விவசாயத்திற்கு 6 மணி நேரமாவது மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்

30

விவசாயத்திற்கு 6 மணி நேரமாவது மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்

சம்பா நெல் விதைப்பின்போது 12 மணி நேரம் வரை மும்முனை மின்சாரம் அளிக்கப்பட்ட காரணத்தால் தஞ்சை தரணியில் சற்றேறக்குறைய 2 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர் காப்பாற்றப்பட்டது. கர்நாடக அரசு காவிரியில் தமிழ்நாட்டிற்குரிய நீரிணை திறந்துவிட மறுத்துவிட்ட நிலையில், மேட்டூரில் அணையில் நீர் இருப்பு மிகவும் குறைந்ததால் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படாத நிலையில், மின் சக்தியை பயன்படுத்தி நீர் இறைத்து செய்யப்பட்ட சம்பா சாகுபடி தமிழ்நாட்டின் நெல் உற்பத்தியை ஓரளவிற்கு ஈடுகட்டியது.
கடந்த மாசி மாத இறுதிவரை தொடர்ந்து 12 மணி நேரத்திற்கு விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுவந்த மும்முனை மின்சாரம் கடந்த ஒன்றரை மாதங்களாக 3 மணி நேரத்திற்கும் குறைவாக மட்டுமே அளிக்கப்படுகிறது. இதற்குமேல் தொடர்ந்து 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் கிடைக்கும் என்று நம்பி, கோடைக்கால குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் இதனால் சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர். நடவு செய்த அளவில் பாதிக்கும் மேல் இப்போது கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், ஒன்றரை இலட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு முழுமையான இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
விதைத்த பயிரை காப்பாற்ற விவசாயிகளில் ஒரு தரப்பிணர் இரு முனை மின்சாரத்தை நீர் இறைக்க பயன்படுத்துகின்றனர். இதனால் காயில் எரிந்துபோவது உள்ளிட்ட பல இழப்புகளும் அவர்களுக்கு ஏற்படுவது மட்டுமின்றி, இரு முனை மின்சாரத்தை பயன்படுத்தி நீர் இரைக்காதீர்கள் என்று மின்வாரியமும் விவசாயிகளை கண்டித்து வருகிறது.
தமிழக அரசு விவசாயிகளின் இந்த நெருக்கடியை கருத்தில் கொண்டு, அடுத்த 50 நாட்களுக்கு தொடர்ந்து 6 மணி நேரமாவது மும்முனை மின்சாரம் வழங்கிட வேண்டும். தமிழ்நாட்டின் மின் உற்பத்தி நிலை தற்போது பாதுகாப்பான நிலையை எட்டியிருப்பதால், முன்னுரிமைத் துறையான விவசாயத்திற்கு அளிக்க வேண்டிய மின் அளவை உயர்த்தியளிக்க வேண்டும்.
இதற்கு மேல் ஒவ்வொரு சாகுபடி காலத்திற்கு முன்னரும், மின் அளிப்பு தொடர்பான யதார்த்த நிலையை தமிழக அரசோ அல்லது மின் வாரியமோ தெளிவாக முன் அறிவிப்பு செய்தால், அடுத்த சாகுபடியை செய்யலாமா, வேண்டாமா என்றும், நெல்ல்லை பயிரிடுவதா அல்லது மாற்றுப் பயிர் சாகுபடியில் இறங்குவதா என்பதை விவசாயிகள் முடிவு செய்துக்கொள்ள வாய்ப்பு ஏற்படும். தஞ்சை, நாகை, திருவாரூர் போன்ற நெல் சாகுபடி மாவட்டங்களின் விவசாயிகளுடன் கலந்தாலோசித்து மாவட்ட நிர்வாகம் இதுபற்றி தமிழக அரசுக்கு தெரிவித்திடல் வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கு இழப்பு ஏதும் ஏற்படாமல் காப்பாற்ற முடியும்.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

முந்தைய செய்திஉலகளாவிய அளவில் தொழிலாளர்களின் உரிமை நிலைநாட்டப்பட்ட நாள் மே தினம்.
அடுத்த செய்திமே 18 இன எழுச்சி பொதுக்கூட்டத் துண்டறிக்கை மற்றும் சுவரொட்டி வடிவங்கள்.