13வது் திருத்தத்தைக் காட்டி தமிழர் மீது தீர்வைத் திணிக்கும் முயற்சி நடக்கிறது

22

13வது் திருத்தத்தைக் காட்டி தமிழர் மீது தீர்வைத் திணிக்கும் முயற்சி நடக்கிறது

ஈழத் தமிழர்களின் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் இலங்கை அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட ஒரு ஏற்பாட்டை உறுதி செய்ய இலங்கையின் பொருளாதாரத் துறை அமைச்சரும், அதிபர் ராஜபக்சவின் தம்பியுமான பசில் ராஜபக்ச வரும் 4ஆம் தேதி டெல்லிக்கு வரவிருப்பதாக உறுதியான செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களாகவே ஈழத் தமிழர் பிரச்சனைக்கு இராஜீவ் காந்தி ஜெயவர்த்தனே இடையே 1987ஆம் ஆண்டு கையெழுத்தான இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கை நாட்டு அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 13வது திருத்தத்தின் கீழ் தீர்வு காணும் பேச்சுக்கள் நடந்து வருகிறது. தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் தலைமையில் வந்த அந்நாட்டு நாடாளுமன்ற தமிழர் பிரதிநிதிகள் குழு டெல்லிக்கு வந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு சென்றுள்ளது. இப்போது அந்நாட்டின் செல்வாக்குமிக்க அமைச்சர் பசில் ராஜபக்ச வருகிறார் என்றால், ஈழத் தமிழர்கள் மீது ஒரு தீர்வு திட்டத்தினை திணிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது நன்கு புலனாகிறது.

இலங்கை ஒற்றையாட்சி அரசமைப்புச் சட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அங்கமாக இருந்த தலைவர்கள்தான், இன்றைக்கு தமிழர் தேசிய கூட்டமைப்பாக இயங்கி வருகின்றனர். ஆனால் இப்போது அவர்கள் இலங்கை ஒற்றையாட்சி அரசமைப்பிற்குட்பட்ட ஒரு தீர்வை ஏற்றுக்கொள்ள முடிவு செய்திருப்பது, ஈழத் தமிழினம் அரை நூற்றாண்டுக் காலமாக நடத்தி வரும் அரசியல் விடுதலைப் போராட்டத்திற்கு முரணானதும், எதிரானதும் ஆகும். இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் செய்யப்பட்ட 13வது திருத்தம் எப்படிப்பட்ட அதிகாரங்களை மாகாணங்களுக்கு அளிக்கிறது என்று பார்த்தால் அது மிகப் பெரிய ஏமாற்று என்பது தெரியவரும். 13வது திருத்தத்தின் படி தமிழர் மாகாணங்களுக்கு கிடைக்கும் அதிகாரம் அனைத்தும் மாகாண சபைகளுக்கு கிடைக்கப்போவதில்லை. மாறாக, அந்நாட்டு அதிபரால் நியமிக்கப்படும் ஆளுநருக்குத்தான் இருக்கும். ஒரு மாகாணத்தின் செயல் அதிகாரம் அனைத்தும் ஆளுநருக்கு இருக்கும்போது, ஒரு பொம்மை நிர்வாக சபையாக மட்டுமே மாகாண சபைகள் இருக்கும். 13வது திருத்தத்தின் படி அமைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையால் தமிழர்களுக்கு என்ன கிடைத்தது? அம்மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த எம்.ஏ.எம்.எல். அப்துல்லா, இந்த திருத்தச் சட்டத்தின் கீழ் எமக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின்படி, காவல்துறையின் ஒரு  ஏட்டை பணியிட மாற்றம் செய்யும் அதிகாரம் கூட எமக்கு இல்லை என்று கூறினார். மாகாண சபை நிறைவேற்றும் எந்த தீர்மானத்தையும் ஒரு உத்தரவு பிறப்பித்து நிராகரிக்கும் அதிகாரம் அந்நாட்டு அதிபருக்கு இருக்கிறது என்றால், இந்த திருத்தத்தை வைத்துக்கொண்டு தமிழர்களுக்கு வாழ்வுரிமையும், அரசியல் சம உரிமையும், பொருளாதார சுதந்திரமும் எப்படி கிட்டும்?

1987ஆம் ஆண்டு இராஜீவ் காந்தியும், ஜெயவர்த்தனாவும் இணைந்து திணித்த ஒப்பந்தம் ஈழத் தமிழினத்திற்கு எந்தத் தீர்வை தராது என்று அப்போது சுதுமலையில் நடந்த பொதுக் கூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் கூறினார். அப்போது அவர் கூறிய வார்த்தைகளை அப்படியே தருகிறோம்: “இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படுமென நாம் நினைக்கவில்லை. சிங்கள இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கிவிடும் காலம் வெகு தூரத்தில் இல்லை. தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை உண்டு. தமிழீழ இலட்சியத்திற்காகவே நான் தொடர்ந்து போராடுவேன் என்பதையும் இங்கு திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்தக் கூற விரும்புகிறேன். போராட்ட வடிவங்கள் மாறலாம், ஆனால், எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லைஎன்று தெளிவாக பிரபாகரன் பேசியுள்ளார். அது இன்றளவும் வரலாறாக தமிழர் நெஞ்சங்களில் உள்ளது.

உண்மை இவ்வாறிருக்க, ஈழத் தமிழினத்தின் மீது, அவர்களுக்கு எவ்வித அரசியல், பொருளாதார அதிகாரத்தையும் வழங்காத 13வது திருத்தத்தைக் காட்டி ஒரு தீர்வைத் திணிக்க இலங்கை, இந்திய அரசுகள் முயற்சிப்பதை தமிழர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும், எதிர்ப்போம். இந்திய இலங்கை ஒப்பந்தம் என்பது தமிழீழ மக்களையோ அல்லது அவர்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாத் திகழ்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளையோ கலந்து உருவாக்கப்பட்ட ஒப்பந்தம் அல்ல. அது தமிழர்களை பகடையாக பயன்படுத்த முற்பட்ட இராஜீவ் காந்தி அரசுக்கும், தமிழினத்தை பூண்டோடு அழிக்க உறுதி பூண்ட சிங்கள இனவெறியன் ஜெயவர்த்தனேவுக்கும் இடையில் செய்யப்பட்டதாகும். எனவேதான் அதனை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்தனர்.

ஈழத் தமிழினத்தின் அரசியல் சம உரிமைப் போராட்டத்தின் இலக்கு ஒன்றுதான், அது தனித் தமிழ் ஈழமே. இலங்கை அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தமிழினத்திற்கு ஒரு கெளரவமான தீர்வை வென்றிட பல முயற்சிகள் மேற்கொண்டு தோல்வியைத் தழுவிய நிலையில்தான், ஈழத் தந்தை செல்வா அவர்கள், 1976இல் வட்டுக்கோட்டை மாநாட்டில் தனித் தமிழ் ஈழமே ஒரே தீர்வு என்கிற தீர்மானத்தை நிறைவேற்றி வழிகாட்டினார். எனவே, உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் அந்த உன்னத இலக்கை அடையும் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட வேண்டும். அதற்கு எதிரான எந்தத் தீர்வையும் ஒற்றுமையுடன் நின்று தமிழினம் முறியடிக்க வேண்டும்.

செந்தமிழன் சீமான்

முந்தைய செய்திதிருமங்கலம் ஒன்றிய கிளை திறப்பு மற்றும் கலந்தாய்வுக்கூட்டம்
அடுத்த செய்தி“காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான உரிமை”மக்கள் மன்றத்தில் விளக்கிட பரப்புரை நடைபயணம்,பொதுக்கூட்டம்.