ஈழத் தமிழர்களை வதைக்கும் க்யூ பிரிவின் அராஜகத்தை தடுத்து நிறுத்த மக்கள் சக்தியை திரட்டுவோம்: நாம் தமிழர் கட்சி
பூந்தமல்லி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் 7 பேரை, திருச்சியில் உள்ள சிறப்பு முகாமிற்கு கொண்டு செல்வதாகக் கூறி, அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளது தமிழக காவல்துறையின் கியூ பிரிவு.
தமிழ்நாட்டிற்கு அகதிகளாய் வந்தவர்களை ஐயத்தின் அடிப்படையில் கைது செய்வது மட்டுமல்லாமல், அவர்களை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தாமல், அயல் நாட்டவர் சட்டத்தின் கீழ் நீண்ட காலம் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் இயங்கிவரும் தனிமைச் சிறைகளில் அடைத்து அலைக்கழிக்கிறது கியூ பிரிவு. அவர்களை விடுவிக்குமாறு எப்போதெல்லாம் நாம் தமிழர் கட்சியும், மற்ற தமிழர் அமைப்புகளும் போராடுகின்றனவோ, அப்போதெல்லாம் இரண்டு, மூன்று பேரை விடுவிப்பதும், அடுத்த சில நாட்களிலேயே மேலும் நான்கைந்து ஈழத் தமிழ் அகதிகளை கொண்டு வந்து அதே சிறப்பு முகாமில் அடைப்பது வாடிக்கையாகிவிட்டது.
தமிழக காவல்துறையின் கியூ பிரிவு மேற்கொண்டுவரும் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்திற்குப் புறம்பானவை என்றும், எவ்வித ஆதாரமும் இன்றி ஈழத் தமிழ் சொந்தங்கள் இப்படிப்பட்ட சட்டத்திற்கு புறம்பான ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டுகிறார்கள் என்பதையும் தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி பலமுறை எடுத்துச் சொல்லிவிட்டது.
செங்கல்பட்டிலும், பூந்தமல்லியிலும் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் ஈழத் தமிழ் அகதிகளை தடுத்து வைக்கும் தனிமைச் சிறைகளை இழுத்து மூடுங்கள் என்று பல முறை நாம் தமிழர் கட்சி குரல் கொடுத்துள்ளது, பல போராட்டங்களை நடத்தியுள்ளது. ஆனால் இன்று வரை அந்த முகாம்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. அவைகளில் அடைத்து வைக்கபட்டுள்ள ஈழத் தமிழ் சொந்தங்கள் பலரும் தமிழக காவல்துறையின் கியூ பிரிவினரால் மன ரீதியிலான வதைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில்தான், பூந்தமல்லி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்திரகுமார் என்ற ஈழத் தமிழ் அகதியை விடுதலை செய்து, அவரை சாதாரண முகாமி்ற்கு மாற்றுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவில் திட்டமிட்டே ஒரு பிழையை செய்து, அவரை விடுவிக்காமல், மீண்டும் பூந்தமல்லி சிறப்பு முகாமில் கொண்டு வந்து அடைத்துவிட்டது கியூ பிரிவு. தன்னை விடுதலை செய்யுமாறு கோரி கடந்த 15 நாட்களாக தண்ணீரை மட்டுமே குடித்துக்கொண்டு பட்டினிப் போராட்டம் நடத்தி வருகிறார் சந்திரகுமார். செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மற்றொரு ஈழத்து அகதி ஒருவரும் பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் எதற்காக தமிழ்நாட்டில் இந்த தனிமைச் சிறைகள்? என்பதே தமிழக அரசுக்கு நாம் தொடர்ந்து எழுப்பிவரும் கேள்வியாகும். ஈழத் தமிழர் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வரும் தமிழக அரசு, எந்த அடிப்படையில் சட்டத்திற்குப் புறம்பான இந்த தனிமைச் சிறைகளை அனுமதிக்கிறது? பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி, இந்த முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட ஈழத் தமிழ் அகதிகளில் ஒருவராவது இதுநாள் வரை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டதுண்டா? இல்லையே? அப்படியாயின் எதற்காக தமிழ்நாட்டில் வதை முகாம்களாக செயல்படும் சிறப்பு முகாம்கள்?
இந்திய மண்ணில் நேபாள அகதிகளும், வங்க தேச அகதிகளும் சுதந்திரமாக வாழ அனுமதிக்கப்பட்டுள்ளனரே, ஆனால் தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டில் ஈழத் தமிழ் சொந்தங்கள் எதற்காக இப்படி அலைக்கழிக்கப்படுகிறார்கள்? தமிழர்களுக்கு சொந்தமில்லாத நாடுகளில் எல்லாம் அவர்கள் குடியுரிமை பெற்று சுயமரியாதையுடனும், அனைத்து உரிமைகளுடனும் வாழ்கின்றனரே. தமிழ்நாட்டில் ஏன் அவர்கள் அவமானப்படுத்தப்பட வேண்டும்? சித்ரவதைக்கு ஆளாக்கப்பட வேண்டும்? தமிழ்நாட்டைத் தவிர, எந்த நாட்டில் அகதிகளாக வந்தவர்களை அயல்நாட்டினர் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கின்றனர்? தமிழக அரசு பதில் சொல்லட்டும்.
கடந்த ஆட்சியில்தான் ஈழத் தமிழினத்திற்கு சொல்லனா கொடுமைகள் இழைக்கப்பட்டன, அது இந்த ஆட்சியிலும்தான் தொடர்கிறதே. ஜனநாயக வழியில் எத்தனையோ போராட்டங்களை நடத்திவிட்டோம். அதற்கெல்லாம் எந்த மதிப்பும் இல்லை. சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பு கொடுக்கும் தமிழ்நாட்டின் முதல்வர், இப்படி சட்டத்திற்குப் புறம்பாக ஈழத் தமிழ் சொந்தங்கள் அலைக்கழிக்கப்படுவதை எப்படி அனுமதிக்கிறார் என்று புரியவில்லை. இப்பிரச்சனையில் இதுநாள் வரை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கும் முகமாகவே நாம் தமிழர் கட்சி பல போராட்டங்களில் ஈடுபட்டது. இதற்குமேல் இப்பிரச்சனையை தமிழ்நாட்டின் அரசியல் பிரச்சனையாக மக்களிடையே கொண்டு செல்வதைத் தவிர வேறு இல்லை என்கிற முடிவுக்கு வருகிறது.
ஈழத்தில்தான் முள்வேலி முகாம்கள் என்றால், தமிழ்நாட்டிலும் வதை முகாம்களா? எங்கு போவான் ஈழத் தமிழன்? தமிழர்களே சிந்தித்துப் பாருங்கள்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்