தமிழர்களின் தேர்தல் வெற்றியும் சிங்கள இனவாத பூதமும்- பெ.மணியரசன்!

30

ஈழத் தமிழர்களின் தாயக மாநிலங்களில் ஒன்றான வடக்கு மாநில ஆட்சி மன்றத்திற்கு 21.9.2013 அன்று நடந்த 38 இடங்களுக்கான தேர்தலில் முப்பது இடங்களில் பெரும் வாக்கு வேறுபாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஏழு இடங்களில் இராசபட்சேயின் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை முஸ்லிம் காங்கிரசு ஓர் இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மொத்தம் செல்லுபடியான 4 43 394 வாக்குகளில் தமிழ்த் தேசியக் கூட்டணி 3 53 595 (80%) வாக்குகளும் இராசபட்சே கூட்டணி 82 838 (18.38%) வாக்குகளும் முஸ்லிம் காங்கிரசு 6 761 வாக்குகளும் பெற்றுள்ளன.

இந்த மிகப்பெரும் வெற்றி தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு நேர் வகையாகக் கிடைத்தது அல்ல. ‘1½ இலட்சம் மக்களை இனப்படுகொலை செய்து அதன் பின் தமிழர் தாயகத்தை இராணுவ வளையத்துக்குள் வைத்து அவர்களின் குடிமை உரிமைகளைப் பறித்துள்ள இராசபட்சே ஆட்சியை நாங்கள் ஏற்கவில்லை’ என்பதை அழுத்தந் திருத்தமாக உலகுக்குத் தெரிவிக்கும் ஒரு வாய்ப்பாக இத் தேர்தலைத் தமிழீழ மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.
சாலை வசதி மின்விளக்கு வசதி போன்ற உள் கட்டுமான நிறை வேற்றங்களைக் காட்டி வாக்குக் கேட்டது இராசபட்சே அரசு. தாயக விடுதலைக்காக இலட்சக்கணக்கான உறவுகளை இழந்து 90 ஆயிரம் தமிழ்ப்பெண்கள் விதவைகளாக்கப்பட்டு பல்லாயிரம் குழந்தைகள் அனாதைகள் ஆக்கப்பட்டு– பல்லாயிரக்கணக்கானோர் ஊனமுற்றோர் ஆக்கப்பட்டு- இரணுவத்தால் சூழப்பட்ட பணயக் கைதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்மக்கள் இக்கொடுமைகளை இழைத்த இராசபட்சே கும்பலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும் தாயக உரிமைக்குத்தான் முன்னுரிமை தருவோமே தவிர சில உள்கட்டுமான வேலைப்பாடுகளுக்கு அல்ல என்பதை உணர்த்தும் வகையிலும் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.

ஈழத் தமிழர்களை யாரும் ஏமாற்ற முடியாது. சம்பந்தர்-விக்னேசுவரன் அரசியல் தலைமை உண்மையான தாயக உரிமை மீட்பிற்குத் தன்னை ஒப்படைத்துக் கொண்ட தலைமை அன்று என்பது ஈழத்தமிழர்களுக்குத் தெரியும்.
கட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்பாக இருந்த போதிலும் இதைப் பயன்படுத்திப் பன்னாட்டு சமூகத்திற்குத் தங்களின் மன உணர்வையும் – தேவையையும் சனநாயக வழியில் தெளிவாக வெளிப்படுத்தி விட்டார்கள் தமிழ் ஈழ மக்கள்.அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.

ஈழத்தமிழர்களின் இந்தத் தீர்ப்பை இந்தியா மதிக்குமா? கொலைகார இராசபட்சே அரசுடன் கூடிக் குலாவுவதை நிறுத்திக் கொண்டு 1987 – இல் இலங்கையுடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள குறைந்த அளவிலான மாநில உரிமைகளையாவது தமிழ்த் தேசியக் கூட்டணி அரசுக்குப் பெற்றுத் தருமா? வடக்கு – கிழக்கு மாநிலங்களிலிருந்து முற்றாக இராணுவத்தை வெளியேற்ற இந்தியா அழுத்தம் கொடுக்குமா? ஈழத்தமிழர்களுக்குக் குடிமை உரிமைகள் கிடைக்க முயலுமா என்பவை நம்முன் உள்ள வினாக்கள்.

விடுதலைப் புலிகள் தமிழ் ஈழ மக்களை அச்சுறுத்திப் பணிய வைத்திருந்த பயங்கரவாத அமைப்பு என்ற மாயையிலிருந்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் வெளிவருமா? மக்களின் உண்மையான தலைமைதான் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற மெய்மையை இப்போதாவது உணருமா? இராசபட்சே இராணுவக்கும்பல் நடத்திய இன அழிப்புக்குற்றங்களை விசாரிக்கப் பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் அமைக்குமா? இவையெல்லாம் விடையிறுக்கப்பட வேண்டிய வினாக்கள்.

1987 – இல் போடப்பட்ட இராஜீவ் காந்தி- செயவர்த்தனா ஒப்பந்தம் தமிழர்களுக்கு உரிமைகளை வாரி வழங்கும் அமுதசுரபி என்று வர்ணிக்கப்பட்டு – விடுதலைப் புலிகள் மீது திணிக்கப்பட்டது. அப்போது 4.8.1987 அன்று தமிழீழத் தேசியத் தலைவர் பிராபகரன் அவர்கள் சுதுமலைக் கூட்டத்தில் கூறிய சொற்கள் நினைவுக்கு வருகின்றன:

‘இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள கொஞ்சநஞ்ச உரிமைகளையும் சிங்கள இனவாத பூதம் விழுங்கிவிடும்.’அதே சிங்கள இனவாத பூதம் தான் இப்போதும் இலங்கை அரசில் உள்ளது.

முந்தைய செய்தி35 தமிழிக மீனவர்கள் விடுதலை!
அடுத்த செய்திஜெனீவாவிலிருந்து பெல்ஜியம் வரை ஈருருளிப் பயணம்.