ஈழத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திரும்ப அனுப்பக் கூடாது: முதலமைச்சருக்கு நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்
இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசு நடாத்திவரும் திட்டமிட்ட இன அழித்தலில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள தமிழ்நாட்டிற்கு வந்த அகதிகளாக தஞ்சம் அடைந்தோரை, அவர்களின் விருப்பத்திற்கு எதிராக இலங்கைக்கே திருப்பி அனுப்பி வைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இலங்கையில் போர் முடிந்துவிட்டது, அங்கே அமைதி திரும்பிவிட்டது என்கிற காரணங்களைக் கூறி, இங்கு அகதிகள் முகாம்களில் வாழ்ந்துவரும் தமிழர்களை திருப்பு அனுப்பும் முயற்சி கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்தே நடந்த வருகிறது. இங்குள்ள காவல் துறை அதிகாரிகள், ஐ.நா.வின் அகதிகள் பொறுப்பு அதிகாரிகள் ஆகியோர் அவ்வாறு அனுப்பி வைத்த பல அகதிகள் இன்று வரை அங்கு வாழ இடமின்றியும், வழியின்றியும் பெரும் துயரத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஏனெனில் போரினால் இடம் பெயர்ந்த மக்களில் பெரும்பான்மையினர், அவர்கள் வாழ்ந்த இடங்கள் சிங்கள இராணுவத்தால் அபகரிக்கப்பட்டு, இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதால், வாழ இடமின்றி காடுகளிலும், அவர்களுக்கு வாழ காணியற்ற மற்ற பல இடங்களிலும் சிங்கள அரசால் குடியமர்த்தப்படுகின்றனர்.
குறிப்பாக, முன்னாள் போராளிகள் என்ற ஐயத்தின் பேரிலும், இலங்கைக்கு மண்ணெண்ணெய், இரத்தம் கடத்தினார்கள் என்ற குற்றச்சாற்றுகளின் பேரிலும் செங்கல்பட்டு, பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்கும் க்யூ பிரிவு காவல் துறை, அவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையில், அவர்களை மீண்டும் இலங்கைக்கே அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. இது ஐ.நா.வின் அகதிகள் காப்பு பிரகடனத்திற்கு எதிரான நடவடிக்கையாகும். தங்கள் சொந்த நாட்டில் தங்களுடைய உயிருக்கும், உடமைக்கும், சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் உள்ளதென்று, மற்றொரு நாட்டில் தஞ்சமடையும் எவரையும், அவர்களின் விருப்பத்திற்கு எதிராக அவர்களின் நாட்டிற்கு அனுப்பக் கூடாது (நான் ரீபவுல்மெண்ட்) என்று ஐ.நா.வின் அகதிகள் காப்பு பிரகடனம் கூறுகிறது.
உலக நாடுகள் ஏற்றுக்கொண்ட இந்த பிரகடனத்தை இந்திய அரசு இதுநாள் வரை ஏற்றுக்கொள்ளாதிருக்கும் காரணத்தினால், ஈழத் தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கை இங்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிறப்பு முகாம்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்பி வைத்தால் அவர்கள் கொல்லப்படுவது நிச்சயம். இலங்கையில் நடந்த தமிழின அழிப்புப் போரின் முடிவில் சரண்டைந்த பல்லாயிரக்கணக்கான போராளிகளின் நிலை என்ன ஆனது என்று இன்று வரை தெரியாத நிலையில், இங்கு கைது செய்யப்பட்டு சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டவர்களை மீண்டும் இலங்கைக்கே அனுப்புவது, அவர்களை மீண்டும் கொலைக்களத்திற்கு அனுப்புவதற்கு ஒப்பானதாகும்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்