இராமேஸ்வரம் சுற்றுலாத் தல ஆட்டோ ஓட்டுனர்களை விடுதலை செய்க

8

இராமேஸ்வரம் சுற்றுலாத் தல ஆட்டோ ஓட்டுனர்களை விடுதலை செய்க

இராமேஸ்வரத்திலுள்ள அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் ஆட்டோக்கள் நுழையக் கூடாது என்று காவல் துறை விதித்த தடையை எதிர்த்துப் போராடிய ஆட்டோ ஓட்டுனர்களை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது ஜனநாயகத்திற்கும், அவர்களின் வாழ்வுரிமைக்கும் எதிரான நடவடிக்கையாகும்.
தமிழ்நாட்டின் முன்னணி சுற்றுலா தலங்களின் ஒன்றான இராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இராமநாத சுவாமி கோயிலுக்கு வருகின்றனர். அப்படிப்ட்ட நிலையில் தங்கள் ஆட்டோக்களில் வரும் சுற்றுலா பயணிகளை கோயிலின் அருகில் சென்று இறக்கி விடவும், கோயிலின் வாயிலுக்கு அருகே சென்று ஏற்றிக்கொண்டு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில், இராமநாத சுவாமி கோயிலுக்கு பயங்கரவாதிகளின் தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளது என்ற காரணத்தைக் கூறி, அப்பகுதிக்குள் ஆட்டோக்கள் செல்லக்கூடாது என்று மாவட்ட காவல் துறை தடை விதித்திருக்கிறது. இது தங்களுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கிறது, எனவே தடையை நீக்க வேண்டும் என்று கோரித்தான் நேற்று காலை ஆட்டோ ஓட்டுனர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியுள்ளார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவரும், காவல் அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கு பின்னர் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர். அதன் பிறகு, ஒரு மணி நேரம் கழித்து, போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட செயலர் கன் இளங்கோ உள்ளிட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் பலரை கைது செய்து சிறைப்படுத்தியுள்ளது காவல் துறை.

மாவட்ட காவல்துறையின் நடவடிக்கை வினோதமாகவுள்ளது. பயங்கரவாதிகள் ஆட்டோவில் வந்தா தாக்குதல் நடத்துவார்கள்? அல்லது ஆட்டோவை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவார்களா? காவல் துறையின் கண்டுபிடிப்பு வியப்பை அளிக்கிறது. ஆட்டோ ஓட்டுனர்களால் அருள்மிகு இராமநாத சுவாமி கோயிலுக்கு அச்சுறுத்தல் என்று கூறுவது, அந்த சுற்றுலா தலத்தில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கும் ஓராயிரம் ஆட்டோ ஓட்டுனர்களை தவறாக சித்தரிக்காதா? இப்படி செய்தால் பொது மக்கள் ஆட்டோவில் ஏறுவார்களா? ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் காவல் துறை செயல்பட்டிருப்பது தெரிகிறது.


இராமநாத சுவாமி கோயிலுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதென்றால் அது பற்றி ஆட்டோ ஓட்டுனர்களுடன் விவாதித்து, ஐயத்திற்கிடமான நபர்களை பற்றிய தகவலை அளியுங்கள் என்றுதானே காவல் துறை கேட்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் ஒட்டுமொத்தமாக ஆட்டோக்கள் எதுவும் கோயில் அருகே செல்லக்கூடாது என்று தடை விதிப்பது அடிப்படையற்ற நடவடிக்கையாகவே தெரிகிறது. எனவே இப்பிரச்சனையில் தமிழக முதல்வர் தலையிட்டு, ஆட்டோ ஓட்டுனர்கள் விடுதலை செய்யவும், அவர்களோடு காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தவும் உத்தரவிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்