தெலுங்கானா செழுமையுடன் சிறக்க வாழ்த்துகள்-செந்தமிழன் சீமான்

44

தெலுங்கானா செழுமையுடன் சிறக்க வாழ்த்துகள்:

ஆந்திர மாநிலத்தில் கனிம வளமும், நீர் வளமும் அதிகமாக இருந்தும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதியாக இருந்த தெலுங்கானா பகுதியை, அப்பகுதி மக்களின் ஏகோபித்த கோரிக்கை ஏற்று தனி மாநிலமாக உருவாக்க காங்கிரஸ் கட்சி ஒப்புக்கொண்டிருப்பது வரவேற்கத்தக்க முடிவாகும்.

1956இல் மொழி வழி இனங்களின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அந்த மாநில மக்களின் மொழி, இன அடையாளங்கள், பண்பாடு ஆகியன காப்பாற்றப்பட வேண்டும், அம்மாநிலத்திற்குட்பட்ட பகுதிகள் பொருளாதார மேம்பாடு பெற தனி மாநில அமைப்பு அவசியம் என்கிற அடிப்படையில்தான் இந்தியாவில் மொழி வழி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. ஆந்திரத்தைப் பொறுத்தவரை, விசால ஆந்திரா என்ற முழக்கத்தை முன்வைத்துப் போராடிய தெலுங்கானா போராட்டமே ஆந்திரா என்கிற மாநிலம் அமையக் காரணமானது. ஆனால், கனிம, நீர் வளங்கள் கொண்டிருந்த தங்களுடைய பகுதி ஆந்திர ஆட்சி, அரசு நிர்வாகத்தில் புறக்கணிக்கப்பட்டு வருவதால், ஆந்திரத்தின் வறுமைப் பகுதியாக தெலுங்கானா இருப்பதாக கூறியே, தெலுங்கானா தனி மாநிலப் போராட்டம் நடந்தது. 

இந்தியாவிலுள்ள பொருளாதார ரீதியில் பிற்பட்ட பகுதிகளை பற்றி ஆய்வு செய்த மத்திய அரசுக் குழு, 2009-10ஆம் ஆண்டுகளில் அளித்த அறிக்கையின்படி, ஆந்திரத்தின் 13 மாவட்டங்கள் பின்தங்கிய மாவட்டங்களாக இருந்தது. அதில் பத்து மாவட்டங்கள் தெலுங்கானா பகுதிக்கு உட்பட்டவையாகும். அந்த அடிப்படையில்தான் ஹைதராபாத், அடிலாபாத், மேடக், கம்மம், கரீம் நகர், மெஹபூப் நகர், நல்கொண்டா, நிசாமாபாத், ரங்காரெட்டி, வாரங்கல் ஆகிய 10 மாவட்டங்களும் சேர்ந்த தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. தெலுங்கானா தவிர்த்த ஆந்திர மாநிலத்திற்கு புதிதாக ஒரு தலைநகர் உருவாக்கப்படும்வரை ஹைதராபாத்தை இரு மாநிலங்களுக்குமான பொதுத் தலைநகராக்க செய்யப்பட்டிருக்கும் முடிவும் வரவேற்கத்தக்கதே. தெலுங்கானாவின் தலைநகராக ஹைதராபாத் இருக்கும் என்பது ஏற்கப்பட்டிருப்பது, ஆந்திராவின் இதர பகுதி மக்களுக்கு ஒரு ஏமாற்றமானதுதான் என்றாலும், ஹைதராபாத் தெலுங்கானாவின் மையப்பகுதியில் உள்ளதால், ஆந்திரத்திற்கென்று ஒரு தனித்த தலைநகர் உருவாக்கப்படுவதே நல்லதாகும்.

தெலுங்கானா உருவாக்கத்தை எதிர்க்கும் ஆந்திர அரசியல் கட்சிகள் தங்கள் எதிர்ப்பை கைவிட்டு, தெலுங்கானாவுடன் சகோதர மனப்பாங்குடன் எப்போதும் போல் செயல்பட வேண்டும். தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்கான நியாயம் எப்போதோ ஏற்கப்பட்டுவிட்டது. ஆனால் அதனை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் பல உயிர்களைக் குடித்துவிட்டது. இதற்குமேலும் அந்த நிலை தொடர ஆந்திர, தெலுங்கானா மக்களும் அரசியல் கட்சிகளும் அனுமதிக்காமல், ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வாழ்த்தி விரும்பி கேட்டுக்கொள்கிறது. 

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்