“மதிப்பெண் கூடுதலாக பெற தமிழ் மொழியை புறக்கணிக்கும் மாணவர்கள்” தமிழக அரசு தடுத்த நிறுத்த வேண்டும்

29

மதிப்பெண் கூடுதலாக பெற தமிழ் மொழியை புறக்கணிக்கும் மாணவர்கள்: தமிழக அரசு தடுத்த நிறுத்த நாம் தமிழர் கட்சி கோரிக்கை  

தமிழ்நாட்டில் மேனிலைப் பள்ளிகளில் (பிளஸ் 2) இரண்டாவது மொழிப் பாடமான தமிழை புறக்கணித்துவிட்டு பிரெஞ்ச், ஜெர்மன், சமஸ்கிருதம் போன்ற மொழிகளை தேர்வு செய்து படிக்கும் நிலை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. 

தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் இப்படி தமிழ் மொழியை படிப்பதை தவிர்ப்பது திட்டமிட்டு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் பள்ளி பாடத் திட்டத்தில் முதல் மொழியாக ஆங்கிலமும், இரண்டாவது மொழிப் பாடமாக தமிழும் இருந்து வருகிறது. தமிழ் மொழியில் அதிக மதிப்பெண் பெற முடியாது என்கிற காரணத்தைக் காட்டி, தமிழுக்கு பதிலாக சமஸ்கிருதம், பிரஞ்ச், ஜெர்மன் ஆகிய ஏதாவது ஒரு அந்நிய மொழியை தேர்வு செய்து படித்துவிட்டு தேர்வு எழுதுகிறார்கள். மெட்ரிக்குலோஷன் பாடத்திட்டம் கடைபிடிக்கப்படும் பள்ளிகளில் இரண்டாவது மொழிப் பாடமாக இருக்கும் தமிழுக்கு பதிலாக அயல் மொழிகளை படித்து தேர்வு எழுதுவது ஊக்குவிக்கப்படுகிறது. 

சமஸ்கிருதம், பிரெஞ்ச், ஜெர்மனி போன்ற மொழிகள் படிக்கும்போது, அதற்கான பாடத் திட்டம் மிக எளியதாக (எலிமெண்ட்ரி லெவல்) தயாரிக்கப்பட்டுள்ளதால், அரசு நடத்தும் மேனிலைத் தேர்வில் அதிக மதிப்பெண்களை அதாவது 200க்கு 199 என்றெல்லாம் பெறுவது சுலபமானது என்பதனால் பல மாணாக்கர்கள் இப்படி அயல் மொழியை தேர்வு செய்து படிக்கிறார்கள். ஆனால் பிளஸ் 2 வகுப்பிற்கான தமிழ் மொழி பாடத் திட்டம் உயர்ந்த நிலையில் தயாரிக்கப்பட்டுள்ளதால், அதில் தங்களால் 200க்கு 160 மதிப்பெண் கூட பெற முடியாது என்று அந்த மாணவர்களும் கருதுகின்றனர். தமிழ் மொழி தொடக்கப்பள்ளியில் இருந்து கற்றுவரும் மாணவர்களுக்கு தமிழக அரசு பாடத் திட்டம் எந்த விதத்திலும் கடினமானதாக இல்லை. ஆனால், பிற மாநிலங்களில் சென்று தங்களை பட்டப் படிப்பை தொடர நினைக்கும் நகர வாழ், மேல் தட்டு வீட்டுப் பிள்ளைகள் அயல் மொழிப் பாடங்களை எடுத்து அதிக மதிப்பெண் பெற இப்படியான ஒரு வழியை கடைபிடிக்கிறார்கள்.  

இப்படி ஒரு நிலையை தமிழக அரசு தடுத்து நிறுத்தாவிட்டால், நாளையடைவில், தமிழ் மொழியை படித்து தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து, தமிழ் மண்ணிலேயே தமிழ் மொழி புறக்கணிக்கப்படும் சூழல் உருவாகும் . எனவே, இதில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தமிழை புறக்கணிக்கும் நிலையை தடுத்திட வேண்டும். 

இதில் தமிழக அரசு கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கிய விடயமும் உள்ளது. சமஸ்கிருதம், பிரெஞ்ச் போன்ற அயல் மொழிகளை கற்பிக்கக்கூடிய ஆசிரியர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக உள்ள நிலையில், இம்மொழிகளில் தேர்வு எழுதும் மாணவர்களின் விடைத்தாள்கள் இவர்களிடமே திருத்துவதற்கு வருகிறது. அப்போது இந்த ஆசிரியர்கள் தங்களக்குள் பேசி மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்களை வாரி வழங்குவதும் தெரியவந்துள்ளது.

இப்படி மதிப்பெண்களை கூட்டிப் போடும் ஒரு இரகசியத் திட்டம் 90களில் மத்திய கல்வி பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போடப்பட்டத்தை தமிழக முதல்வர் நன்கு அறிவார். பொறியியல், மருத்துவ படிப்புகளில் சேர அது அவர்களுக்கு பெரிதும் உதவியது. தமிழக அரசும், தமிழின உணர்வு அமைப்புகளும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அந்த சிபிஎஸ்சி குட்டை உடைத்தன என்பதை நினைவூட்டுகிறோம். 

இப்பிரச்சனையில் தாங்கள் விரும்பும் மொழியை தேர்வு செய்து படிக்கும் உரிமை தங்களுக்கு உள்ளது என்று பெற்றோர்கள் கூறுவார்களேயானால், தமிழ் மொழிக்கான மேனிலை பாடத் திட்டத்திற்கு இணையான பாடத் திட்டத்தை அயல் மொழிகளுக்கு வகுக்குமாறும், அதன் அடிப்படையில் தேர்வுகள் அம்மொழிகளில் இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிடலாம். பிற மொழியை படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம் என்கிற நிலையை உடனடியாக தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும். 

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திவிழுப்புரம் கூட்டத்திற்கு சென்ற செந்தமிழன் சீமான் கைது
அடுத்த செய்திமதுரை மாவட்டம் சிலைமலைபட்டியில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்-27.07.2013