குவைத்தில் இருந்து தமிழர்கள் கட்டாய வெளியேற்றத்தை தடுத்து நிறுத்தவேண்டும்.

56

குவைத்தில் இருந்து தமிழர்கள் கட்டாய வெளியேற்றத்தை தடுத்து நிறுத்துக

சவுதி அரேபிய அரசு நித்தாகாத் என்கிற ஒரு அவசர சட்டத்தைக் கொண்டு வந்து அந்நாட்டில் பணியாற்றச் சென்ற அயல் நாட்டவர்களை, குறிப்பாக இந்தியர்களை வெளியேற்றி வருகின்ற நிலையில், அறிவிக்கப்படாத ஒரு அவசர நிலையை உருவாக்கியுள்ள குவைத் அரசு, அந்நாட்டில் பணியாற்றும் இந்தியர்களை சட்டத்திற்குப் புறம்பாக வெளியேற்றி வருகிறது.

குவைத் அரசின் இந்த நடவடிக்கையால் அங்கு பணி புரிந்துவரும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் உட்பட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குவைத்தில் பணியாற்றிவரும் சட்டப்பூர்வமான விசா பெற்றுச் சென்ற இந்தியர்கள் அனைவரும், தங்களுக்கு அளிக்கப்பட்ட விசாவினை தவறாக பயன்படுத்தி பணி புரிந்து வருவதாக முழுமையான விசாரணையின்றி வெளியேற்றி வருகிறது குவைத் காவல் துறை. குவைத்தில் பணியாற்றச் சென்ற இந்தியர்கள் அனைவரும், காதிம் விசா அல்லது சூன் விசா என்கிற இரண்டு விதமான விசாக்களில் ஒன்றை பெற்றுச் சென்றுதான் அங்கு பணியாற்றி வருகின்றனர்.

இதில் காதிம் விசா பெற்றுச் சென்றவர்களே பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். காதிம் விசாவில் ஒரு அரபிக்கு வீட்டு ஓட்டுனராகவே அல்லது பணிப் பெண்ணாகவோ ஏதேனும் ஒரு வேலைக்கு வந்து அந்த அரபின் அனுமதியுடன் தனாசில் (வெளி வேலை செய்ய அனுமதி) பெற்று அடுத்த அரபியிடம் பணம் கொடுத்து விஸா வாங்கி வெளியில் வேலை பார்க்கும் அனைத்து மக்களையும் பிடித்து குவைத் அரசு நாட்டிற்கு வெளியேற்றி வருகிறது.

அதே போன்று நம் நாட்டு பணம் ஒன்றரை லட்சம் பணம் பெற்று நேரடியாக முகவர் மூலம் காதிம் விஸா பெற்று வந்தவர்களை, ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அந்த அரபி, “நீ என்னிடம் வேலை செய்ய வேண்டாம், யாரிடம் வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம்” என்று கூறி விஸா எடுத்து வந்து வேலை செய்யும் மக்களையும், முழுமையான விசாரணைக்கு உட்படுத்தாமல் குவைத் காவல்துறை ஈவு இரக்கமும் இன்றிப் பிடித்து நாட்டை விட்டு வெளியேற்றி வருகிறது.

இரண்டாவதாக, சூன் விசா பெற்று ஒரு நிறுவனத்தில் பணி புரிய வந்தவர்கள், அந்த நிறுவனத்தின் அனுமதியுடன் வேறு நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்கள். இவர்களையும் தேடிப் பிடித்து முறையான விசாரணைக்கு உட்படுத்தாமல் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றுகிறது. இதனையெல்லாம் தடுத்து நிறுத்த குவைத்திலுள்ள இந்திய தூதரம் தவறியுள்ளது. நேற்று முன்தினம் 300க்கும் அதிகமான மக்கள் இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட்டு, இப்படிப்பட்ட சட்டத்திற்குப் புறம்பான குவைத் அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டிருக்கின்றனர். இப்பிரச்சனையில் தங்களால் எந்த அளவிற்கு பயனுள்ள வகையில் உதவிட முடியும் என்று தெரியவில்லை என்றும், குவைத் அரசுத் துறையிடம் இதுபற்றி பேசுவதாகவும் இந்தியத் தூதர் உறுதியளித்துள்ளார்.

இதில் இன்னொரு கொடுமை என்னெவனில், பணியாளர்களின் குழந்தைகளை பள்ளிக்கு விடச்சென்ற பெண்களையும் சாலையிலேயே நிறுத்தி பிடித்து வானூர்தி நிலையத்திற்கு கொண்டு வந்து வெளியேற்றுகின்றனர். குவைத் அரசு மேற்கொள்ளும் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் அந்நாட்டுச் சட்டத்திற்கு முரணானவையாகும். குவைத்தில் சட்டத்திற்குப் புறம்பாக தங்கி எவரும் பணியாற்றவில்லை. ஆனால் அங்கு, அவர்களுக்கு பணி வழங்கும் அரபிகளும், நிறுவனங்களும் நீண்ட கலமாக கடைபிடித்துவரும் நடைமுறையே – அது அந்நாட்டு அரசுக்குத் தெரிந்திருந்தும் – திடீரென இப்படிப்பட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இது முழுக்க, முழுக்க அந்நாட்டின் உள்நாட்டு அரசியல் சம்பந்தப்பட்டது என்றும், இதனால் பாதிக்கப்படும் இந்தியர்கள் பெரும் பணம் கொடுத்து அந்நாட்டுக்கு பணியாற்றச் சென்றவர்களே என்றும் குமுறுகின்றனர்.

நமது நாட்டின் பணியாளர்கள், எந்த அரபி அல்லது நிறுவனத்தின் விசா பெற்று அந்நாட்டிற்கு பணியாற்றச் சென்றனரோ, அவர்களிடமிருந்து உரிய இழப்பீட்டை அளித்து, உரிய கால அவகாசம் அளித்து திருப்பி அனுப்ப வேண்டும் என்பதே அங்கு பணியாற்றிவரும் இந்தியர்களின் கோரிக்கையாகும். நியாயமான இந்த கோரிக்கையை இந்திய அரசு, குவைத் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் நிறைவேற்றிட முடியும். குவைத்தில் வாழும் இந்தியர்களைக் காக்க உடனடியாக இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்திட தமிழக முதல்வர் அழுத்தம் தர வேண்டும் என்பதே அங்கு சிக்கலில் உள்ள தமிழர்களின் கோரிக்கையாகும்.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திசீமான் & யாசின் மாலிக் உரை -மே 18 -2013 -3
அடுத்த செய்தியாசின் மாலிக் உரை -மே 18 -2013 -1