிகின்றனர். அதனால்தான் பத்திரிகைகளை ஜனநாயகத்தின் 4வது தூண் என்று அங்கீகரித்துள்ளனர்.
எனவே இப்படிப்பட்ட நிகழ்வுகள் மக்களின் கருத்துச் சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்திற்கும் எதிரானதாகும்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்