அரசு போக்குவரத்து பேருந்துகளின் புறக்கணிப்பே விபத்திற்குக் காரணம்

16

அரசு போக்குவரத்து பேருந்துகளின் புறக்கணிப்பே விபத்திற்குக் காரணம்: நாம் தமிழர் கட்சி 

புதுக்கோட்டை மாவட்டம் வல்லநாடு அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்றுக்கொண்டிருந்த வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 9 மாணவர்களும், வாகன ஓட்டுனரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்த விபத்தில் பலியான மாணவர்கள் அனைவரும் 14 வயதிற்கும் அதிகமானவர்கள், அனைவரும் 10ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் என்பதை அறியும்போது நெஞ்சம் பதைக்கிறது. படித்து முடித்து தங்களின் குடும்பத்தைக் காப்பாற்றுவான் என்ற நிலையில் இருக்கும் மாணவர்கள் இப்படி உயரிழந்திருப்பது அந்த குடும்பங்களுக்கு பெரும் துயரமான நிகழ்வாகும். மாணவர்களை இப்படி அகாலமான மரணத்திற்கு பரிகொடுத்துத் தவிக்கிற குடும்பங்களுக்கு நாம் தமிழர் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பதும், யாருடைய பிழையால் ஏற்பட்டது என்பதும் புலனாய்வின் மூலம் அறியப்பட வேண்டிய விடயம் என்றாலும், இதில் ஆராயத்தக்க விடயம், ஒரு பால் வண்டியை நிறுத்தி, அதில் ஏறிச் சென்று பள்ளியை அடைய மாணவர்கள் முடிவெடுத்தது ஏன்? என்பதே.

பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தமிழக அரசு இலவச பேருந்து பயண அட்டைகளை (பஸ் பாஸ்) அளித்துள்ளது. ஆனால், எங்கெல்லாம் மாணவர்கள் அரசு பேருந்துக்காக திரண்டு நிற்கின்றனரோ அங்கு நிறுத்தாமல் அரசு பேருந்துகள் சென்றுவிடுகின்றன. அப்படிப்பட்ட சூழலில்தான் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல ஷேர் ஆட்டோக்களிலும், இப்படிப்பட்ட வாகனங்களிலும் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இன்று விபத்தில் பலியான மாணவர்கள் அனைவரும் விஜயரகுநாத புரம் கிராமத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் கைக்குறிச்சி எனுமிடத்தில் பேருந்துக்காக காத்து நின்றபோது, நீண்ட நேரமாக பேருந்து வராத காரணத்தினால்தான், அவ்வழியே சென்ற டாடா ஏஸ் எனும் சரக்கு வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளனர். அதுதான் விபத்திற்குள்ளாகி இந்த அளவிற்கு பெரும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆக, பள்ளி நேரத்தில் பேருந்து வராததும், பேருந்து இலவச பயண அட்டை வைத்துள்ள மாணவர்கள் நிற்கும் நிறுத்தங்களில் பேருந்து நிற்காமல் செல்வதும்தான் இந்த விபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அரசு அளிக்கும் ஒரு நலத்திட்டத்தை அரசு நிறுவனம் ஒன்றே மதிக்காமல் புறக்கணிக்கும் நிர்வாக சீர்கேட்டை என்னென்று சொல்வது?
இதற்கு மேலாவது, இப்படி இலவச பயண அட்டையுடன் காத்துக்கொண்டிருக்கும் மாணவர்களை புறக்கணிக்காமல் ஏற்றிச் செல்லுமாறு அரசு போக்குவரத்து பேருந்துகளுக்கு உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக ஏராளமான புகார்கள் அனுப்பப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே தமிழக அரசு இப்பிரச்சனையில் ஆழந்த கவனம் செலுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

 

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திஈழத் தமிழர்களை வதைக்கும் க்யூ பிரிவின் அராஜகத்தை தடுத்து நிறுத்த மக்கள் சக்தியை திரட்டுவோம்
அடுத்த செய்திமாணவர் பாசறையின் மாவட்ட, மாநில பொறுப்பாளர்களுக்கான செயல்வீரர்கள் கூட்டம்