இடிந்தகரை மக்கள் போராட்டமே இறுதி வெற்றி பெறும்

29

இடிந்தகரை மக்கள் போராட்டமே இறுதி வெற்றி பெறும்:

கூடங்குளத்தில் நிறுவப்பட்டு, தற்போது இயங்கத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள அணு உலைத் தொடர்பாக இடிந்தகரையில் 700 நாட்களுக்கும் மேலாக மக்கள் நடந்திவரும் போராட்டத்தில் எழுப்பப்பட்ட ஐயங்களுக்கு உறுதியான பதிலை இந்திய மத்திய அரசும், அணு சக்தி ஆணையமும் அளிக்காதது கண்டனத்திற்குரியதாகும். 

உலக அளவில் அணு உலைகளும், அது சார்ந்த தொழில்நுட்பமும் பாதுகாப்பான நிலையை எட்டவில்லை என்ற கருத்து உறுதியாகி நிலைபெற்றுள்ள நிலையில், அதன் ஆபத்தை எடுத்துக்கூறி, அது தங்கள் வாழ்வாதாரத்தையும், எதிர்காலத்தையும் இருளாக்கிவிடும் என்று கூறி இடிந்தகரை மக்கள் நடத்திவரும் போராட்டம் அறிவியல்பூர்வமான எதிர்வினையாகும்.

இடிந்தகரை மக்கள் போராட்டத்தை எத்தனையோ வகையில் இந்திய மத்திய அரசு களங்கப்படுத்த முயன்றது. அந்த மக்களின் போராட்டம் அந்நிய நாட்டுப் பணத்தில் தூண்டப்படுவதாக ஆதாரமின்றி குற்றம் சுமத்தியது. இப்படியான பரப்புரைகள் அனைத்தும் தோல்வியைத் தழுவியுள்ளது. எந்த விதமான அரசியல் உள்நோக்கமும், சுயநல எதிர்ப்பார்ப்போ இன்றி, இன்றளவிலும் உறுதியாக நடைபெற்றுவரும் மக்கள் போராட்டம், தங்களது வாழ்வுரிமையை நிலைநாட்டும் ஒற்றை அடிப்படையைக் கொண்ட நியாயமான ஜனநாயக வழிப் போராட்டமாகும்.

 
கூடங்குளத்தில் நிறுவப்பட்டுவரும் இரஷ்ய நாட்டு அணு உலைகள் தொடர்பாக அம்மக்கள் எழுப்பிய அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு இதுவரை மத்திய அரசோ அல்லது இந்திய அணு சக்தி ஆணையமோ தெளிவான பதிலைத் தரவில்லை. இது இந்தியா என்கிற ஜனநாயக நாட்டின் மாண்பை அவமதிக்கும் போக்காகும். 

கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகளை அமைத்திடும் முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதுபோலவே, பிரான்ஸ் நாட்டின் அரேவா நிறுவனத்திடமிருந்து இதுவரை உலகில் எங்கும் சோதிக்கப்படாத ஈரோ அணு உலைகளை வாங்கி நிறுவ தீவிரம் காட்டுகிறது. ஆந்திர மாநிலம் கொவ்வாடாவில் 4 அணு உலைகளை நிறுவுவதற்கான இடத்தை கையகப்படுத்தும் பணியில் வேகம் காட்டுகிறது. ஆனால், இந்த அணு உலைகள் பாதுகாப்பானவையா என்கிற கேள்விகளுக்கு மட்டும் பதில் கூற மறுக்கிறது மத்திய அரசு. 

இரஷ்யாவி்ன் ஆட்டம்ஸ்ட்ராய் நிறுவனமும், இந்தியாவில் பல அணு உலைகளை விற்று, நிறுவத் துடிக்கும் அமெரிக்காவின் வெஸ்டிங் ஹவுஸ், ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனங்களும் இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றிய அணு உலை விபத்து காப்பீடு சட்டத்தை ஏற்க மறுப்பது ஏன்? இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் அணு உலைகள் பாதுகாப்பானவை என்றால், இந்தியாவின் காப்பீடு சட்டத்தை அவைகள் ஏற்கத் தயங்குவதற்கான காரணம் என்ன? இதற்கான பதிலை சொல்லாத மத்திய அரசு, அமெரிக்க நிறுவனங்கள் துணிந்துஅணு உலைகளை விற்பதற்கு அமெரிக்க அரசுப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. 

இந்தியாவை விட தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் கண்டுள்ள தென் கொரியா, தனது நாட்டில் இயங்கிவந்த 3 அணு மின் உலைகளை மூடிவிட முடிவு செய்திருக்கிறது. அணு உலைகளைத் தயாரிக்கும் தொழில்நுட்பத் திறன் கொண்ட ஜப்பான் இதற்கு மேல் புதிதாக அணு மின் நிலையங்களை திறப்பதில்லை என்று அறிவித்துவிட்டது. உலகின் தொழில்நுட்ப, ஆராய்ச்சி முன்னோடியாகத் திகழும் ஜெர்மனி சூரிய ஒளியைக் கொண்டு நாள் ஒன்றிற்கு 6 இலட்சம் மெகா வாட் மின்சாரத்தை தயாரித்து சாதினை புரிந்து, இதுவே எமது எதிர்காலத்திற்கான மின் தொழில்நுட்பம் என்றும் அறிவித்துவிட்டது. இப்படி தொழில்நுட்ப ரீதியில் முன்னேறியுள்ள நாடுகள் எல்லாம் ஆபத்து நிறைந்த அணு தொழில்நுட்பத்தை புறக்கணித்து வரும் நிலையில், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மட்டும், அணு உலைகளை வாங்கிக் குவிக்க தீவிரம் காட்டுவது ஏன்? 

மின்சாரம் தயாரிக்க சூரிய ஒளி மட்டுமின்றி, காற்றாலை உள்ளிட்ட மேலும் பல தொழில்நுட்பங்கள் நம் நாட்டின் கைவசம் இருந்தும், பல இலட்சம் கோடிகளை கொட்டி அணு உலைகளை வாங்குவதில் மன்மோகன் அரசு தீவிரம் காட்டுவது, இந்திய மக்களின் நலனை விட, அது மேற்குலக நாடுகளின் பெரு நிறுவனங்களுக்கு தீனி போடுவதற்கே முக்கியத்துவம் அளிப்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. 

உலகம் கண்ட தொழில்நுட்பங்களிலேயே மிக ஆபத்தான தொழில்நுட்பமாக கருதப்படும் அணு சக்தி, தங்களின் வாழ்விற்கும், வளத்திற்கும் எதிரானது என்பதற்காக இடிந்தகரை மக்கள் நடத்திவரும் போராட்டம் இந்திய மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதன் மூலமும், அவர்களின் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்வதாலோ உறுதியான அந்த மக்கள் போராட்டம் தோற்றுவிடாது. மாறாக, அணு உலைகளுக்கு எதிரான இடிந்தகரை மக்கள் போராட்டமே இறுதி வெற்றி பெரும். அதற்கு நாம் தமிழர் கட்சி இறுதிவரை உறுதுணையாக இருக்கும். 

அணு உலைகளின் ஆபத்தை விளக்கும் துண்டறிக்கை பரப்புரையை தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊர்களிலும் நாம் தமிழர் கட்சி மேற்கொள்ளும். மக்களுக்காகத்தான் மின்சாரமே தவிர, அணு உலைகளுக்காக மக்கள் அல்ல என்ற முழக்கத்தை முன்வைத்து போராடுவோம்.

 செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்